

கோயில்களும், திருவிழாக்களும் மனித வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டவை. கூடி வாழும் சமூக அமைப்பை, சகிப்புத் தன்மையை, தனிமனிதராக இருக்கும்போதும், மனிதத் திரளில் கலக்கும்போதும் நமது மனநிலையை, சிந்தனை ஓட்டங்களை சீராக வைத்திருக்கும் பயிற்சியை நமக்கு கற்றுத் தருபவையாக விளங்குபவைதான் திருவிழாக்கள்.
கிராமக் கோயில்கள் நமது பண்பாட்டையும், கலாசாரத்தையும் இளம்தலைமுறையினருக்குக் கற்றுத் தரும் தர்ம அடையாளங்களாகவே விளங்குகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, புதுச்சேரி பகுதியில் உள்ள கோயில் விழாக்கள் இன்றளவும் நடத்தப்பட்டுவருகின்றன. இவற்றில் முக்கியக் கோயிலாக இருப்பது பிள்ளையார்குப்பம் அருள்மிகு கூத்தாண்டவர் கோயில்.
கூத்தாண்டவர் என்றால் கூவாகம்தான் நினைவுக்கு வரும். நாடு முழுவதிலும் இருந்து குவியும் திருநங்கையர்கள் நினைவுக்கு வருவர். ஆனால், புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூர் பகுதியில் உள்ள பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவிலோ, வித்தியாசத்துக்கு இடமிருக்கிறது. ஆண்களே பெண்கள் வேடமிட்டு தாலி கட்டி, அதை அறுத்து எரிந்து அழும் நிகழ்ச்சி இங்கும் நடக்கிறது. ஆனால், இதையெல்லாம்விட முக்கியமானதாக இருப்பது இளம்தலைமுறையை பண்பாடு மிக்கவர்களாக மாற்றும் பாரதம் படித்தல் நிகழ்ச்சியாகும்.
""ஆண்டுதோறும் ஏப்ரலில் நடைபெறும் பெளர்ணமித் திருவிழாவில் பாரதக் கதைகள் மூலம் குழந்தைகளுக்கு பண்பாட்டையும், வாழ்க்கை நெறிகளையும் கற்றுத் தருவதுதான் இந்தத் திருவிழாவின் முக்கிய நோக்கம்'' என்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த தரணி.
கூத்தாண்டவர் கோயிலில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு மகாபாரதத்தின் அடிப்படையிலே தல வரலாறும் எழுதப்பட்டுள்ளது. சித்திரை அமாவாசையில் கொடியேற்றி, பெளர்ணமியில் முக்கிய விழாவை நடத்துகின்றனர். அனைத்து சமுதாயத்தினரும் முக்கியத்துவம் பெறும் வகையில் விழா நிகழ்ச்சிகள் பிரித்து நடத்தப்படுகின்றன.
கிராமத்து மண்ணுக்குரிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றாலும், மிக முக்கியத்துவம் பெறுவது பாரதம் படித்தலாகும். விழா தொடங்கி நிறைவடையும் வரையில் தினமும் மாலையில் பாரதம் படிப்பதை கிராமத்தில் அனைவரும் கேட்க வேண்டும் என்பதே இங்கு எழுதப்படாத சட்டம்.
இந்தக் கதையை கூறுபவர்கள் மெத்தப் படித்தவர்களோ, மேதாவிகளோ இல்லை. கிராமத்தில் அனுபவம் வாய்ந்த வாக்கு வன்மைமிக்க பெரியவர்கள்தான்.
""கூத்தாண்டவர் ஏன் கெளரவர்களுக்காக தன்னையே பலி கொடுக்க முன்வந்தார். எதிரியே ஆனாலும் வாக்குக் கொடுத்துவிட்டால், அதை மறவாமல் கடைப்பிடிக்க வேண்டும். தர்மத்தை மீறினால் எத்தகைய தண்டனையை இயற்கை வழங்கும் என்பன போன்ற நீதிபோதனைகளை மகாபாரதம் மூலம் விளக்குவதுதான் விழாவின் முக்கிய நோக்கம்.
இங்கு உள்ள ஆண்களே முதல் நாளில் தாலி கட்டி மறுநாளில் அறுத்து ஒப்பாரி வைக்கும் பழக்கமும் உள்ளது. ஒருநாள் பெண்ணாக வாழும்போது அவர்களை மதிக்கும் பண்பு மனதில் பதியும் நிலை ஏற்படுவதையும் அப்பகுதி பெரியவர்கள் முக்கிய அம்சமாகக் குறிப்பிடுகின்றனர்.
தொழில்நுட்பம் வளர்ந்த நிலையிலும் பிள்ளையார்குப்பத்தில் இன்னும் பாரதம் படிக்கும் பழக்கமும், அதில் நீதிப் போதனைகள் இடம் பெறுவதும் இப்பகுதியில் குற்றவழி செல்லும் இளைஞர்களை தடுக்கும் தற்காப்பு அரணாக இருப்பதையும் கூறி பெருமிதப்படுகிறார்கள். மேலும் கிராமக் கோயில் பூசாரி, கரகக்காரர்கள், சிலை வடிப்பவர், ஈட்டி எடுப்பவர், கூத்தாடி என பல கலைஞர்களும் சமமாக கெளரவிக்கப்படுவது விழாக்களில் முக்கிய இடத்தை வகிக்கிறது.
இதேபோலத்தான் புதுச்சேரியின் ஊரகப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கோயில்களில் அர்ஜூன தபசு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. தற்கால இளைஞர்களுக்கு வாழ்வியல் தர்மங்களைப் போதிக்கும் விழாக்களாகவே கோயில் விழாக்கள் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டுகிறார்கள் இங்குள்ள பெரியவர்கள்.
படங்கள்: கி.ரமேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.