தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தமிழ் கற்க 40 நாள்கள் போதும்!

தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட கோவில் பட்டியைச் சேர்ந்த கனகலட்சுமி, சென்னையில் ஆசிரியர் பணியை மேற்கொண்டு வருகிறார்.

News image
Updated On :29 ஜூலை 2023, 6:30 pm

எஸ். சந்திர மௌலி

தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட கோவில் பட்டியைச் சேர்ந்த கனகலட்சுமி, சென்னையில் ஆசிரியர் பணியை மேற்கொண்டு வருகிறார். 'தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்'  எனும் தலைப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டு,  முனைவர் பட்டத்தைப் பெற்றவர் இவர்.  40 நாள்களில் தமிழ் கற்க உதவும் வகையில் நூல்களையும், யூ டியூப் காணொளிகளையும் உருவாக்கியதன் மூலம் கவனத்துக்குரியவராக இருக்கிறார்.

அவருடன் ஓர் சந்திப்பு: 

உங்களைப் பற்றி?

1996-ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட மண்டபம் ஒன்றியத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கினேன். அதன்பின்னர்,  பதவி உயர்வுகளைப் பெற்று ஆசிரியர் பயிற்றுநராகவும், இடைநிலை ஆசிரியராகவும்,  தலைமை ஆசிரியையாகவும் பணியாற்றினேன்.

தமிழுக்குத் தொண்டாற்ற,  2010- ஆம்ஆண்டில் உதவித் தொடக்கக் கல்விஅலுவலர் பதவி உயர்வை மறுத்தும்,  இடைநிலை ஆசிரியராகப் பதவியிறக்கமும்,  ஊதியக் குறைப்பும் பெற்று சென்னைக்கு பணியிட மாறுதலாகிவந்தேன்.  2018-இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் படித்து, முனைவர் பட்டமும் பெற்றேன் கற்றல் குறைபாடு குறித்து ஆராய்ச்சி செய்ய உங்களைத் தூண்டியது எது ?

தொடக்கத்தில் நானே ஒரு கற்றல் குறைபாடு கொண்ட மாணவியாக இருந்தேன். ஏழாம் வகுப்பில்தான் தமிழ் வாசிக்கவும் எழுதவும் கற்றேன். நான் படிக்கும்போது எப்படி சிரமப்பட்டேனோ,  வருத்தப்பட்டேனோ,  குழந்தைகளுக்கு சிரமமோ, வருத்தமோ இருக்கக் கூடாது என்ற எண்ணமே ஆராய்ச்சியை மேற்கொள்ளத் தூண்டியது. 

பள்ளிக் குழந்தைகளிடம் காணப்படும் கற்றல் குறைபாடுகள் என்ன? 

பொதுவாகவே தமிழ் படிப்பது கடினம் என்ற மாயை சூழ்ந்துள்ளது.  ஆங்கில மோகம் காரணமாக,  குழந்தைகளுக்கு ஆங்கில வழியில் பயிற்றுவிக்கவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். தாய் மொழி குறித்தான அவசியமும் விழிப்புணர்வும் பெற்றோர்களிடையே இல்லாதது மிகப் பெரிய காரணம்.   

ஒரு குழந்தை தாய்மொழியைப் படித்தால் மட்டுமே மற்ற மொழிகளை இலகுவாகப் படிக்க முடியும் என்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை. இதுவே கற்றல் குறைபாடுகளுக்கு அடிப்படை. 

இந்தக் குறைபாடுகளுக்கு என்ன தீர்வு? 

தாய் மொழி குறித்தான விழிப்புணர்வை பெற்றோருக்கே ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.  அதேசமயம், குழந்தைகளுக்கும் எளிமையாகத் தமிழைக் கற்பிக்கவும் வேண்டும். 

நூல்களை எழுதியது எப்படி? 

இறைவன் அருளால் ஆராய்ச்சி மேற்கொண்டு,  45 நாள்களில் தமிழை படிக்கவும், எழுதவும் முடியும் என்று நிரூபித்த முதல் ஆய்வாளர் என்பதில் எனக்கு மிகுந்த ஆத்ம திருப்தி உண்டு.  எனது ஆய்வுக் குறிப்புகளைப் பார்த்த, எனது உறவினர்கள் அளித்த ஊக்கமே நூல்களானது.

தமிழ் கற்றலுக்கு உதவும் காணொளிகளை உருவாக்கிய அனுபவம்?

தமிழ் மிக  எளிமையானது. தமிழில் மறைக்கப்பட்ட,  தவறாகப் பயன்படுத்தப்பட்ட உச்சரிப்புகள்,  வரிவடிவங்களை வெளிக்கொணர்ந்து எனது ஆய்வை மிகவும் வெற்றிகரமாக முடித்தேன்.  ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஐயம் ஏற்பட்டால் போக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவும்,  உலகம் முழுவதும் இருக்கும் குழந்தைகளுக்கு தமிழ் படிப்பதற்காகவும் ,  இல்லம் தேடிக்கல்வி,  எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்காகவும் காணொளிகளைத் தயாரித்தேன். நூலில் உள்ள கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்தால், அவற்றுக்குரிய காணொளிகளையும் காணலாம். 

வரவேற்பு எப்படி இருக்கிறது? 

தமிழ்நாட்டு அரசு கல்வித்துறையின் மூலமாக, பல மாவட்டங்களுக்குச் சென்று ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் அளித்தபோது, அவர்களும் மகிழ்ந்து பாராட்டினர்.

நூல்கள் பலமுறை மாணவர்களிடையே ஆய்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. 

2017- ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும்ஆசிரியர்களுக்கு எனது நூல்களும், பயிற்சியும் கொடுக்கப்பட்டன. மூன்று மாதத்தில் 1,56, 710 குழந்தைகளை ஒரே நேரத்தில் வாசிக்கச் செய்து உலகச் சாதனைக்கான முயற்சியை மேற்கொண்டோம்.

கரோனா காலத்தில், தூத்துக்குடிமாவட்டத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் இணைய  வாயிலாக 30 நாள்களில் தமிழ் கற்று கொடுத்து,  80 சதவீதம் குழந்தைளுக்கு தமிழ் எழுதவும்,  படிக்கவும் செய்தேன்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் நூல்கள், காணொளிகள் வாயிலாக 20 நாள்களில் 80 சதவீதம் மாணவர்கள் படிக்கவும், எழுதவும் செய்தனர். பல ஆசிரியர்கள் எனது முறையை பயன்படுத்தி, கற்பித்துவருவதே மகிழ்ச்சி.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக, பல நாடுகளின் ஆசிரியர்களுக்கும் பயிற்சிஅளித்துள்ளேன். மலேசியா நாட்டில் பினாங்கு பகுதியில் வாழும் ஆசிரியர்களுக்கு நேரில் சென்று பயிற்சியை  அளித்தேன். லண்டன், குவைத், துபை, ஆஸ்திரேலியா போன்ற நாட்டு மாணவர்கள் என்னிடம் எளிமையாகவும் விரைவாகவும் தமிழ் கற்றனர்.

எனது மின்னியல் நூல் வடிவமைத்தவுடன், விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினை சந்தித்தேன். அவர் வெளியிடும் நாளை எதிர்நோக்குகிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.