

ஜெர்மானியர்களுக்கு தமிழின் வட்டார மொழி வளத்தையும், கலை கலாசாரம், பண்பாட்டையும் புதுச்சேரியைச் சேர்ந்த தேசிகன் கற்பித்து வருகிறார். தமிழுக்கும் ஜெர்மானிய தேசத்துக்கும் கலாசார இணைப்புக்கான பாலமாக விளங்கிவரும் இவரை "தமிழ் பரப்பும் தேசிகன்' என்றே அழைக்கின்றனர்.
புதுச்சேரி அருகேயுள்ள கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர் ஹரிகரன் ஆசிரியை மணிமேகலை தம்பதியின் மகன் தேசிகன். மூன்று சகோதரிகளோடு பிறந்தவர். இவர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
இவருடன் ஓர் சந்திப்பு:
ஜெர்மானியர்களுக்குத் தமிழ் கற்றுத் தருவது எப்படி உருவானது?
பட்டம் படித்து முடித்து ஊரில் இருந்தபோதுதான் பழந்தமிழ் ஆய்வில் ஈடுபட்ட ஜெர்மன் ஆய்வாளர் உல்ரிக் நிக்லஸைச் சந்தித்தேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை, ஆய்வுப் பட்டம் பெற்ற அவர், புதுச்சேரி பிரெஞ்சு மொழியியல் மையத்தில் பணியில் சேர்ந்து பழந்தமிழ் இலக்கிய, இலக்கண ஆய்வில் ஈடுபட்டார்.
தமிழக முதல்வர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரால் பாராட்டப் பெற்ற அவர், செம்மொழித் தமிழாய்வுக்கான பல விருதுகளையும் பெற்றவர்.
மதுரையைச் சேர்ந்த புகைப்பட நிபுணர் சரவணனை மணந்த உல்ரிக் நிக்லஸ், புதுச்சேரி கோர்க்காடு பகுதியில் தங்கியபடியே ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாட்டு, தெற்காசிய மொழி ஆய்வு மாணவர்களுக்கு தமிழைக் கற்றுத்தரும் பணியில் ஈடுபடுகிறார். அவருடன் சேர்ந்து தமிழை ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு கற்பிக்கும் பணியில் பல ஆண்டுகளாக நானும் ஈடுபட்டுவருகிறேன்.
தமிழரின் கலாசாரம், பண்பாடுகளையும் வெளிநாட்டவர் அறியும் வகையில் கிராமங்களுக்கும், கலை பண்பாட்டு அடையாளமுள்ள பாரம்பரிய நகர்களுக்கும் ஜெர்மானியர்களை அழைத்துச் சென்றுவருகிறேன்.
உல்ரிக் நிக்லஸின் அன்பைப் பெற்றதால் அவர் தன்னுடைய வளர்ப்பு மகள் வளர்மதியையே எனக்குத் திருமணம் செய்துவைத்தார். தற்போது உல்ரிக் நிக்லஸ் கம்போடியாவில் தங்கியுள்ளார். அதனால் முழுநேரப் பணியாக நான் ஜெர்மனியிலிருந்து வருவோருக்கு தமிழ் கற்பித்து வருகிறேன்.
ஜெர்மானியர்களுக்குத் தமிழ் ஆர்வம் எப்படி இருக்கிறது?
ஜெர்மனியில் உள்ள கொலோன் எனும் இடத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை உள்ளது. அதில் ஆண்டுக்கு 50க்கும் மேற்பட்ட ஜெர்மானியர்கள் தமிழ் கற்கின்றனர். அவர்கள் தமிழர் பண்பாடு, வட்டாரப் பழக்க வழக்கங்களை அறிவதற்காக புதுச்சேரிக்கு வருகின்றனர். ஜெர்மனியில் 20 வயது முதல் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் அதிகம் தமிழை கற்க விரும்புகிறார்கள்.
ஜெர்மனியப் பல்கலைக்கழகத்திலிருந்து வருவோருக்கு வட்டார மொழியை கற்பிப்பதுடன், கிராமப்புற தமிழர் அன்றாட வாழ்வியல் முறை, நாகரிகம், பண்பாடுகளையும் அவர்களே நேரில் பார்த்து அறியும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறேன்.
தமிழர்கள் மீது ஜெர்மானியர்கள் கொண்ட பற்றுதல் என்ன?
ஜெர்மானியர்களோ, தாங்கள் உண்டு, தங்கள் வேலை உண்டு என வாழ்பவர்கள். அவர்கள் பெற்ற பிள்ளையாக இருந்தாலும், ஒரு காரியத்தில் ஈடுபடுவதைப் பார்த்து, ஏன் எதற்கு என கேட்பதையே தவிர்ப்பவர்கள்.
பெற்றோர் காரில் செல்லும்போது பிள்ளைகள் நடந்து செல்வதை வழியில் பார்த்தால், நிறுத்தி காரில் ஏறிக்கொள் எனக் கூறமாட்டார்கள். பிள்ளைகள் விரும்பியே நடந்து செல்கிறார்கள் என நினைத்தபடி கடந்து சென்றுவிடுவார்கள். அப்படிப்பட்ட கலாசாரத்தில் ஊறித்திளைத்த ஜெர்மானியர்கள், தமிழர்கள் சாலையில் முகம் தெரியாதவர் சென்றால் கூட, மறித்து நலம் விசாரித்து உதவும் குணம் உடையவர்களாக இருப்பதையே வியந்து போற்றுகின்றனர்.
ஜெர்மானிய மக்கள் கூடிப் பேசி நேரம் கழிக்கும் பழக்கம் இல்லாதவர்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் வேலை இல்லாத நேரங்களில் கூடிப் பேசி, சிரித்து மகிழும் பழக்கமிருப்பதையும் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.
ஜெர்மானியர்கள் தமிழ் மீது ஆர்வம் காட்டக் காரணமாக இருப்பது நமது குடும்பக் கட்டமைப்புகள்தான். வயதானப் பெற்றோரை பிள்ளைகள் கவனித்துக் கொள்ளுதல், தரையில் அமர்ந்து உணவு அருந்துதல், கோயில்களுக்கு தாங்களாகவே சென்று எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில், ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து விட்டுக்கொடுத்து செல்லுதல் போன்றவற்றைக் கண்டு வியப்பு அடைகின்றனர்.
ஜெர்மானிய மாணவர்கள் சங்கத் தமிழோடு, பாரதி பாடல்கள், திருக்குறள் இறைவழிபாடு, இறை மறுப்புக் கொள்கை என தமிழர்களது அனைத்து வாழ்வியல் நிலைகளையும் அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆகவேதான் ஜெர்மானிய நாட்டின் இளம்தலைமுறையில் பெரும்பாலான ஆய்வு மாணவர்கள் தெற்காசிய மொழி ஆய்வில் தமிழை விரும்பித் தேர்ந்தெடுத்து வருகின்றனர். அப்படி வருவோருக்கு உண்மையான தமிழ் கலாசாரப் பண்பாட்டை அறிவதற்கு உதவும் அணிலைப் போலவே நான் செயல்பட்டு வருகிறேன்.
வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
மேற்கு மொழிகள் நம் புண்ணிய பூமியில் ஓங்கி ஒலிக்கும் நிலை வந்துவிடக்கூடாது. அதனால் தமிழ் ஓரம் கட்டப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தமிழை அன்னிய நாட்டவரும் அறியும் வகையில் அவர்களுக்குக் கற்பித்துவருகிறேன்.
""சென்றிடுவீர் எட்டுத்திக்கும்..கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'' என்றார் மகாகவி. எட்டுத்திக்கிலிருந்து வரும் வெளிநாட்டவருக்கு தமிழ் கலை, பண்பாட்டுச் செல்வங்களை அடையாளப்படுத்தி தமிழை எட்டுத்திக்கும் பரப்பும் பணி தொடரும்.
படங்கள் - கி.ரமேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.