
ராமாயணப் போட்டியில் முதல் பரிசை வென்றவர் முகம்மத் ஜபீர், முகம்மத் பாசித் என்றால் ஆச்சரியம்தானே!
கேரளத்தில் "கர்கிடகம்' மாதத்தை (ஜூலை - ஆகஸ்ட் - தமிழில் ஆடி மாதம்) ராமாயண மாதம் என்பார்கள். இந்துக்களின் வீடுகளில் பெரும்பாலும் ராமாயணம் அதிகம் வாசிக்கப்படும், கேரளத்தின் பிரபல பதிப்பகமான "டிஸி' புக்ஸ், ராமாயணம் குறித்த "விநாடி வினா' போட்டியை ஆன்லைன் வழியில் நடத்தியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முதல் பரிசை வென்றிருப்பவர்கள் முகம்மத் ஜபீர், முகம்மத் பாசித்.
இருவரும் பாசித் கேரளம் வளஞ்சேரி இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள். ராமாயணத்தில் என்ன கேட்டாலும் இவர்களிடத்திலிருந்து உடனுக்குடன் பதில் கிடைக்கும். "அயோத்யா காண்டத்தில் லட்சுமணனின் எகிறும் கோபத்தை ராமர் என்ன சொல்லி தணிக்கிறார்' என்று கேட்டால் அதை பாடிக் காட்டுவதுடன் விளக்கத்தையும் இந்த "இராமாயண ஜோடி' தருகிறார்கள். அந்த அளவுக்கு இராமாயண அறிவு இவர்களிடத்தில் உள்ளது.
முகம்மத் ஜபீரை கேட்டபோது, அவர் கூறியதாவது:
""எங்கள் மதமான இஸ்லாம் மதம் குறித்து கல்லூரியில் படித்து வருகிறோம். எங்கள் பாடத் திட்டத்தில் ராமாயணம் இருக்கிறது. இந்து, புத்த, கிறித்தவ, சீக்கிய, ஜைன மதங்களை பற்றி எங்களுக்கான பாடத் திட்டத்தில் கற்பிக்கின்றனர். இந்தப் பாடத்திட்டத்தில் ஜுடாயிஸம், டாயிசம் (டாயிசம்) மத சித்தாந்தங்களையும் படிக்க வேண்டும்.
இந்தியாவில் பல மதங்கள் உண்டு. அதனால் தனது மதத்தையும் தாண்டி பிற மதங்கள் பற்றித் தெரிந்து கொள்வது பல மதங்கள் உள்ள நாட்டில் அவசியம் என்று நினைத்த எங்கள் கல்லூரி நிர்வாகம் பல மதங்களை பற்றிய பாடங்களைப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. இந்தப் பாடத்தில் படித்து முடித்த சீனியர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பல்கலைக் கழகங்களில் பல்வேறு மதம் குறித்தது ஆராய்ச்சி மாணவர்களாக சேர்ந்துள்ளார்கள். இருவருக்கும் பிடித்தது ராமாயணமும் மகாபாரதமும்.
ராமாயணம் குறித்தும் எங்கள் பாடத் திட்டத்தில் பாடங்கள் உண்டு. தேர்வுகளும் உண்டு. ராமாயணத்தில் ஈர்ப்பு ஏற்பட்டதினால் நூலகத்திலிருந்து "மலையாள ராமாயணம்' புத்தகத்தைப் படித்து வருகிறேன்.
எல்லா மத நூல்களையும் வாசிக்க வேண்டும். அது நாட்டில் மதவாத பிரச்னைகளைக் குறைக்கும். மத வெறுப்பினைக் குறைக்கும். பிற மதத்தினரை மதிக்கும் மனப்பான்மையைக் கற்றுக் கொடுக்கும். எல்லா மதங்களும் அன்பையும் நேசத்தையும் அமைதி சாந்தி சமாதானத்தை மட்டுமே போதிக்கின்றன. ராமாயணம், தந்தை சொல்லை மதிக்க வேண்டும், தம்பிக்காக தியாகம் செய்ய வேண்டும், என்பதை சொல்கிறது. ராமாயணம் குறித்து போட்டி நடக்கிறது என்று கேள்விப்பட்டதுமே நானும் நண்பனும் மனு செய்தோம். போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெற்றோம்'' என்கிறார்.