
தன் குழந்தை பசியில் அழுவதை எந்தத் தாயாலும் காண முடியாது. அப்படி இருக்கையில், முகம் தெரியாத குழந்தைகளின் அழுகையையும், பசியையும் போக்க முடியும் என்றால் அது தாய்மார்களுக்கு கிடைத்த வரம்தானே!'' என்கிறார் ஸ்ரீவித்யா.
கோவை வடவள்ளியைச் சேர்ந்த புரோகிதர் பைரவ் மனைவி ஸ்ரீவித்யா. இருபத்து எட்டு வயதான இளம்பெண். இவர்களுக்கு அசிந்த்யா என்ற நான்கரை வயது மகனும், ப்ரக்ருதி என்ற பதினைந்து மாத மகளும் உள்ளனர். 2022 மார்ச் முதல் தாய்ப்பால் தானம் செய்துவரும் வித்யா, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்களில் உலக சாதனையாகப் பதிவு செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
'எனது மகன் அசிந்த்யா பிறந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தாய்ப்பாலைத் தானமாக கொடுக்கலாம் என்பது எனக்குத் தெரியவந்தது. 2-ஆவது குழந்தை பிறந்தவுடன், தாய்ப்பால் தானம் அளிக்க வேண்டும் என நானும், எனது கணவரும் முடிவு செய்தோம். இதுகுறித்து இணையதளத்தில் தேடியபோதுதான் 'அமிர்தம் தாய்ப்பால் தானம் தொண்டு நிறுவனம்' குறித்து அறிந்தோம்.
எனது 2ஆவது குழந்தை பிறந்த 5-ஆவது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் செய்து வருகிறேன். 15 மாதங்களில் 163 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கியுள்ளேன்.
எனக்கு இரண்டு குழந்தைகளுமே அறுவைச் சிகிச்சையின் மூலம்தான் பிறந்தனர். என்னால் எழுந்து உட்கார முடியாத சூழ்நிலையில் கூட தாய்ப்பாலை சேமித்து வழங்க உதவியது என் குடும்பத்தினர்தான். ஒவ்வொரு நாளும் சேமிக்கப்படும் தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் வைத்து பராமரித்து, மாதத்துக்கு ஒருமுறை கோவை அரசு மருத்துவமனைக்கு அளித்து வருகிறேன். தாய்ப்பால் மருத்துவமனையில் பதப்படுத்தப்பட்டு, 3 மாதங்கள் வரை பயன்படுத்தப்படுகிறது.
ஒரு குழந்தையின் அழுகையையே நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஆனால், ஏராளமான குழந்தைகள் தாய்ப்பால் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அந்தப் பச்சிளம் குழந்தைகளின் அழுகையையும், பசியையும் நம்மால் போக்க முடியும் என்றால் இதைவிட ஒரு பேற்றை நாம் பெற்றுவிட முடியுமா?. தாய்ப்பால் தானம் என்பது பெண்களுக்கு இயற்கை அளித்த கொடை. எனவே, அனைத்து தாய்மார்களுமே தாய்ப்பாலை தானமாக அளிக்க முன்வர வேண்டும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.