

"உணர்ச்சியாக சந்தோஷமாக அதே நேரத்தில் சிந்திக்கக் கூடிய படமாகவும் "சூரகன்' வந்திருக்கிறது. திரைக்கதை எழுதும் போது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதையே சினிமாவாக மாற்றும் போதும் அனுபவித்தேன். அடி மட்டத்திலிருந்து சினிமா பார்த்து முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். மக்களின் அவலம் புரியும். துயரம் தெரியும். பயணங்களின் அருமை புரியும். நமது இயலாமை, இல்லாமைகளை உணர்ந்திருக்கிறேன். என் சினிமா உணர்வுப்பூர்வமாகவும், இயல்பாகவும் அமைய என் அனுபவங்களே உதவுகின்றன. தொட்டு உணர்கிற மாதிரி உணர்வுகள் என் சினிமாவில் வந்தால் அதை விட கொடுப்பினை வேறு இல்லை.'' ஆர்வமாக பேசுகிறார் இயக்குநர் சதீஷ் ஜி.குமார். குறும்பட உலகத்தில் இருந்து கோடம்பாக்கம் வருகிறார்.
குறும்பட உலகத்தில் இருந்து வருகிறீர்கள்... வாழ்த்துகள்...
நன்றி. சென்னைதான் நமக்கு எல்லாம். ஒரு கட்டத்தில் படிப்புக்காக யு.கே. போய் விட்டேன். அங்கே எம்.எஸ். படிப்பு. கேமிரா, சினிமா, படப்பிடிப்புத் தளம் என எப்போதும் மனசுக்குள் ஒரு அலையடிக்கும். அந்த ஆர்வத்தில் நானே ஒரு கேமிரா வாங்கி, அங்குள்ள பத்திரிகைகளில் பகுதி நேரப் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினேன். அதன் பின்னர், சினிமாவின் ஏக்கத்தை போக்க நானே, சில குறும்படங்கள் எடுத்தேன். அந்த அனுபவத்தில் ஆங்கிலத்தில் ஒரு சினிமாவே எடுக்க வேண்டிய நேரம் வநத்து. "நெவர் எண்டிங் லவ் ஸ்டோரி' என்ற பெயரில் ஒரு படம் எடுத்தேன். படத்துக்கு ஏக பாராட்டுகள். அங்கிருந்து புறப்பட்டு இங்கே வந்து சேர்ந்தது பெரும் பயணம். சும்மா இருக்கிற நேரத்தில் கதைகள், புத்தகம், சினிமா என தனி உலகம் இருந்தது. அப்போதுதான் குறும்படங்களுக்காழ உலகம் தமிழ் சினிமாவில் விரிந்திருந்தது. தமிழிலும் முழு நீள படம் இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கேயும் சில குறும்படங்கள் எடுத்தேன். சினிமாவுக்கான ஸ்க்ரிட்டுக்கு, எதையும் கொஞ்சம் மேலே இருந்து பார்க்க வேண்டும் என சொல்லுவார்கள். இந்தக் கதைக்காக என் வாழ்க்கையையும் மேலே இருந்து பார்த்தேன் இப்போது ஆல் இஸ் வெல்.
சூரகன்... இந்த தலைப்பு ஏன்...
சாமானியன் ஒருவன் சூரனாக மாறுவதுதான் ஒன் லைன். நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு ஆறாத வலி இருந்துக் கொண்டே இருக்கும். அந்த வலி ஏற்படுத்தும் பாதிப்புகள் நமக்குள் ஒரு கோபத்தை சாம்பல் மூடின தணல் மாதிரி பத்திரமாக வைத்திருக்கும். அந்தக் கோபத்தின் தணல் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம். ஆனால், க்ரைம் த்ரில்லரில் திரைக்கதை ரொம்பவே முக்கியம். படத்தின் மேக்கிங் இன்னும் பலம். நம்மைச் சுற்றி நடந்து வருகிற சம்பவங்கள்தான். அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை கடந்து விடுகிற மனசு, எதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி கொள்ளும்.அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை. போராடுவதும் வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. அன்பும், போராட்டமும்தான் இந்த மானூடத்தின் நிரந்தரம். நல்லவன் கெட்டவனாகிறான். கெட்டவன் நல்லவனாகிறான். எதை வெறுக்கிறோமோ, அதை நேசிக்கிறோம். எதை விரும்பினோமோ. அதை வெறுக்கிறோம். ஒருவனை உயரத்தில் வைத்து இன்னொருவனை குழிக்குள் தள்ளி, கேட்காததை கொடுத்து கேட்டதை மறுத்து விளையாடுகிற இந்த காலம் ஒரு தனி மனிதனுக்கு பரிசளித்தது என்ன என்பதுதான் இங்கே கதைக்களம். போலீஸ் பின்னணியில் கதை பயணமாகும்.
போலீஸை விமர்சித்து வருகிற கதைகள் இங்கே ஏகம்...
ரத்தம் வழிய வழிய... நான் பேர் அடித்துக் கொள்ளும் போது ஒதுங்கி ஒளியும் போலீஸ்காரர்கள் எப்படி உருவாகிறார்கள். சாலைகளிலும் கடைகளிலும் அனுதினம் பார்க்க நேரிடும் போலீஸ்காரர்களை கேவலமாக திட்டும் நமக்கு, பெரும் அரசியல் பேரங்களிலும் கலவரங்களிலும் கொலைகளிலும் பங்கு போட்டு நடத்தும் காவல் அதிகாரிகளைத் தெரிவதே இல்லை. ஒரு குற்றம்தான் வாழ்க்கையின் பிரதானம். நல்லது, கெட்டது அங்கேதான் ஒவ்வொரு மனிதனுக்கும் தொடங்குகிறது. குற்றத்தின் உருவாக்கம் தொடங்கி, அதன் சம்பவங்கள் வரை எல்லாமே இதில் இருக்கும். போலீஸ் கதைகளில் 100க்கு 80 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது. அதை ரிப்பீட் செய்ததில் சில படங்கள் தோற்றிருக்கலாம். திரைக்கதை எழுதும் போதே, சேகரித்த கதைகளே எக்கச்சக்கம் இருக்கும். நானே போலீஸ் ஸ்டோரியில் புதிதாக பத்துக் கதைகளை இயக்க முடியும். ஒரு ஆளை நாம் சந்திக்க மட்டும்தான் செய்வோம். போலீஸ் அந்த ஆளை ஊடுருவிப் பார்க்கும். விட்டுத்தான் பிடிக்கும். நீங்கள் போலீஸில் நல்லவரையும், கெட்டவரையும் பார்த்திருக்கலாம். இது அப்படி இரண்டு பக்கமும் இருக்கிறது.
ஒளிப்பதிவாளராகவும் இந்தப் படத்தில் இருக்கீங்க..
எப்போதும் ஒளிப்பதிவு, கேமிரா, வெளிச்சம் என்றுதான் மனசுக்குள் அலை அடிக்கும். ஒரு இடைவெளியில் வந்த வாய்ப்புதான் இயக்கம். ஏதோ ஒரு விபத்தில் சினிமா ஒளிப்பதிவு கலைக்கு வந்தவன் அல்ல நான். விரும்பி ஏற்றுக் கொண்டது. எந்த ஒப்பனையும் இன்றிப் பார்ப்பது, நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவு மறைவின்றித் தரிசித்து அப்படி தரிசிக்கும் உண்மைகளை அழகுணர்ச்சியுடழ் சித்தரித்து, அதையே உணர்வுப்பூர்வமாக சொல்லி விட்டால் அது நல்ல சினிமா.
அப்படியான சினிமாக்கள்தான் என் தேர்வு. புதுமுக ஹீரோ கார்த்திகேயன், கோலி சோடா சுபிக்ஷா, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சுரேஷ்மேனன், ரேஷ்மா என இப்படி நிறைய நடிகர்கள் ஒத்துழைப்பு தந்தார்கள். அனைவருக்கும் நன்றி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.