ஆடல் கலை... தெய்வம் தந்தது..!

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட வாலாஜாபாத் அருகேயுள்ள மதூர் கிராமத்தைச் சேர்ந்த முகுந்த ராமானுஜ தாசர்.
ஆடல் கலை... தெய்வம் தந்தது..!
Published on
Updated on
2 min read


காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட வாலாஜாபாத் அருகேயுள்ள மதூர் கிராமத்தைச் சேர்ந்த முகுந்த ராமானுஜ தாசர். இவரது தந்தை கிருஷ்ணன் பெருமாள் கோயில்களில் பஜனைப் பாடல்கள் பாடும் குழுவில் இருந்ததால், ஒன்பதாம் வயதிலிருந்தே பாடல்களைப் பாடியும், ஆடியும் தன்னை ஒரு நர்த்தனம் ஆடக் கூடிய பாகவதராகவே மாறியிருக்கிறார்.

ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்ட இவருக்கு ஓரளவு படிக்கத் தெரியும். நண்பர்களின் உதவியுடன் பெருமாளைப் புகழ்ந்து 30-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி அவற்றை புத்தகமாகவுமாக்கி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அதை வெளியிட்டும் இருக்கிறார்.

அவருடன் ஓர் சந்திப்பு:

""எனது இயற்பெயர் கி.முருகன். வயது 65-ஐ தொட்டுவிட்டது. ஆனால் மனசு 25 -ஆகத்தான் இருக்கிறது.

சிறுவயது முதலே பக்தி இசைப்பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தால் யாரிடமும் பயிற்சி எடுத்துக் கொள்ளாமல் என்னிடம் பாட்டும், நடனமும் அதுவாகவே வந்து ஒட்டிக் கொண்டது.

தொழுப்பேடு ரகுநாத ராமானுஜதாசர் என்பவர் , அருமையான பக்திப் பாடல்களைப் பாடும் எனது குருநாதர். அவரிடம் ஒருநாள் நானும் உங்களைப் போல ராகத்தோடு பாட வேண்டும் என்று எனது ஆசையை அவரிடம் சொன்னேன். அவரது காலில் விழுந்து ஆசி பெற்றேன். அவர் என்னை ஆசீர்வதித்தது மட்டும் இல்லாமல் பாடல்களின் ராகங்களையும் கற்றுக் கொடுத்தார்.பகவானின் அருளாலும்,குருநாதரின் ஆசியாலும் பலரும் பாராட்டக் கூடிய ஒரு நர்த்தனப் பாகவதராகவே மாறியிருக்கிறேன்.

இதுவரை எத்தனை கோயில்களுக்கு சென்று நர்த்தனம் ஆடியிருக்கிறீர்கள்?

கடந்த 30 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் எனது பஜனைக் குழுவினருடன் சென்று நர்த்தனம் ஆடியிருக்கிறேன். பெருமாள் கோயில்களில் நடைபெறும் தேர்த் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள்,சுவாமி வீதியுலாக்கள், கருட சேவை புறப்பாடுகள் என எல்லாத் திருவிழாக்களுக்கும் எனது குழுவினருடன் சென்று நர்த்தனம் ஆடுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறேன்.

எந்தக் கோயிலாக இருந்தாலும் யாரிடமும் கட்டணம் பெறுவது இல்லை. பெருமாள் எங்களுக்கு குல தெய்வம், பெருமாளின் புகழை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று என் தந்தை இட்ட கட்டளையை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன்.

பக்தர்கள் எனது மெய்சிலிர்க்க வைக்கும் நடனத்தையும், தோற்றத்தையும் பார்த்து வியந்து காணிக்கையாகக் கொடுப்பார்கள்.

நானும் நலமோடு வாழ மனப்பூர்வமாக இரு கைகளையும் தூக்கி ஆசீர்வதிப்பேன். விழா முடிந்ததும் சேர்ந்த தொகையை எனது குழுவில் உள்ளவர்களும், நானும் பிரித்து எடுத்துக் கொள்வோம்.

பெருமாள் கோயில்களுக்கு மட்டும் தான்செல்வீர்களா?

108 திவ்ய தேசங்களில் இதுவரை 80-க்கும் மேற்பட்டவற்றுக்கு திருவிழாக் காலங்களில் சென்று நர்த்தனம் ஆடியிருக்கிறேன். தமிழ்நாட்டைத் தவிர திருப்பதி,கேரளா,நேபாளம், அயோத்தி, மலேசியா உள்பட முக்கிய பகுதிகளுக்கும் சென்றிருக்கிறோம். எங்கு சென்றாலும் பல பக்தர்கள் வந்து, "யூடியூப்பிலும்,தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறோம்' என்பார்கள். சிலர் "செல்பி' எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாலும்,எனது நடனத்துக்கு பலரும் மீம்ஸ் போட்டதாலும் இன்று நான் மிகவும் பிரபலமாகி விட்டேன்.

பெயர் மாற்றத்துக்கு காரணம்?

முருகனாக இருந்த எனது பெயர் முகுந்த ராமானுஜ தாசர் என மாற்றம் செய்துள்ளேன். ஸ்ரீபெரும்புதூர் எத்திராஜ ஜீயரால் முத்திரை ஸ்தானம் பெற்றவன். அதனால் பெருமாள் கோயில்களைத் தவிர வேறு கோயில்களுக்கு செல்லுவதில்லை.

வைகுண்ட ஏகாதசி, மார்கழி, புரட்டாசி மாதங்களில் எனது குழுவினருடன் பெரும்பாலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து விடுவோம். பெருமாள் கோயில்கள் எந்த ஊரில் இருந்தாலும் பஜனை செய்ய அழைத்தால் போய் விடுவேன். வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் அழைத்தாலும் செல்வது எனவும் முடிவு செய்திருக்கிறேன்.

உங்கள் நடனத்தின் சிறப்பு என்ன?

சிறு வயதில் கோயில் வாசல்களில் பால்,தயிர் விற்றேன். இப்போது எனது நடனம் மிகவும் பிரபலமாகி விட்டதால் அவற்றையெல்லாம் விட்டு விட்டேன்.தொடர்ந்து 3 மணி நேரம் வரை சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காமல் நடனம் ஆடுவேன். தொடர்ந்து 10 நிமிடம் ராட்டிணம் சுற்றுவது போன்று கழுத்தில் மாலைகளை அணிந்து கொண்டே வேகமாக சுற்றுவதும் எனது சிறப்பு. அப்படி ஆடும் போது எனக்கு தலை சுற்றல் வராது. இது இறையருள் எனக்கு கொடுத்தபேரருள்.

இளையதலைமுறைக்கு நீங்கள் சொல்வது?

படிக்காத பாமரனாகிய நானே பெருமாளைப்புகழ்ந்து 30-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறேன். அவற்றை ராகத்தோடு பாடலாம். அந்தப் புத்தகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்டவற்றை அச்சடித்து பக்தர்களுக்கு இலவசமாக கொடுத்தும் வருகிறேன். இந்தப் பணி தொடரும். படிக்காத நானே ஒரு சில சாதனைகளை செய்திருக்கிற போது, படித்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு சாதனையாவது செய்தே ஆக வேண்டும்.

"தடம் பார்த்து வாழாமல் தடம் பதித்து நடக்க வேண்டும்' என்பதே என் ஆசை. இந்தக் கலை அழிந்து விடாமலிருக்க ஆடவோ,பாடவோ யார் விரும்பினாலும் அவர்களுக்கு நான் இக்கலையை கற்றுத்தரவும் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com