கீழக்கரையிலிருந்து...

குடியரசு தின கொண்டாட்டம் - நேதாஜி நினைவு நாள் தொடர்பாக,  உங்கள் தலைவரை அறிவோம் எனும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியை  இந்திய மாணவர் குழு ஒன்று அண்மையில் சந்தித்து  கலந்துரையாடியது.
கீழக்கரையிலிருந்து...
Updated on
2 min read

குடியரசு தின கொண்டாட்டம் - நேதாஜி நினைவு நாள் தொடர்பாக, "உங்கள் தலைவரை அறிவோம்' எனும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியை இந்திய மாணவர் குழு ஒன்று அண்மையில் சந்தித்து கலந்துரையாடியது. அந்தக் குழுவில் தமிழ்நாடு - புதுச்சேரி சார்பாக, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட கீழக்கரையைச் சேர்ந்த ஐஸத் ருக்ஸானா என்ற மாணவி பங்கேற்றார். அவர் கீழக்கரை மகளிர் கல்லூரியில் "இணைய பாதுகாப்பு' என்ற பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் பதினெட்டு வயது மாணவி.

அவருடன் ஒரு சந்திப்பு:

உங்களைப் பற்றி...?

கீழக்கரை பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தேன். இடையில் ஐந்தாம் வகுப்பு மட்டும் துபையில் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கீழக்கரை மகளிர்
கல்லூரி'யில் படித்து வருகிறேன். எனது ஆங்கிலப் பேச்சுத் திறமைதான் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

தமிழில் பேசுவதைவிட, ஆங்கிலத்தில் சிறப்பாகச் சொற்பொழிவு ஆற்றுவேன். திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை மேற்கோள் காட்டி பேச இயலும். இதற்கு வழிகாட்டியது படித்த பள்ளியும், படிக்கும் கல்லூரியும் மட்டுமல்ல; பாடங்களைத் தாண்டிய வாசிப்பும் ஒரு காரணம்.

பிரதமருடன் கலந்துரையாடுவது எப்படி சாத்தியமானது?

பிரதமருடன் உரையாட நேதாஜி குறித்து ஆன்லைனில் நடைபெறும் பேச்சுப் போட்டி வாயிலாக, மாணவர்களை பேச்சு போட்டி மூலமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட "நேரு யுவ கேந்திரா' பொறுப்பாளர் முனிசெல்வம் தெரிவித்தார். இதன்படி, போட்டியில் பங்கேற்று ஜனவரி 6-இல் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பின்னர், மாநிலம் அளவில் பேச்சுப்போட்டி தமிழிலும், ஆங்கிலத்திலும் ஜனவரி 10-இல் நடைபெற்றது. இதிலும் தேர்வானேன்.

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலிருந்து மாணவர் பிரதிநிதிகளைத் தேர்வு செய்து, பிரதமரைச் சந்திக்க தில்லிக்கு வரச் சொன்னார்கள்.

ஜனவரி 23-இல் நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட இதர அமைச்சர்களுடன் கலந்துரையாடினோம். அப்போது பிரதமர் "சர்ப்ரைஸ் விசிட்' வந்தார்.

நிகழ்ச்சியை சில விநாடிகள் பார்த்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர், ஜனவரி 24-இல் பிரதமருடன் கலந்துரையாட அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பாக பிரதமருடன் பேசியவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்தக் குழுவிலும் எனது பேச்சாற்றல் இடம் பிடிக்க உதவியது. பிரதமரின் "பொதுமக்கள் தொடர்பு' பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் பிரதமரின் ஆளுமைப் பண்புகளைப் பற்றி பேசச் சொன்னார்கள். அது வைரல் ஆனது. நான் பேசியதை பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். மத்திய இணை அமைச்சர் எல். முருகனையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

விமானத்தில் தில்லி போய்வர ஏற்பாடு செய்திருந்தார்கள். எம்.பி.க்கள் தங்குவதற்காக கட்டப்பட்டிருக்கும் மத்திய அரசின் "வெஸ்டர்ன் கோர்ட் அனெக்சில்' தங்க ஏற்பாடு செய்திருந்தனர். குடியரசு தினக் கொண்டாட்ட அணிவகுப்பைக் கண்டு, மறுநாள் சொந்த ஊருக்குப் புறப்பட்டோம்.

குழுவில் பங்கேற்ற மாணவ மாணவிகளுடன் நட்பு மலர்ந்து தொடர்பில் உள்ளோம்.

படிப்போடு உங்களது இதர பணிகள் என்ன?

கல்லூரியில் சேர்ந்ததும், மாறிவரும் காலநிலை, கல்வி, பாலின ஒற்றுமை, மூன்றாம் பாலினர்களின் உரிமை, மனவளம் குறித்து பல பன்னாட்டு தொண்டு அமைப்புகளில் செயல்பாட்டாளராகவும் உள்ளேன். அவ்வப்போது வரைவுகள் தயாரிப்பதும், ஆலோசிப்பதும் உண்டு. ஆன்லைனில் பல்வேறு செயல்பாட்டாளர்களுடன் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் நெறியாளராகவும் செயல்படுகிறேன்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒரு அமைப்பு நடத்திய நிகழ்ச்சிக்கு சொற்பொழிவாற்ற அழைப்பு வந்தது. தனியே லண்டன் அனுப்ப வீட்டில் தயக்கம் காரணமாக, பங்கேற்கவில்லை. பொன்னான வாய்ப்பு கைநழுவியது.

எனது செயல்பாடுகளை அறிந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் "மேல் படிப்பை இங்கு படிக்க வாருங்கள்' என்று அழைப்புகள் விடுக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com