'காபி வித் கலெக்டர்'

ஆசிரியர் பணி மிகவும் மகத்தான ஒன்று என்பது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் கூற்று.  
'காபி வித் கலெக்டர்'
Published on
Updated on
2 min read


ஆசிரியர் பணி மிகவும் மகத்தான ஒன்று என்பது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் கூற்று.  அவருடைய வழியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்து வரும் ஜெ. மேகநாத ரெட்டி, பல்வேறு அரசுப் பணிகளுக்கிடையே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியராக, வழிகாட்டியாக இருந்து, அவர்கள் லட்சிய வேட்கையை அடைய திறவு கோலாக இருந்து வருகிறார்.

அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

நான் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற ஆறு மாத காலத்தில்,  2021-ஆம் ஆண்டு டிசம்பரில் கல்வித் துறையில் ஆய்வுக் கூட்டம் நடத்தினேன். அப்போது பள்ளிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளைச் சந்திப்பது, அவர்களின் எதிர்காலத் திட்டம் குறித்து கேட்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது.  அலுவல் காரணமாக,  பள்ளிகளுக்குச் செல்வதில் தடைகள் ஏற்பட்டன. 

இதையடுத்து, மாணவர்களை ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து கலந்துரையாட தீர்மானித்தேன். மாணவர்கள் இங்கு வருகையில் ஆட்சியர் அலுவலகம்,  பல்வேறு துறைகள், அவற்றின் செயல்பாடுகளை அறியவும் முடியும்.  இந்த நிகழ்ச்சிக்கு,  "காபி வித் கலெக்டர்'  எனப் பெயரிட்டேன். 

கடந்த ஆண்டு ஜனவரியில் நிகழ்ச்சியைத் தொடங்கினேன். அதில் ஒவ்வொரு வட்டத்திலும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் 25 பேர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்டனர்.

படிப்பில் ஆர்வம், லட்சியம், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு எனப் பல்துறைகளில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். 

சுமார் 2 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கனவு லட்சியம், விருப்பம், குடும்பச் சூழ்நிலை குறித்த மாணவர்களின் கருத்தை அறிய முடிந்தது. 

இன்றைய மாணவ சமுதாயத்தினர் மிகத் தெளிவாக, எதிர்காலக் கனவு குறித்து பேசுகின்றனர். அவர்களுக்கு என்னுடைய அனுபவங்களை எடுத்துரைத்து, எப்படி திட்டமிட்டு படிப்பது, திறமைகளை வளர்த்துக்  கொள்வது குறித்து விளக்குகிறேன்.

வாழ்க்கையில் லட்சியம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். தோல்வி என்பது நீங்கள் வெற்றி பெறுவதற்கான முதல் படி. நடந்ததை நினைத்து துவண்டு விடாமல் முயற்சி செய்தால், இலக்கை அடைய முடியும் என்பது அந்த கலந்துரையாடலில் நான் உணர்த்தும் முக்கியக் கருத்தாக இருக்கும்.

சமுதாய நன்மைகள், தவறான விஷயங்கள் குறித்து மாணவர்களின் புரிதலை அறிய முடிந்தது. பள்ளி நிலையில் அவர்கள் உலகத்தை அறிந்து வைத்துள்ளனர். எது நல்லது, கெட்டது என்பதில் தெளிவாக உள்ளனர்.  மாதம் இரு கூட்டம் என தற்போது வரை  24 கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். 

சிலர் தொழிலதிபர், ஐஏஎஸ், ஐபிஎஸ், வழக்குரைஞர், மருத்துவர், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைத் தேர்வு செய்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். அந்தத் துறைகளுக்குச் செல்ல உயர் கல்வியில் எதைத் தேர்வு செய்யலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எடுத்துரைத் துள்ளேன்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுக்கு வாழ்க்கை குறித்த தெளிவு, தைரியம், லட்சியம், தன்னம்பிக்கை இருப்பதை அறிய முடிந்தது. 

மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், உயர்ந்த நிலையை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளனர்.  அவர்களைப் போட்டி தேர்வுகளில் பங்கேற்குமாறு ஊக்கப்படுத்தி வருகிறேன். 

ஆட்சியர் என்பவர், சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதனடிப்படையிலேயே குழந்தைகளிடம் உள்ள லட்சியத்துக்கு உறுதுணையாக இருந்து வருகிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com