வாகனங்களில்..!

உயர்நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களையே அலுவலகங்களாக்கி, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் சாமானியர்களுக்கு உதவி வருகின்றனர்.
வாகனங்களில்..!
Published on
Updated on
1 min read

உயர்நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களையே அலுவலகங்களாக்கி, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் சாமானியர்களுக்கு உதவி வருகின்றனர்.
கடவுச்சீட்டு, அரசிதழில் பெயர் மாற்றம், கையெழுத்துகள் மாறுதலுக்கான சான்றொப்பம் உள்ளிட்டவற்றுக்காகவும், அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காகவும், மத்தியமாநில அரசுத் துறைகளில் விண்ணப்பங்களை அளிப்பதற்காகவும், நகல் சான்றிதழ்களில் சான்றொப்பம் இடுவதற்காகவும் "நோட்டரி பப்ளிக்' வழக்குரைஞர்களிடம் மக்கள் கையெழுத்து பெற நேரிடும்.
நீதிமன்றப் பணி, மாலையில் வழக்காடிகளுடன் சந்திப்பு, பொதுநலச் சேவைகள்.. என்று எப்போதும் "பிஸி'யாக இருக்கும் வழக்குரைஞர்களிடம் கையெழுத்து பெறுவது என்றால் சாதாரண காரியமா? அதுவும் சென்னை மாநகரில் என்றால் சொல்லவா வேண்டும் என்று நினைக்கலாம்.
ஆனால், தொழிலாளர்கள், சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் குறைந்தக் கட்டணத்தைப் பெற்றுகொண்டு சேவையாற்றி வருகின்றனர் என்றால் ஆச்சரியம்தானே!
நீதிமன்ற நாள்களில் பாரிமுனையில் உள்ள உயர்நீதிமன்ற வளாகத்திலும், எதிரேயும் சாலையோரத்தில் கார்கள், டூவீலர்களில் குடைகளைக் கட்டி "நோட்டரி பப்ளிக்' வக்கீல்கள் என பெயர்ப் பலகைகளை மாட்டிக் கொண்டு நடமாடும் வழக்குரைஞர் அலுவலகம்போல், சுமார் 100 வழக்குரைஞர்கள் முகாமிட்டிருப்பர்கள். இவர்களில் பலருக்கு அலுவலகம் இருந்தும் வாகனங்களில்தான் முகாம்.
காலை 9 மணிக்கு தங்களது டூவீலர்கள், கார்களில் வரும் இவர்கள் தாங்கள் வழக்கமாக முகாமிடும் இடத்தில் வாகனங்களை நிறுத்திவிடுவர். வாகனங்களில் உள்ள நிழற்குடைகள், பெயர்ப் பலகைகள் போன்றவற்றை சில நிமிடங்களில் விரித்துவிடுவர். தங்களது பணிகளைத் தொடங்கிவிடுவர்.
கார்கள் வைத்துள்ளோர் அதிலேயே கணினிகள் பிரத்யேகமாகப் பொருத்தப்பட்டிருக்கும். மாலை 6 மணி வரை இவர்கள் முகாமிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு "நோட்டரி பப்ளிக்' முறையில் வழங்கப்படும் சான்றிதழ்களை வழங்குகின்றனர்.
வழக்குகள் இருக்கும்போது, வாதிடச் செல்லும் இவர்கள் மற்ற நேரங்களில் சான்றிதழ்கள் வழங்குவதில் "பிஸி'தான். உதவியாளர்கள், தட்டச்சு செய்வோரும் வாகனங்களிலேயே இருக்கின்றனர்.
பாமர மக்கள் எனில், இவர்களே விண்ணப்பங்களை எடுத்தல், பூர்த்தி செய்தல், தபால் அனுப்புதல் போன்ற பணிகளையும் வழக்குரைஞர்களே மேற்கொண்டுவிடுகின்றனர் என்பது வியக்கவே வைக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயனிடம் கேட்டபோது:
""சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 ஆயிரம் வழக்குரைஞர்கள் பணியாற்றுகின்றனர். சாலையோரத்தில் அமரக் கூடாது, பெரிய அளவில் போர்டுகள் மாட்டக் கூடாது.. என்று சட்டத் தொழிலில் விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், சுமார் 100 பேர் வாகனங்களில் போர்டுகளை வைத்து, பணியாற்றுகின்றனர்.
இவர்கள் சேவை நோக்கோடு செயல்படுவதால், பிரச்னை இல்லை. பிரச்னை என்று வந்தால், நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com