தடுப்பூசித் தாரகைகள்!

தடுப்பூசிகள் தயாரிப்பில் ஈடுபடும் நாடுகள் குறித்தும், நிறுவனங்கள் குறித்தும் பரவலாகப் பேசப்படுகிறது.
தடுப்பூசித் தாரகைகள்!
Updated on
3 min read

தடுப்பூசிகள் தயாரிப்பில் ஈடுபடும் நாடுகள் குறித்தும், நிறுவனங்கள் குறித்தும் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் கோவிட் 19 கொள்ளை நோய்த் தொற்றை எதிர்கொள்ள அடிப்படை ஆய்வுகளும் தீவிர ஆராய்ச்சியும் மேற்கொண்ட விஞ்ஞானிகள் குறித்து அதிகம் வெளியில் பேசப்பட வில்லை. அதிலும், குறிப்பாக, வெற்றிகரமாக தடுப்பூசி ஆராய்ச்சியில் இறங்கி வெற்றி பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் பொதுவெளியில் தெரியாமலேயே இருந்தன.
கேத்தலின் கரிக்கோவுக்கு நோபல் விருது கிடைத்ததைத் தொடர்ந்து, தடுப்பூசி ஆராய்ச்சியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி அவற்றை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்ட விஞ்ஞானிகள் குறித்த விவரங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கி இருக்கின்றன.
குறிப்பாக, பெண் விஞ்ஞானிகள் குறித்து நாம் தெரிந்து கொள்வது அவசியம். கோவிட் 19 கொள்ளை நோயை எதிர்கொள்ள உலகளாவிய அளவில் ஆறு பெண் விஞ்ஞானிகள் தடுப்பூசிகளின் உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகித்திருக்கின்றனர். அவர்களது தலைமையில் விஞ்ஞானிகள் குழுவினரின் ஆராய்ச்சி நடந்திருக்கிறது.
எம்ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பூசி கண்டுபிடித்த கேத்தலின் கரிக்கோவுக்கு நோபல் விருது கிடைத்திருப்பது விஞ்ஞானிகள் பலரும் எதிர்பார்த்த ஒன்று. அவர் மட்டுமல்லாமல், தடுப்பூசி ஆராய்ச்சியில் தலைமை வகித்த ஏனைய பெண் விஞ்ஞானிகளும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களில் ஆறு பேர் முக்கியமானவர்கள்.

கேத்தலின் கரிக்கோ

ஹங்கேரியில் பிறந்த கரிக்கோ, ஷெகெட் பல்கலைக்கழகத்தில் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றார். மனித உடலில் எப்போது எந்தவித புரதம் உருவாக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஒன்றாக எம்ஆர்என்ஏ இருக்கிறது. அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதுதான் கேத்தலின் கரிக்கோவின் ஆய்வுப் பொருள். அதில், தொடர்ந்து ஆராய்ச்சியை மேற்கொள்ள அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் கரிக்கோ.
2019-ஆம் ஆண்டு முதல் கரிக்கோ தலைமையிலான குழு பயோண் டெக் என்கிற நிறுவனத்துக்காக, ஃப்ளூ காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது .அப்போதுதான் உலகை கோவிட் கொள்ளை நோய் தாக்கியது. கரிக்கோவுடைய ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்த பயோண் டெக் நிறுவனம் ,ஃபைசர் நிறுவனத்துடன் கோவிட் 19-க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
அதில், பயோண் டெக் நிறுவனத்தின் சார்பில் கரிக்கோ தலைமையிலான குழு வெற்றியடைந்தது மட்டுமல்லாமல் , 2020 டிசம்பரில் "கோமிர் நாட்டி' என்ற பெயரில் அவர்களின் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதியும் பெற்றது.
கரிக்கோ இப்போது பயோண் டெக் நிறுவனத்தின் துணைத் தலைவர் (சீனியர் வைஸ் ப்ரெசிடெண்ட்.)

டாக்டர் கே. சுமதி

உயிர் அறிவியலில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர். டாக்டர் சுமதி ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் ஆராய்ச்சி குழுவுக்கு தலைமை வகிக்கிறார். காமன்வெல்த் அமைப்பின் சார்பில் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆய்வு நடத்துவதற்கு உதவித்தொகையைப் பெற்றவர். அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சிகள், தயாரிப்புகள் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் விஞ்ஞானி அவர். அந்த நிறுவனம் ஏற்கெனவே சிகா, சிக்குன்குன்யா உள்ளிட்ட நோய்த்தொற்றுகளுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பில் முனைப்பாக ஈடுபட்டு வந்தது. டாக்டர் சுமதியின் தலைமையிலான அந்தக் குழு அதில் வெற்றியும் அடைந்திருந்தது.

அப்போதுதான் கோவிட் 19 கொள்ளை நோய்த் தொற்று பரவத் தொடங்கியது. ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் உதவியுடன் பாரத் பயோடெக் நிறுவனம் இந்தியாவிலேயே ஆராய்ச்சியை நடத்தி உருவாக்கிய தடுப்பூசிதான் கோவாக்சின்.

மேற்கு வல்லரசுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு மிகக் குறுகிய காலத்திலேயே இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட அந்த தடுப்பூசி, சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

நிதா கே. பட்டேல்

இந்திய அமெரிக்கரான நிதா கே.பட்டேல் அமெரிக்காவின் நோவாவாக்ஸ் என்கிற மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி. அவரது தலைமையிலான குழு தயாரித்த தடுப்பூசிதான் நோவோ வேக்சின்.

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜியில் முனைவர் பட்டம் பெற்ற நிதா பட்டேல், முதலில் ஆஸ்ட்ரா ùஸங்க்கா நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றினார். அதன் பிறகு நோவோ வாக்ஸ் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

ரிகாம்பினென்ட் டிஎன்ஏ எனப்படும் மரபு அணு உருமாற்ற உத்தியைப் பயன்படுத்தி நிதா பட்டேலும் அவரது குழுவினரும் கோவிட் கொள்ளை நோய்க்குத் தடுப்பூசி உருவாக்க முற்பட்டனர். அதுதான் நோவா வேக்சின். நிதா பட்டேலின் தடுப்பூசி ஆராய்ச்சி குழுவில் இணைந்திருந்த விஞ்ஞானிகள் அனைவருமே மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாரா கேத்தரின் கில்பர்ட் இந்தியாவில் மிக அதிகமாக கோவிட் கொள்ளைத் தொற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி கோவிஷீல்ட். இது பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் எட்வர்ட் ஜெனர் மையத்தில் ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்டது.

2002-இல் சீனாவில் பரவிய "மெர்ஸ்' நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது எட்வர்ட் ஜெனர் மையம். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் டி.என்.ஏ. சார்ந்த தடுப்பூசி உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட்டது. 2020-இல் கோவிட் நோய்த்தொற்றுக்கு எதிரான முதலாவது தடுப்பூசியாக கோவிஷீல்டு உருவாக அது காரணமானது.

"மெர்ஸ்' தொற்றுநோய் தடுப்பூசி ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் கேத்தரின் கில்பர்ட் என்கிற பெண் விஞ்ஞானி. ஜின் சிம்பன்சி மனிதக் குரங்கை தங்களது ஆய்வுக்குப் பயன்படுத்தினார்கள் அந்தக் குழுவினர். மரபணு மாற்றத்தின் மூலம் ஸ்பைக் புரோட்டீன் உருவாக்கத்தை நிகழ்த்தினார்கள். 2014-இல் மெர்ஸ் தொற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்குள் அந்த நோய்த்தொற்று அடங்கிவிட்டது. அவர்களது ஆராய்ச்சியின் அடிப்படையில் கோவிட் 19 கொள்ளை நோய்த் தொற்று பரவியபோது உடனடியாக சாரா கில்பர்ட்டும் குழுவினரும் அதற்கு எதிரான தடுப்பூசி உருவாக்கத்தில் முழுமூச்சுடன் இறங்கினர். வெற்றியும் கண்டனர்.

ஹனகே ஷுட்மேக்கர்

எய்ட்ஸ் பெத்தாலஜியில் ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடத்தி முனைவர் பட்டம் பெற்றவர் ஹனகே ஷுட்மேக்கர். எய்ட்ஸ் நோய் குறித்த ஆராய்ச்சியில் முனைப்புக் காட்டும் ஷுட்மேக்கர் , 2010-இல் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
அனைத்து விதமான ப்ளூ காய்ச்சல்களுக்கும், எய்ட்ஸ் நோய்க்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஷுட் மேக்கரும் குழுவினரும் ஈடுபட்டிருந்தனர். கோவிட் 19 கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கியவுடன் அந்த குழுவினர் அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்த தொடங்கினர்.
2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவர்கள் உருவாக்கிய ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதியைப் பெற்றது.
எலினா ஸ்மோளியார்சுக்
ரஷியாவின் ஷெச்னேவ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சிக் கூடத்தில் முதன்மை விஞ்ஞானியாக இருப்பவர் எலினா ஸ்மோளியார்சுக்.
அவர்கள் நடத்திய ஆராய்ச்சியைத் தொடர்ந்து கமாலியா மையம் எனப்படும் தடுப்பூசி ஆய்வுக்கூடம் ஸ்புட்னிக் 5 என்கிற தடுப்பூசியைத் தயாரித்தது. ரஷியாவின் கண்டுபிடிப்பான "ஸ்புட்னிக் 5' மேலைநாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் இந்தியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. ரஷியாவில் முழுமையாக "ஸ்புட்னிக் 5' மட்டுமே கோவிட்-19க்கு வழங்கப்பட்டது. அதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் எலினா ஸ்மோளியார்சுக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com