புத்தகங்களே மொய்..!

கோவையில் நடைபெற்ற ஓர் திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புத்தகங்களே மொய்..!
Published on
Updated on
1 min read

கோவையில் நடைபெற்ற ஓர் திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  பரிசுப் பொருளாக மணமக்கள் பெற்றது புத்தகங்கள்தான்! 

கோவை  டவுன் ஹால் பகுதியைச் சேர்ந்த மளிகை வியாபாரி ஜவஹர் சுப்பிரமணியம்.  இவர் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவருக்கு,  பத்மாவதி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகள் எஸ்.வி.ஸ்வர்ணப்ரபா எம்.கே.திருவிக்ரம் திருமணம் மே 31இல் நடைபெற்ற நிலையில், இவர் அச்சடித்த திருமண அழைப்பிதழ் அனைவரது மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளது.

அந்த அழைப்பிதழில், "விலைமதிப்பில்லா உங்கள் அன்பையும், அன்பளிப்பையும் புத்தகங்களாய் தாருங்கள். 10, 12-ஆம் வகுப்பு கைடுகள், நோட்டு புத்தகங்கள், வரலாற்று நூல்கள், இந்திய ஆட்சிப் பணிக்கான புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து அன்பை வெளிப்படுத்தலாமே!' என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், "இந்தப் புத்தகங்கள் பழங்குடியினர்,  மலைவாழ் மாணவர்களுக்காகப் பெறப்படுகிறது' என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து, ஜவஹர் சுப்பிரமணியம் கூறியதாவது:

""ஏழைக் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனாலும், கைடுகள், நோட்டு புத்தகங்கள்,  வடிவியல் பெட்டிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்கு அந்தக் குழந்தைகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். நகரப் பகுதிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஓரளவு உதவிகள் கிடைத்து விடுகின்றன. ஆனால், மலைவாழ் குழந்தைகளுக்கு அப்படி கிடைப்பதில்லை. இதனால்,  சிறுதுளி, கலாம் அறக்கட்டளை மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகங்கள் போன்ற பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறோம்.

என் மகளின் திருமணத்தில்  அன்பளிப்புக்கு பதிலாக அனைவரிடமும் புத்தகங்களைப் பெறலாம் என்ற எண்ணம் தோன்றியது.  ஒரு சிறிய முயற்சியாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அழைப்பிதழில் புத்தகங்கள் வழங்குமாறு அச்சடித்து உறவினர்கள், நண்பர்களிடம் அளித்தோம். ஆரம்பத்தில் 100, 200 புத்தகங்கள் வந்தால்கூட போதும் என்றுதான் நினைத்தோம். ஆனால் ஆச்சரியப்படுத்தும் வகையில் பேனா, பென்சில், வரலாற்று நூல்கள், கவிதை புத்தகங்கள், தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகள், கைடுகள், இந்திய ஆட்சிப் பணிக்கான புத்தகங்கள் என சுமார் 1,700 புத்தகங்கள் அன்பளிப்பாக வந்துள்ளன. 

இவை அனைத்தையும் ஆனைகட்டி,  வால்பாறை பகுதிகளில் உள்ள பழங்குடியின குழந்தைகளுக்கு வழங்கவுள்ளோம். வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள எனது நண்பர் வீட்டுத் திருமணத்திலும் இதுபோன்ற நிகழ்வை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவே நிகழ்வுக்கான வெற்றி. அங்கு கிடைக்கும் புத்தகங்களும் மலைவாழ் குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும்''  என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com