பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேன் : உடல் எடையை குறைக்குமா?

தேனை வெந்நீரீல் / எலுமிச்சை சாறில் /இஞ்சியுடன் / இலவங்கப் பட்டையுடன் சேர்த்து காலையில் / வெறும் வயிற்றில் / இரவு உறங்கப்போகும் முன் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்கிறார்களே... எடை குறையுமா?

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 6:30 pm

தினமணி

தேனை வெந்நீரீல் / எலுமிச்சை சாறில் /இஞ்சியுடன் / இலவங்கப் பட்டையுடன் சேர்த்து காலையில் / வெறும் வயிற்றில் / இரவு உறங்கப்போகும் முன் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்கிறார்களே... எடை குறையுமா? பார்க்கலாம்:

பொதுவாகவே வெப்ப விளைவை அதிகரிக்கும் உணவுகள் உடலின் வளர்சிதை செயல்பாடுகளை அதிகரித்து, உடல் எடையை சீராக வைப்பதற்கும், அதிகமிருந்தால் குறைப்பதற்கும் உதவுகின்றன. 

இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, இலவங்கம், மிளகாய், போன்ற மருத்துவ குணம் நிறைந்த மசாலா பொருட்களும்,  கலப்படமில்லாத காபிக்கொட்டை, தேயிலை, பட்டாணி, தண்ணீர் மேலும் புரதத்தை உள்ளடக்கிய அசைவ உணவுகளும் இதில் அடக்கம்.

எலுமிச்சை மற்றும் தேன் நேரடியாக உடல் எடையைக் குறைக்கிறதா என்பது பற்றிய துல்லியமான ஆய்வுகள் ஏதும் இதுவரை இல்லை. ஆனால், நீர் பானங்களால் உடலின் செயல்பாடுகள் அதிகரித்து, அதிக கொழுப்புகள் எரிக்கப்படுகின்றன. அதனால் தேவையற்ற கொழுப்பு கரைகிறது. அதாவது எலுமிச்சையை பழச்சாறாக அருந்துவதும் பிற பழச்சாறுகள், நீர் அதிகம் இருக்கும் பானங்கள் அனைத்தும் இவ்வேலையை செய்கின்றன.

எலுமிச்சை சாறும், நீரும் இவ்வேலையை செய்யும் நிலையில், எலுமிச்சையிலுள்ள வைட்டமின் "சி' யின் கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை அதிகரித்து, உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பைக் கரைக்கிறது. 

தேனை நீரில் கரைத்து, அதனுடன் உதவிக்காக மேற்கூறிய பொருள்களையும் சேர்த்து சாப்பிடுவதால் கொழுப்புகள் எரிக்கப்படுவதுடன், தேனிலுள்ள கூட்டுப்பொருட்களானவை, இன்சுலின்,  க்ரெலின், லெப்டின் போன்ற பசியுடன் தொடர்புடைய ஹார்மோன்களை கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. 

இதனால், சராசரி அளவைவிட சற்று நீண்ட நேரத்திற்குப் பிறகே பசியெடுப்பதால், தேவையற்ற உணவும், நொறுக்குத்தீனிகளும் தவிர்க்கப்பட்டு, கலோரியின் அளவும் பாதுகாப்பான அளவிற்குள் இருக்கிறது. எனவே, உடல் எடையும் கட்டுப்படுகிறது. இந்த குணம் தேனிற்கு மட்டுமல்லாது, வேறு பல உணவு பொருட்களுக்கும் இருக்கிறது. 

இந்த சிறு உடலியங்கியல் மாற்றம் மட்டுமே தேன் மற்றும் எலுமிச்சை சாறு குடிப்பதால் நிகழ்கிறது. அதுவும் ஒருவரின் உடல் தன்மை, முன்பு சாப்பிட்ட உணவு, உடல் நிலை போன்றவற்றைப் பொருத்துதான் நிகழும். 

இதைப் பின்பற்றுவதற்குக் காரணம், சர்க்கரைக்குப் பதிலாகத் தேன் என்று பரிந்துரைக்கும்போதும், இயற்கையில் கிடைக்கும் சுத்தமான தேன் எனும்போதும் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்வோம் என்ற உளவியல் சார்ந்த உணவு அளவுக் கோட்பாடுதான்.

ஆனால்  ஒருவர் உண்ணவேண்டிய சரிவிகித அளவு உணவுகளை மீறி எடுத்துக் கொள்ளப்படும் உணவுகள், அதிக கொழுப்பு, எண்ணெய் சேர்த்த உணவுகள்/நொறுக்குத் தீனிகள் வெளியில் விற்கப்படும் அதிக சர்க்கரை சேர்த்த பானங்கள், அதிக கலோரிகள் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்புகள்,சர்க்கரை சேர்த்து காலையில்/மாலையில்/இரவில் எடுத்துக்கொள்ளப்படும் காபி/டீ/பால்  போன்றவைகள், உடலின் கலோரி அளவை அதிகப்படுத்துமே தவிர சிறிதளவும் குறைக்காது. இவையெல்லாம் சாப்பிட்டு விட்டு, தேனும் எலுமிச்சையும் சாப்பிடுவதால் எவ்வித மாற்றமும் நிகழாது. 

அது மட்டுமல்லாமல், எந்த ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருளையும் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதால், உடல் எடை குறையும் என்று கண்மூடித்தனமாக நம்புவதும் தவறு. காரணம், ஒவ்வொரு உணவுப் பொருளும் ஒவ்வொருவர் உடல் தன்மைக்கு ஏற்ப செரித்தலிலும், உட்கிரகிப்பதிலும் மாறுபடும். 

இந்நிலையில், இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், முறையற்ற உணவுகளை எடுத்துக்கொண்டு, தன்னுடைய உடல் தன்மைப் பற்றியும் தெரிந்து கொள்ளாமல்,  தேனையும் சாப்பிடுவதால் எவ்வித பலனும் இல்லை என்பதை திடமாக மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

மேலும், உடல் எடை குறைப்பும், பராமரிப்பும் உடல் அமைப்பு, உணவு முறை , உடற்பயிற்சி, ஒருவர் செய்யும் பணி அல்லது உடல் உழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டு செயல்பாடு. இதில் எள்ளளவும் ஐயமே வேண்டாம். இவற்றுள் எந்த ஒன்று இல்லையென்றாலும் எடை குறைப்பிற்கு பலன் கிடைக்காது. அனுபவமுள்ள உணவியல் வல்லுநர்கள் உங்கள் விவரங்களைக் கேட்டறிந்து  உடல் எடை குறைப்பு முறைகளை  சரியாகப் பரிந்துரைப்பார்கள்.
இதைத் தவிர்த்து, மூன்று நாள்களில், எடை குறைப்பு, லேகியத்தால் எடை குறைப்பு, ஒரு பொருளை மட்டுமே சாப்பிடுவதால் உடனடியாக எடை குறைப்பு என்பதையெல்லாம் நம்பவேண்டாம். அவ்வாறு விளம்பரங்களை நம்பி, பணத்தை விரயமாக்குவதுடன், உடல் நலனை சீரழித்துக் கொள்வதையும் முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

முனைவர். ப. வண்டார்குழலி ராஜசேகர், 
உணவியல் துறை வல்லுநர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.