யாரையும் யாருடனும் ஒப்பிடக் கூடாது 

யாரையும் யாருடனும் ஒப்பிடக் கூடாது;  அது நம்மை நாமே நிராகரிப்பதற்குச் சமம்'' என்கிறார் தன்னம்பிக்கை மனிதர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி.
யாரையும் யாருடனும் ஒப்பிடக் கூடாது 
Published on
Updated on
3 min read


"யாரையும் யாருடனும் ஒப்பிடக் கூடாது; அது நம்மை நாமே நிராகரிப்பதற்குச் சமம்'' என்கிறார் தன்னம்பிக்கை மனிதர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி.
கோவை மாவட்டம் இடையர்பாளையத்தைச் சேர்ந்த 75 வயதான இவர், இரு கைகளும் கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளி. பிறக்கும்போதே அவ்வாறு இருந்தாலும், அதை குறைபாடாக ஒருநாளும் கருதாமல் நதிபோல ஓடிக் கொண்டிருக்கிறார்.
கர்நாடக சங்கீதப் பாடகரான இவர்,அரை நூற்றாண்டாக இசைக் கச்சேரிகளில் பாடி வருகிறார். இரு தேசிய விருதுகள், கலைமாமணி விருது, நாதகான சேவகா உள்பட பல்வேறு விருதுகளைத் தனது திறமையால் குவித்துள்ளார்.
2,500-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளில் பாடியுள்ளார். மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வி நிலையங்களுக்குச் சென்று தன்னம்பிக்கை உரையும் ஆற்றிவருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் சரளமாகப் பேசுகிறார்.

பேச்சில் மட்டுமல்லாமல் தனது செயலாலும் இன்றைய தலைமுறையினர் மத்தியில் தன்னம்பிக்கை மனிதராக வலம் வரும் அவரிடம் பேசியபோது:

"என் பெற்றோருக்கு 10 குழந்தைகள். அதில் 8-ஆவதாகப் பிறந்தேன். பிறந்தபோதே எனக்கு இந்தக் குறைபாடு இருந்தது. ஆனால், அதை ஒருபோதும் எனது பெற்றோர் பெரிதாக நினைத்து வருத்தப்பட்டதில்லை.
என் பிறவி படைப்பின் பிழையல்ல; கடவுளின் கருணை. நான் எப்போதும் என்னைக் குறைவாக நினைத்ததில்லை. குறைகள் இருப்பதாகக் கூட நினைத்ததில்லை. என்னால் ஒரு காரியம் செய்ய முடியாவிட்டால் அது யாராலும் செய்ய முடியாத ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
"செடி வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்ற நம்பிக்கையில் என்னை வளர்த்தனர். எனது பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள் சிறப்பாகப் பாடுவார்கள். எனக்கும் 5 வயதில் இருந்தே கர்நாடக சங்கீதத்தின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
அந்தக் காலத்தில் பொழுதுபோக்கு சாதனங்களும் இல்லாததால், மாலை நேரத்தில் குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்துகொண்டு, ஹார்மோனிய பெட்டியை வாசித்து, பாடல்களைப் பாடிக் கொண்டே இருப்போம்.
சின்ன வயதில் இருந்தே பாடலைக் கேட்ட உடனேயே பாடிவிடுவேன். ஜி.என்.பாலசுப்பிரமணியத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது பாடல்களைக் கேட்டுக் கேட்டு பாடும் திறனை வளர்த்துக் கொண்டேன்.
எனது பாடும் திறனை அறிந்த என் பக்கத்து வீட்டுக்கார பெண்மணி மீனாட்சியம்மாள் என்பவர், கர்நாடக
சங்கீதம் கற்றுத் தருவதாகச் சொன்னார். வித்வான் டைகர் வரதாச்சாரியாரின் சீடரான அவரிடம், எனது 20-ஆவது வயது முதல் முறைப்படி இரண்டரை ஆண்டுகள் கர்நாடக சங்கீதம் கற்றேன்.
எனக்கு 15 வயது இருக்கும்போது தியாகராஜர் உற்சவ நிகழ்ச்சியின்போது, " நீ என்ன பாட்டு பாடப் போறாய். உனக்குப் பாடத் தெரியுமா?' என்று சிலர் கேலியாகக் கேட்டனர். அப்போது, நான் "மா' வார்த்தைகளிலேயே 6 தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடினேன். அவர்கள் அசந்து போயினர்.
1980-களில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சந்தானம் எனும் பிரபல வித்வானோடு பாடினேன். கச்சேரி முடிந்தவுடன் பார்வையாளர்கள் என்னுடைய பாட்டு அருமையாக இருப்பதாகக் கூறினர். அப்போது சந்தானமும் என்னைப் பாராட்டி, அவரது அறக்கட்டளை மூலம் எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் அனுப்பிவைத்தார்.
பல்வேறு சபாக்கள், அமைப்புகளின் இசைக் கச்சேரி
களில் பாடி 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன். சங்கரா தொலைக்காட்சியில் ஹரிபஜனைகளைப் பாடுவேன். அதில், 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ளது.
டெலிபோன் பூத் வைத்து நடத்தி வந்தபோது, மாற்றுத்
திறனாளிகள் சுயதொழிலில் ஈடுபடுவதற்காக வழங்கப்படும் தேசிய விருதை அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனிடம் இருந்து பெற்றேன்.
ஏ.பி.ஜே.அப்துல் கலாமிடம் இருந்து சங்கீதத்துக்காக, 2 -ஆவது முறையாக தேசிய விருது பெற்றேன்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து
2005-ஆம் ஆண்டில் கலைமாமணி விருதைப் பெற்றேன். பஜன் சாம்ராட், லேயரிஷ்ய வித்வான், நவரத்னா, கான சேவகா எனும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளேன். 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இசையைக் கற்றுக் கொடுத்துள்ளேன்.
மலேசியா, துபை, மோரீஷஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகளில் பாடியுள்ளேன். அமெரிக்காவுக்குச் சென்று பாட வேண்டும் என்ற
ஆசை உள்ளது.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்னை ஒருமுறை தன்னம்பிக்கை உரையாற்ற அழைத்திருந்தனர். சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் பேசி கவர்ந்தேன். இதைப் பார்த்து அந்த நிறுவனத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து எனக்கு கார் ஒன்றைப் பரிசாக அளித்தனர்.
நிறைய கல்வி நிலையங்களுக்குச் சென்று மாணவ, மாணவிகளுக்கும், தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் உரையாற்றி வருகிறேன். இதுவரை 100-க்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியுள்ளேன்.
யாரும் எந்த வகையிலும் குறைவானவர்கள் கிடையாது. எந்தவொரு தொழிலும் கேவலமான தொழில் இல்லை. செய்யும் தொழிலில் ஈடுபாட்டுடனும், நேர்மையுடனும் பணியாற்றினாலே போதும். வாழ்க்கையில் வென்றுவிடலாம். முதலில் நம் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தாலே எந்தவொரு செயலையும் செய்துவிடலாம். அட்வைஸ் கொடுப்பதும் தவறு, பெறுவதும் தவறு. நம்மை நாமே உணர்ந்து நமக்கு எது சரியோ அதை சிறப்பாகச் செய்ய வேண்டும். செல்ஃப் அட்வைஸ்தான் சிறப்பான அட்வைஸ்.
எந்தவொரு செயலைச் செய்தாலும், அதை முழுமையாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டும் என நினைப்பேன்.
என்னுடைய ரோல் மாடல் என்பது எப்போதும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்தான். அவரைச் சந்திக்க வேண்டும் என்று ஒருமுறை நான் கடிதம் எழுதினேன். அடுத்த 15 நாள்களில் அவரைச் சந்திப்பதற்கான பதில் கடிதம் வந்தது. "கோவைக்கு வரும்போது நான் உங்களைத்தான் முதலில் சந்திப்பேன்' எனக் கூறி என்னைச் சந்தித்தார். 30-க்கும் மேற்பட்டோர் அவரைச் சந்திக்க காத்திருந்தபோது, என்னைத்தான் முதலில் சந்தித்தார். எனது பாடல்களைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த கலாம், நன்கு உபசரித்ததை மறக்க முடியாது.
வயதாகிவிட்டதால் வீட்டில் என்னை ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள். ஆனால், நான் சங்கீதத்தை விடுவதாக இல்லை. சங்கீதமே எனது ஜீவன். வயது என்பது ஓர் எண்ணிக்கை மட்டுமே. திறமைக்கு எல்லை கிடையாது. நம்மால் முடிந்தவரை ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
யாரையும் யாருடனும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அது நம்மை நாமே நிராகரிப்பதற்குச் சமம். திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து முழு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும். அதுவே வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான தாரக மந்திரம்'' என்றார்.

படங்கள்: அஜய் ஜோசப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com