

"பிச்சை எடுக்கும் யானையின் கண்களில் அசைகிறது பிறந்த பெருவனம்....'' என்ற மலையாளக் கவிஞர் அய்யப்பனின் கவிதை இருக்கிறது. இதுதான் இந்தக் கதைக்கான முதல் உத்வேகம். கதைக்காக கவிதையை மேற்கொள் காட்டி பேசத் தொடங்குகிறார் வெங்கட். "கிடா' படத்தின் இயக்குநர். சினிமாவில் ஆபிஸ் பையனாக வேலைக்கு சேர்ந்து படம் இயக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
ஆடு, அதை சுற்றிய மாந்தர்கள் பின்னணியில் ஒரு கதை... எப்படி தொடங்கியது....
சாப்பாடு, சம்பளம், துயரம், சந்தோஷம் எனக் கிடைக்கும் வாழ்வு, எல்லோருக்கும் அமைவது இல்லை. கனவு, லட்சியம், வேட்கை எனத் துரத்தும் வாழ்வில் எங்கேயோ போய் நிற்கிறோம். எல்லாம் இருந்தும் மனசு, அன்புக்கு ஏங்குகிறது. வன்மம் இல்லாத உலகுக்குத் தவிக்கிறது. எப்போதும் பரிசுத்தமான காதலுக்கு தவிக்கிறது. இப்படியான ஒரு பயணத்தில், நம் கிராமப்புறங்களில் சுற்றிக் கொண்டிருந்தேன். ஐந்து மாதங்கள் வரையான தனிமை பயணம் அது. சாப்பாடு, தண்ணீர் என எதுவும் பிடிக்காது. கிடைத்ததை சாப்பிட்டு வாழ்கிற அளவுக்கு ஏக்கம் சுற்றும். அப்போதுதான் ஒரு கிடா ஆட்டின் பின்னால் ஒரு லைன் பிடித்தேன். அதற்காகவே ஒரு கிடாவை வாங்கி வளர்த்து, பயிற்சிகள் அளித்து.... இப்படித்தான் இந்தக் கதை உருவானது. அதுவும் சாமிக்கு நேர்ந்து விட்ட கிடாவின் வாழ்க்கை அந்தக் கதையில் இருந்தது. அந்த கிடாவின் மன நிலைப்பாட்டை சாமானிய வாழ்க்கையில் ஒருங்கிணைத்துப் பார்த்தேன். ஒரு கிடா நம் கிராமத்து மனிதர்களோடு வாழ்ந்தால் எப்படியிருக்கும்... அங்கேயிருந்தான் இந்த கதைக்கான புள்ளி தொடங்கியது. ஒரு கிடா, ஒரு தாத்தா, அவரின் பேரன் என இந்தக் கதை சுற்றி வரும். தன் ஊரைத் தாண்டாத ஒரு விவசாயிக்கு ஒரு கிடாவின் அன்பு கிடைத்தால்.... இதுதான் இதன் புள்ளி.
அடுத்த கட்ட நகர்வாக என்ன நிகழும்...
தன் ஊரிலிருந்து அதிகபட்சம் மூன்று கிலோ மீட்டர் தூரம் கூட பயணிக்காத ஒரு விவசாயி "பூ' ராம். அவரின் பேரன் மாஸ்டர் தீபன். தீபாவளி பண்டிகைக்கு பேரனுக்கு புது துணிமணி வாங்கித் தர வேண்டும் என்பது தாத்தாவின் ஆசை. அந்த ஆசையை பூர்த்தி செய்ய ஒரு ஆட்டை வளர்க்கிறார் தாத்தா. அது சாமிக்கு நேர்ந்து விட்ட கிடா. சாமி கிடா என்பதால் அதை யாரும் வாங்க மறுக்கிறார்கள். என்ன செய்வதென்று யோசிப்பதற்கு உள்ளாக தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு ஆடு காணாமல் போகிறது. அந்த ஆட்டை தேடி சிலர் செல்கிறார்கள். அந்த ஆடு கிடைத்ததா... பேரனின் ஆசையை தாத்தா தீர்த்து வைத்தாரா.... என்பதே திரைக்கதை.
கதையின் உள்ளடக்கமாக என்ன இருக்கும்...
வாலை ஆட்டும் ஒரு நாய்க்குள், பெயர் சிணுங்கும் கிளிக்குள் கூட உறங்கும் முயலுக்குள்... ஒரு காதலை, பிரிவை மீட்டெடுக்கிறான் மனிதன். காலம் முழுக்க ஜல்லிக்கட்டு காளைகளைத் தயார் செய்வதிலேயே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், பறவைகளுக்கான ஆராய்ச்சிக்காவே தன்னை அர்பணித்தவர்கள், பாம்புகளின் புதிர்களைத் தெரிந்துக் கொள்வதையே பயணமாக்கி கொண்டவர்கள்... இப்படி ஏக மனிதர்கள் ஒரு அதிசயம் போல் நம்மைக் கடந்து கொண்டே இருக்கிறார்கள். எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் மனிதர்களின் பெரும் பிரச்னை. நம்பிக்கை, அன்பு எல்லாம் பொய்யாகும் போதுதான், எல்லாம் கசந்து போகிறது. விலங்குகளிடம் அது எதுவும் இல்லை. அதன் அன்பில் அப்பழுக்கு இல்லை. இந்த மன நிலையை விலங்குகளோடு வாழும் பலரிடம் நான் பார்த்திருக்கிறேன். நம்பிக்கை இன்மை நிறைந்த மனித உறவுகளை மனதளவில் துரத்தியவர்கள், பிராணிகளின் பேசா அன்பை நிழலாக்கி கொள்கிறார்கள். இங்கே நிகழ்வதும் அப்படித்தான். இந்த பூமியோடும், மனித வாழ்க்கையோடும் பிற உயிர்களுக்கு இருக்கும் தொடர்பு என்பது மிக முக்கியமானது. நமக்கு தெரிந்ததெல்லாம் நேரடியாக, அதுவும் உயிரினங்களை அழித்து அடையும் நன்மைகள்தான். ஆனால் மறைமுகமாக நாம் உயிர் வாழவே இந்த உயிரினங்கள் மிகவும் அவசியமாக இருப்பதை நாம் அறிந்திருக்கிறோமா? எறும்பிலிருந்து யானை வரை நாம் வாழும் இந்த பூமியின் சுற்றுச்சூழலுக்கும், நம் உயிருக்கும் பல வகையில் அதன் வழக்கமான நடவடிக்கைகள் மூலம் உதவுகின்றன.
ஆடு வளர்ப்பு தொடங்கி படப்பிடிப்பு வரைக்குமான பயணம் சவாலாக இருந்திருக்குமே....
ஆட்டை நடிக்க வைப்பதில் எந்த சிரமமும் இல்லை. அதை பழக்குவதில்தான் அதிக நேரம் போனது. கதை முடிவானதுமே ஒரு ஆட்டை வாங்கி வளர்க்க தொடங்கி விட்டோம். அதற்கு பெயர் வைத்து அதைச் சொல்லி அழைத்தால் அது திரும்பி பார்ப்பது போல் வரை பழக்கி விட்டோம். அதோடு அதை புரிந்துக் கொண்டு நடிக்கிற நடிகர்கள் தேவை. அதற்கு "பூ' ராம், காளி வெங்கட் மாதிரியான அனுபவ நடிகர்கள் அவ்வளவு ஒத்துழைப்பு தந்தார்கள். மதுரையை அடுத்த மேலூர் அருகே உள்ளே கிராமங்களில் படப்பிடிப்பு முடித்து வந்திருக்கிறேன். சர்வதேச விருது மேடைகளுக்கு படம் செல்லவிருக்கிறது. அதன் பின் உங்கள் பார்வைக்கு படம் வரும். எல்லாமே இப்போது மன நிறைவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.