தீபாவளி ட்ரெய்லர்

தீபாவளி, பொங்கல் போன்ற  பண்டிகை நாள்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று.
தீபாவளி ட்ரெய்லர்
Updated on
4 min read

தீபாவளி, பொங்கல் போன்ற  பண்டிகை நாள்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று.

குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த நாளில் வெளியாவதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்களின் படங்கள் திரைக்கு வராவிட்டாலும்,  கார்த்தி, லாரன்ஸ், விக்ரம் பிரபு,  பூ ராமு ஆகியோரின் நடிப்பில் படங்கள் வெளிவரவுள்ளன. இந்த வருட தீபாவளிக்கு 'ஜப்பான்', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'ரெய்டு', 'கிடா' 
ஆகிய படங்கள் வெளி வருவது சிறப்பு.  

தீபாவளி ரிலீஸ் ஆக என்னென்ன படங்கள் வருகின்றன என ஒரு க்விக் ப்ரிவ்யூ இதோ... 

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'ஜிகர்தண்டா'. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற பெயரில் எடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஏறக்குறைய 10 ஆண்டுகள் கழித்து இந்தப் படம் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் இரண்டாவது பாகமாக உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும்  முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  வரும் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ள இந்தப் படத்தை அவரே தயாரித்தும் உள்ளார். கடந்த 1997-ஆம் ஆண்டையொட்டிய கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. 

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.  இந்தப் பாடலை தன்னுடைய மகள் தீயுடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது. 

திரைப்பட தயாரிப்பாளரான எஸ்ஜே சூர்யா மற்றும் கேங்ஸ்டர் லாரன்ஸ் இடையில் நடக்கும் சம்பவங்களை இந்தப் படம் மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

இதுகுறித்து நடிகர் லாரன்ஸ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டவர்கள் தங்களது சுட்டுரை பக்கங்களில் அறிவித்துள்ளனர். வழக்கமாக முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்களின் தமிழக வெளியீட்டு உரிமைகளை ரெட் ஜெயண்ட் கைப்பற்றிவரும் சூழலில் ஜிகர்தண்டா 2 படத்தின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் லாரன்ஸ், '' இந்தப் படத்தின் முதல் பாகத்திலேயே நடிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை தான் தவறவிட்டதாகவும் ஆனால் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான அந்தப் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டாலும் தற்போது 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்துள்ளது மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது'' என அவர் குறிப்பிட்டிருந்தார்.

 ஜப்பான்

கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ராஜு முருகன் இயக்கி உள்ளார். இதில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கின்றார். நகைக்கடை கொள்ளைகளை அரங்கேற்றிய திருவாரூர் முருகனின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.  இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகிற நவம்பர் 10-ந் தேதி ஜப்பான் திரைக்கு வர உள்ளது. இது நடிகர் கார்த்தியின் 25-ஆவது படமாகும்.  கார்த்தி ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். இயக்குநர் விஜய் மில்டன், பிரபல தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

இந்த படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு, அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  

''ஒவ்வொரு முறையும் நான் ஒரு படத்திற்கான கதையை முடித்தவுடன் அதை தனித்துவமான படமாக உருவாக்கும் பாணிக்குத்தான் செல்வேன். சினிமாவில் என்னை வசீகரித்தவர் சார்லி சாப்ளின். இப்போது அந்த வழியில் கார்த்தி என்னுடைய இலக்கிய சிந்தனைகளுடன் கூடிய எண்ணங்களை உற்சாகப்படுத்துவது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. 

நிறைய பேர் இலக்கியத்தை சினிமாவுடன் இணைத்து ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள். ஆனால் கார்த்தி சார் வட்டியும் முதலும் புத்தகத்திலிருந்து சில முக்கியமான விஷயங்களை இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். 'பருத்தி வீரன்' படத்தைப் போன்று ஜப்பான் கதாபாத்திரமும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். கார்த்தி போன்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நடிகருடன் அவரது 25-ஆவது படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார் ராஜூமுருகன்.

ரெய்டு

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் உருவாகியுள்ள படம் 'ரெய்டு' இப்படமும் தீபாவளி ரேஸில் இடம் பிடிக்கிறது. 'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களின் பரவலான வரவேற்பு மூலம் மகிழ்ச்சியடைந்துள்ள விக்ரம் பிரபு, இந்தப் படத்தையும் பெரிதும் எதிர்பார்க்கிறார்.  முந்தைய இரண்டு படங்களின் வெற்றியால் 'ரெய்டு' படம்  இன்னும் அதிக அளவிலான பார்வையாளர்களைக் கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். 

சமீப காலமாக வெளியாகியுள்ள விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்று வருவதால் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது. இது 'ரெய்டு' படத்திற்குமான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். 

மேலும், விக்ரம் பிரபுவின் ஸ்டைலான தோற்றத்தாலும், நேர்த்தியான டீசராலும் இப்படம் ஏற்கனவே அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. குடும்ப பார்வையாளர்கள் மற்றும் சினிமா விரும்பிகளுக்கு ஏற்ற வகையில், அனைத்தும் இந்தப் படத்தில் இருப்பதால் நிச்சயம் தீபாவளி விடுமுறைக்கு இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இருக்கை நுனியில் அமரும்படியான ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக 'ரெய்டு' உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கார்த்தி எழுதி இயக்குகிறார்.  எஸ்.கே. கனிஷ்க் மற்றும்  மணிகண்ணன் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், செளந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதிரவன் ஒளிப்பதிவும், மணிமாறன் படத்தொகுப்பும், கே.கணேஷ் ஆக்ஷன் காட்சிகளையும் கவனித்திருக்க இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 

கிடா 

ஸ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட்  இயக்கத்தில், உருவாகியுள்ள படம் 'கிடா'.  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் நிறைவான திரைக்கதை அமைப்பை கொண்டு உருவாகியுள்ளது. அதற்கு காரணம் சர்வதேச மேடைகளை இப்படம் அலங்கரித்துப்பதுதான்.  திரைப்படத்தின் டிரெய்லர் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் இப்படம் தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கிடா படம் உலகளவில் பல சர்வதேச  திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களை குவித்துள்ளது. இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு தீபாவளி திருநாளில் நடைபெறும் இந்தக்கதை, தீபாவளி நன்நாளில் வெளியாவதில் படக்குழு பெரும் உற்சாகமாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com