தோள் கொடுக்கும் தோழன்

மணிப்பூர் மாநிலத்தில், அந்த மாநில வீரர்,  வீராங்கனைகளுக்கு  "தோள் கொடுப்பான் தோழன்'  என்ற பழமொழிக்கேற்ப தமிழ்நாட்டில் விளையாட்டில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தோள் கொடுக்கும் தோழன்
Updated on
1 min read

அமைதியற்ற நிலையில் இருந்துவரும் மணிப்பூர் மாநிலத்தில், அந்த மாநில வீரர்,  வீராங்கனைகளுக்கு  "தோள் கொடுப்பான் தோழன்'  என்ற பழமொழிக்கேற்ப தமிழ்நாட்டில் விளையாட்டில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
உலக அளவில் விளையாட்டு அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தியதில் மணிப்பூர் மாநிலத்தினருக்குப் பெரும் பங்கு உள்ளது.  குத்துச்சண்டை, கால்பந்து, தடகளம், வாள்சண்டை (ஃபென்சிங்), ஜிம்னாஸ்டிக்ஸ் என பல்வேறு விளையாட்டுகளில் அம்மாநில வீரர், வீராங்கனைகள் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

குத்துச்சண்டையில் உலக சாம்பியன் மேரி கோம்,  சரிதா தேவி, கங்கோம் டிங்கோ, லைஷ்ராம் தேவேந்ரோ, பளு தூக்குதலில் குஞ்சுராணி, சனமச்சா, மீராபாய் சானு, ஜூடோவில் குமுஜம் டோம்பி, சுஷீலா, ஹாக்கியில் நீலகண்ட சர்மா, சுஷீலா சானு உள்ளிட்டோர் அடங்குவர்.

வன்முறையால் பாதிப்பு: வட கிழக்கில் ஏழு சகோதரிகளில் ஒன்றான மணிப்பூர் அழகு கொஞ்சும் சிறிய மாநிலமாகத் திகழ்கிறது. இங்கு கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறையால் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். பல்வேறு தரப்பினர் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்கு அமைதியை நிலைநாட்ட 
மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின் அழைப்பு:

இந்தச் சூழ்நிலையில் மணிப்பூரின் சிறந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் பயிற்சிக் காலத்தை தவற விடும் நிலை ஏற்பட்டது. விரைவில் ஆசியப் போட்டி, தேசிய விளையாட்டுப் போட்டி, கேலோ இந்தியா உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக தீவிர பயிற்சி எடுக்க வேண்டிய நிலையில், அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

"வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு'  என்பதற்கு ஏற்ப இந்த அழைப்பை ஏற்று மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 5 வீராங்கனைகள், 10 வீரர்கள் என மொத்தம் 15 பேர் வாள் சண்டை அணி (ஃபென்சிங்)  வந்துள்ளது. அவர்களுக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுடன் 2 பயிற்சியாளர்களும் வந்துள்ளனர்.

மணிப்பூர் குழுவினருக்கான சிறப்புப் பயிற்சிக்கு ஆகும் செலவு, தங்கும் வசதி, விமானப் பயணத்துக்கான அனைத்து கட்டணங்களையும் தமிழ்நாடு அரசு 
ஏற்றுள்ளது. 

இவர்களை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று, தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துவருகிறார்.

இதுதொடர்பாக மணிப்பூர் பயிற்சியாளர் நந்தினி கூறியதாவது:

""பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 3 மாதங்களாக வன்முறைச் சூழலால் எங்கள் அகாதெமியில் பயிற்சி பெற முடியவில்லை. எங்கள்  அணியினர் சிறப்புப் பயிற்சி பெற உதவிய தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் நன்றி. சென்னையில் விளையாட்டு கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன.
நாங்கள் பயிற்சி பெறுவது தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கும் சிறந்த அனுபவமாகத் திகவும். மணிப்பூரில் நிலவும் சூழல் மறைந்து அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com