சித்திர மேழி நந்தவனம்

ஏரிகாத்த ராமர் கோயிலால் புகழ்பெறும் மதுராந்தகத்தில்,  கடப்பேரி என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி அமைந்துள்ளது.
சித்திர மேழி நந்தவனம்
Updated on
2 min read


ஏரிகாத்த ராமர் கோயிலால் புகழ்பெறும் மதுராந்தகத்தில்,  கடப்பேரி என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி அமைந்துள்ளது.  இங்குள்ள கோயில் 'திருவெண்காடுடையார் கோயில்' என அழைக்கப்படுகிறது.  இக்கோயிலின் வாலாற்றுச் சிறப்பை அறிய உதவும் வகையில் 25-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

சுந்தரசோழனால் கட்டப்பட்ட இக்கோயில் இராஜராஜன், குலோத்துங்க சோழன், விக்கிரமசோழன், குலசேகர பாண்டியன், விஜயநகர மன்னர் போன்றவர்கள் போற்றி வழிபாட்டிற்கு தானம் அளித்தனர் என்பதை கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகிறது.  கருவறை அர்த்த மண்டபத்தரையில் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல்லில்  'ஸ்வஸ்திஸ்ரீ  இது சித்திரமேழி நந்தவனம்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக மேழி என்ற கலப்பையின் உருவமும் அதற்கு இருபுறங்களில் குத்துவிளக்கும், மேற்பகுதியில் குடையும், கோட்டு உருவமாக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

ஒரு நாட்டுக்கு இன்றிமையாதது வேளாண்மையாகும். வேளாண்மைக்கு மிகவும் அவசியமான கருவி ஏர் எனப்படும் கலப்பை ஆகும்.

'சுழன்றும் ஏர் பின்னது உலகம்' என்று திருவள்ளுவர் போற்றுகிறார். மனித வரலாற்றில் கலப்பை முக்கிய இடம் பெற்று வளங்குவதை தொல்லியல் ஆய்வுகளிலும் இலக்கியங்களிலும்,  கல்வெட்டுகளிலும் காணமுடிகிறது. 

வேளாண்மை செய்யும் வேளாளப் பெருமக்கள் தங்களுக்குள் ஒரு குழு ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அக்குழு 'சித்ரமேழி பெரிய நாட்டார்' எனக் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. அவர்களது கொடியில் 'ஏர் சின்னம்' பொறிக்கப்பட்டிருந்தது. ஏர் என்னும் கலப்பையை தெய்வமாக வழிபட்டனர்.

இவர்களது பெருமைகளை திட்டக்குடியில் உள்ள ராஜாதி ராஜ சோழன் காலத்து கல்வெட்டு புகழ்ந்து கூறுகிறது. தாமரைப்பாக்கம் கல்வெட்டில் 'ஸ்ரீ பூமிதேவிக்கு மக்களாகி அறம் வளர,  கலி மெலிய,  செங்கோலே தெய்வமாகத் திசையனைத்துஞ் செவிடு படாமை சித்திரமேழி தம்மம் இனிது நடாத்தும் ஸ்ரீராஜேந்திர சித்ரமேழிப் பெருக்காளாரோம்'  எனப் புகழ்ச்சியாகக் கூறிக் கொள்கின்றனர்.

சித்ரமேழிக் குழுவின் கீழ்வரும் கோயில்கள் ஊர்  அனைத்தும் சித்ரமேழி என்று சேர்த்து வழங்கப்படுகின்றன. சித்ரமேழி பெரிய நாடு, சித்ரமேழி நல்லூர், சித்ரமேழி விடங்கர்,  சித்ரமேழிச் சதுர்வேதி மங்கலம் என்று சிறப்புடன் அழைக்கப்படுவதைக் காணலாம். திரிசூலம் கோயில் கல்வெட்டில் சித்ரமேழி முனையதரையன் என்பவர் கோயிலுக்கு தானமளித்த செய்தி காணப்படுகிறது.

திருக்கோயிலூர், பிரான்மலை போன்ற ஊர்களில் காணப்படும் கல்வெட்டுகளும் சித்ரமேழியின் சிறப்பை உணர்த்துகின்றன. 

தொண்டை நாட்டுப்பகுதியில் செங்கல்பட்டு அருகில் உள்ள ஆனூர் பெருமாள் கோயில் 'சித்ரமேழி விண்ணகர் கோயில்' என அழைக்கப்படுகிறது.   அரசன் கழனி என்ற ஊரில் சித்திரமேழிப் பெரும்பள்ளி என்ற சமண கோயிலுக்கு நிலம் அளிக்கப்பட்ட செய்தியை குறிப்பிடும் கல்வெட்டில் கலப்பை - சூரியன் - சந்திரன், பூர்ணகும்பம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன.  பொன்னேரி, பெருநகர், மானாம்பதி, மப்பேடு போன்ற ஊர்களில் உள்ள கோயில்களிலும் கலப்பையின் புடைப்புச் சிற்ப வடிவங்களாகக் காணலாம்.

கடப்பேரி திருவெண்டுகாட்டுடையார் கோயிலின் வளாகத்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு 'சித்ரமேழி நந்தவனம்'  இருந்திருக்கிறது. அதனை சித்ரமேழி குழுவினர் போற்றி வந்துள்ளனர் என்ற அரிய செய்தியினை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com