

கவிஞர் வாலி எழுதிய "பாண்டவர் பூமி' கவிதைகளில் மிகவும் கவரப்பட்டவராக இருந்தவர் ஜி.கே.மூப்பனார். என்னிடம், ""அதற்கு ஒரு விழா எடுத்தால் என்ன?'' என்று கேட்டார்.
""அவசியம் செய்ய வேண்டிய படைப்பு அது'' என்றேன் நான்.
விழாவுக்கான ஏற்பாடுகளைத் தொடங்குமாறு என்னையும், கவிஞர் நேதாஜியையும் பணித்தார் ஜி.கே.மூப்பனார்.
பேச்சாளர் பட்டியலைத் தயாரித்தேன். அதை படித்த மூப்பனார், ""ஏன் முக்தா. இந்த விழாவில் பேச முக்கூர் லட்சுமி நரசிம்மச்சாரியரை அழைக்கலாமே? அவரை உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்.
""தெரியும்'' என்றேன்.
""போய் அவரை அழைத்துவிட்டு வாருங்கள்'' என்றார்.
நான் முக்கூர் ஸ்வாமியை சந்தித்து விழாவுக்கு அழைத்தேன். அவர் மகிழ்ந்தார். ""அவசியம் செய்ய வேண்டிய விழா அது. நான் நிச்சயமாக வருகிறேன்'' என்றேன்.
அன்று பாண்டவர் பூமியைப் பற்றி அவர் ஆற்றிய உரையை யாரும் வாழ்நாளிலேயே மறக்க முடியாது.
என்ன புலமை என்ன புலமை!
இந்த மாதிரி மகாமனிதர்கள் இந்தத் தேசத்தில் அவதரிப்பதுதான் நம்முடைய பெருமை.
கூட்டத்தில் நிறைய பேச்சாளர்கள் இருந்ததால், அவருக்கு உண்டான நேரத்தைத் தர முடியாமல் நான் தவித்தேன். அப்போது அவர் தன்னைப் பற்றி ஒரு நகைச்சுவையை சொன்னார். அரங்கமே அதிர்ந்தது கரவொலியில்..!
அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
""ஆஸ்திக சமாஜத்தின் தலைவர் ரத்னமய்யர் சொல்வார். எல்லோருக்கும் பேசறதுக்கு பணம் கொடுக்கணும். முக்கூர் ஸ்வாமிக்கு பேச்சை முடிப்பதற்கு பணம் தரணும் என்று!'' இதை சொல்லிவிட்டு ஸ்வாமி சிரித்த சிரிப்பு இருக்கிறதே (உடம்பெல்லாம் குலுங்கியபடி) அதை நான் இன்றும் அடிக்கடி நினைத்துப் பார்த்து மகிழ்கிறேன்.
(முக்தா சீனிவாசன் எழுதிய "இணையற்ற சாதனையாளர்கள்' எனும் நூலில் இருந்து..)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.