

"கற்றதைப் பிறருக்குக் கற்பித்தல்' என்பது சமூகத்துக்குக் கிடைக்கும் புனிதமான பங்களிப்பாகும். அதுவும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விளிம்புநிலை மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் லட்சியத்துடன் செயல்படுவது சாதாரண விஷயமா? அவர்களை வேலைவாய்ப்புக்காக, தொழில்நுட்ப ரீதியாக 10 ஆண்டுகளாக விழுப்புரத்தைச் சேர்ந்த "வி.ஜி.எல்.யூ.ஜி.' கணினி கல்வி அறக்கட்டளையினர் தயார்படுத்தி வருகின்றனர்.
கணினியில் "சாப்ட்வேர்' , "ஹார்ட்வேர்' குறித்து வகுப்புகள், செயல்முறை பயிற்சிகள், விழிப்புணர்வை இந்த அமைப்பினர் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அறக்கட்டளையின் பொறுப்பாளர் கார்கி உதயனிடம் பேசியபோது:
'எனது நண்பர்கள் எத்திராஜ், கலீல் ஜாஹிர், சதீஷ்குமார். விஜயலட்சுமி, பிரபாகரன், மணிமாறன், ஹரிபிரியா, கீர்த்தனா உள்ளிட்டோருடன் இணைந்து ஏற்படுத்திய அமைப்புதான் ஜி.எல்.யூ.ஜி.' கணினி கல்வி அறக்கட்டளை.
இவர்கள் அனைவருமே கணினிப் பொறியியல் படித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் பணி செய்பவர்கள். தொடக்கத்தில் நான்கு பயிற்சியாளர்களைக் கொண்டு குறைந்த மாணவர்களுடன் வகுப்புகளை நடத்த ஆரம்பித்தோம். இன்று 15 பயிற்சியாளர்கள், 150 மாணவர்களுக்கு இலவச வகுப்புகளை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விழுப்புரத்தில் மூன்று இடங்களில் நடத்துகிறோம்.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கணினி படிக்கும் மாணவர்களைத் தேர்வு செய்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அழைப்பு விடுத்து ஜனவரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறோம். கிராமப்புற மாணவர்களுக்கு பட்டை தீட்டல் அவசியம். நகரங்களில் கணினி பயிற்சி பெற செலவு பல ஆயிரம் ரூபாய் ஆகும். சென்னையில் தங்கி படிப்பது என்றால் செலவு இன்னும் அதிகமாகும். அதற்கு பொருளாதாரம் இடம் தராததால் அத்தகைய மாணவர்களுக்கு வேலை கிடைப்பது தாமதமாகும்.
இந்தக் குறையைத் தீர்ப்பதில் எங்கள் பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டணம் எதுவும் தராமல் கணினி மென்பொருளைக் கையாளும் திறமையை எங்கள் பயிற்சிகள் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் ஏறக்குறைய அனைவரும் வேலைகளில் இருக்கிறார்கள். பொருளாதாரச் சிக்கலிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள எங்கள் பயிற்சியினால் அவர்களுக்குக் கிடைத்த கிடைத்த வேலை உதவுகிறது.
மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, சர்வதேச மாநாடுகள், நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தி வருகிறோம். இந்த ஆண்டு 10 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை ஹைதராபாத்தில் நடைபெற்ற " பிஓய்சிஓய்என் இந்தியா 2023' மாநாட்டுக்கு அழைத்து சென்று பங்கேற்கச் செய்தோம்.
"கிராமங்களுக்குச் சென்று மக்களிடமும், மாணவர்களிடமும் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். கணினியில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களை வாங்கவும் பணம் செலுத்த வேண்டும்.
செலவைக் குறைக்க இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களை எப்படி நமது தேவைக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்திக் கொள்வது என்பதையும் விளக்குகிறோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் கணினி அறிவு பெற்றவர்கள் அதிகரித்திருப்பதால், விழுப்புரத்தில் ஒரு கனினிப் பூங்கா உருவாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளோம்' என்கிறார் கார்கி உதயன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.