

சின்னச் சின்ன தவறுகள்தானே என்று நினைத்து நாம் செய்யும் செயல்கள் எப்படி வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கிறது' என்பதுதான் ஒன்லைன். ஒரு குற்றம், அதை நிகழ்த்திய குற்றவாளி யார் என்று புலனாய்வு செய்யும் கதையில் முன்னும் பின்னுமாகச் சில சம்பவங்களும், சம்பந்தப்பட்ட மனிதர்களும் பிணைக்கப்படுகின்றனர். பல சுவாரஸ்யமான திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை நாற்காலி நுனியில் அமரவைப்பதோடு, கதையின் முடிச்சு அவிழும்போது வாழ்க்கைக்கான நீதியையும் முன்வைக்கிறது "தீர்க்கதரிசி'. ஏற்கெனவே "வைகை' படத்தை இயக்கிய சுந்தரபாண்டி சின்ன இடைவெளிக்குப் பின் கதை சொல்ல வருகிறார்.
"தீர்க்கதரிசி'.... ரசிகர்களை கவர்ந்திழுக்கும் தலைப்பு....
கடவுளுடைய நோக்கங்களைத் தெரியப்படுத்த அவரால் பயன்படுத்தப்பட்ட நபர்தான் தீர்க்கதரிசி என்று சொல்கிறது பைபிள். தீர்க்கதரிசிகள் கடவுளின் சார்பாக மக்களிடம் பேசினார்கள். பேசுவார்கள் என்கிறது அது. எதிர்காலத்தில் நடக்க இருக்கும் விஷயங்களை மட்டுமல்ல, மக்களின் பிரச்னைகளையும், கடவுளின் கட்டளைகளையும் தீர்ப்புகளையும் கூட தீர்க்கதரிசிகள் அறிவார்கள். அப்படி ஒரு இடத்தில் ஆரம்பமாகும் புள்ளிதான் திரைக்கதை. தன்னை தீர்க்கதரிசியாக நினைத்துக் கொண்ட ஒருவன், சமூகத்தில் நடக்கப் போகிற சம்பவங்களை, குற்றங்களை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவலாக சொல்கிறார். அது காவல்துறைக்கு சவால் என்பதை விட, தலைவலியாகவும் உருவெடுக்கிறது. சில குற்றங்களை பின் தொடரும் காவல்துறை அதை நடக்க விடாமல் முறியடிப்பு செய்கிறது. சில குற்றங்களை ஒன்றுமே செய்ய முடியாத சூழல் வருகிறது. இப்படியான காலக் கட்டத்தில் நகருகிறது கதை.
தர்ம நியாயத்துக்கு உட்பட்டு நகரும் திரைக்கதை, இறுதியில் மனம் திருத்தியது யாரை.... இந்த சமூகத்துக்கு சொல்ல வந்த நீதி என்ன.... இதுதான் பரபர காட்சிகள். அதற்கான திடுக் திரைக்கதை, மர்மமான ட்ரீட்மென்ட், மனிதம் உணர்த்தும் கதாபாத்திரங்கள்... என ஒவ்வொரு காட்சியும், அதன் பின்னணியும் ஆயிரமாயிரம் கதை சொல்கின்றன!
கதைக்குள் சத்யராஜ் வந்து எப்படி உருவெடுத்திருக்கார்...?
எப்போதுமே சத்யராஜ் சார் என்றாலே அவர்தான் போலீஸாக இருப்பார். இது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. ஆனால்,இந்த முறை அவர் போலீஸþக்கு எதிர்பக்கம். அவர்தான் நான் சொன்ன தீர்க்கதரிசி. நீங்கள் எதிர்பார்க்காத இடத்தில் இருப்பார் சத்யராஜ் சார். அதற்கென தனி லுக், மொழி பாவனை எல்லாமே புதிதாக இருக்கும். அவர்தான் அந்த தீர்க்கதரிசி என்பது ரசிகர்களுக்கு கன்வே ஆகும். ஆனால் எதிர்பக்கத்தில் உள்ள காவல்துறைக்கு தெரியாது. இதுதான் கதையின் ஆகப் பெரும் சுவாரஸ்யம். பொதுவாக சராசரி மனிதர்களுக்கு அனுபவம் குறைவுதான். மிஞ்சி மிஞ்சிப் போனா தினமும் ஏழெட்டு பேரை புதிதாக சந்தித்து பேசினாலே அதிகம். ஆனால், போலீஸ் வாழ்க்கை அப்படியில்லை. ஒரு வழக்கோடு ஆறு மாதம் கூட புழங்க வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால் அவர்கள் சந்திக்கிற மனிதர்கள், அவர்களின் சூழ்நிலை எல்லாமே வித்தியாசமாக இருக்கும். சில வழக்குகள் ரொம்பவும் விசித்திரமா, சிக்கலாக, அவிழ்க்க முடியாத புதிரா இருக்கும். அதற்கேத்த மாதிரி இயங்குவதே சிரமமானது. இது ஒரு சாமானிய போலீஸ் அதிகாரியின் கதை. இது ஒரே ஒரு போலீஸ் அதிகாரியின் கதையும் கிடையாது. நான் பார்த்த, கேட்ட, படித்த நிறைய விஷயங்களின் தொகுப்பு. நிச்சயம் "சிங்கம்', "சாமி' படங்கள் மாதிரி கிடையாது. மனிதம் பேசுகிற ஒரு கதை. கதை அனுமதிக்கிற, பொருந்துகிற அளவுக்குத்தான் ஆக்ஷன். சிவாஜி வீட்டுப் பிள்ளை துஷ்யந்த், "அஞ்சாதே' அஜ்மல், "காட்டுப் பய சார் இந்த காளி' ஜெய்வந்த், ஸ்ரீமன் இவர்கள் எல்லாம் காவல்துறை அதிகாரிகள். படத்தில் ஹீரோயின், காதல் என்ற வழக்கமான சம்பிரதாயங்கள் எல்லாம் கிடையாது. ஆனால் இரு பாடல்கள் உண்டு.
லைன் ஓ.கே... ரசிகர்களிடம் கதை பேசப் போவது என்ன...
இந்திய காவல்துறையில் பணியாற்றும் ஒருவன், பொது மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி இருக்கிறான், அதிகார மையங்கள் அவனை எப்படியெல்லாம் கேவலாமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது வரை தீவிரமாக யோசித்து திரைக்கதை எழுதியிருக்கிறேன். உண்மையில், பிளாட்ஃபாரத்தில் இளித்துக் கொண்டு நிற்கும் போலீஸ்காரர்களை யார் உருவாக்குகிறார்கள்... ரத்தம் வழிய வழிய.. நான்கு பேர் அடித்துக் கொள்ளும் போது ஒதுங்கி ஒளியும் போலீஸ்காரர்கள் எப்படி உருவாகிறார்கள். சாலைகளிலும் கடைகளிலும் அனுதினம் பார்க்க நேரிடும் போலீஸ்கார்களைக் கேவலாமாக திட்டும் நமக்கு, பெரும் அரசியல் பேரங்களிலும் கலவரங்களிலும் கொலைகளிலும் பங்கு போட்டு நடத்தும் காவல் அதிகாரிகளை தெரிவதே இல்லை. குற்றங்கள்தான் இந்த கதையின் பிரதானம். அதன் உருவாக்கம் தொடங்கி, அதன் சம்பவங்கள் வரை எல்லாமே இதில் இருக்கும். போலீஸ் கதைகளில் 100க்கு 80 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது. அதை ரிப்பீட் செய்ததில் சில படங்கள் தோற்றிருக்கலாம். திரைக்கதை எழுதும் போதே, சேகரித்த கதைகளே எக்கச்சக்கம் இருக்கும். நானே போலீஸ் ஸ்டோரியில் புதிதாக பத்துக் கதை இயக்க முடியும்.
ஒரு ஆளை நாம் சந்திக்க மட்டும்தான் செய்வோம். போலீஸ் அந்த ஆளை ஊடுருவிப் பார்க்கும். கண்காணிக்கும். விட்டுட்டு வேடிக்கை பார்க்கும். விட்டுத்தான் பிடிக்கும். நிச்சயம் "தீர்க்கதரிசி' நீங்கள் பார்த்த படம் மாதிரி இருக்காது... படத்தில் முக்கிய அறிமுகம் இசையமப்பாளர் பாலசுப்பிரமணியன். அனிரூத்தின் பள்ளியில் இருந்து வந்தவர். இந்தக் கதைக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றி தந்திருக்கிறார். எல்லோருக்கும் நன்றிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.