கலை மண்ணில் விதையான நாடகத் தந்தை!

முத்தமிழில் நாடகத் தமிழுக்கு சிறப்பிடம் உண்டு. இயல், இசை..  என வளர்ந்த தமிழை நல்ல சிந்தனை வளம் மிக்கவர்களாக மாற்றிய பெருமை நாடகங்களுக்கே உண்டு.
கலை மண்ணில் விதையான நாடகத் தந்தை!
Published on
Updated on
2 min read

முத்தமிழில் நாடகத் தமிழுக்கு சிறப்பிடம் உண்டு. இயல், இசை.. என வளர்ந்த தமிழை நல்ல சிந்தனை வளம் மிக்கவர்களாக மாற்றிய பெருமை நாடகங்களுக்கே உண்டு. அத்தகைய நாடகத் துறையை தமிழில் மறுமலர்ச்சியுறச் செய்தவர் "தமிழ் நாடகத் தந்தை' என்று அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள்.

இவர் 1867 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தாமோதரத் தேவர்பேச்சியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, வீரபாண்டிய கட்டபொம்மனுடன் இணைந்து போரிட்ட வெள்ளையத் தேவன் வழிவந்தவர்.

"ராமாயணப் புலவர்' என அழைக்கப்பட்ட தாமோதரத் தேவரைப் போலவே, சங்கரதாஸ் சுவாமிகளும் இளம் வயதிலேயே தந்தையின் கலையை கற்றுத் தேர்ந்தார். அதன்பின்னர், வண்ணச்சரபம் பழனி தண்டாயுதபாணி சுவாமிகளிடம் உயர்கல்வி பயின்றார். உப்புப் பண்டகச் சாலையில் பணிபுரிந்த சங்கரதாஸ், தானே கவிதையை இயற்றிப் பாடும் திறமை பெற்றார்.

1890ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த ராமுடுஅய்யர், கல்யாண ராமய்யர் ஆகியோரது குழுவில் நடிகராக இணைந்தார். எமதர்மன், இரணியன், சனீசுவரன், ராவணன் ஆகிய வேடங்களை ஏற்று மக்களது வரவேற்பைப் பெற்றார். தனது திறமையால் குறுகிய காலத்திலேயே நாடக ஆசிரியராகவும் ஆனார்.

1910 ஆம் ஆண்டில் "சமரச சன்மார்க்க நாடக சபை' எனும் நாடகக் குழுவை ஏற்படுத்தினார். அதில், எஸ்.ஜி.கிட்டப்பா உள்ளிட்ட பலர் இடம் பெற்றனர். ஆனால், நாடகக் குழுக்களிடையே ஏற்பட்ட போட்டியால் அதை தொடர முடியாத நிலையும் ஏற்பட்டது. பின்னர், "பால மீனரஞ்சனி சங்கீத சபை' எனும் பாய்ஸ் நிறுவனத்தில் நாடக ஆசிரியராகச் சேர்ந்தார். 1918- ஆம் ஆண்டில் மதுரையில் "ஸ்ரீதத்துவ மீனலோசனி வித்துவ பால சபா' என்ற நாடகக் குழுவை ஏற்படுத்தினார். அதில்தான் தி.க.சண்முகம் சகோதரர்கள் சேர்ந்து நடித்து பயிற்சி பெற்றனர்.

சுமார் 40க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கேற்றியுள்ளார். பல சிறந்த தமிழ் நடிகர்களையும் அவர் உருவாக்கினார். அவர் மதுரைப் பகுதிகளில் வள்ளித் திருமணம், பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், ஞானசெளந்தரி ஆகியவற்றை கிராமம் கிராமமாகச் சென்று நடத்தினார். அவை 1933 ஆம் ஆண்டிலிருந்து 1939 ஆம் ஆண்டு வரை அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

இதன்பின்னர், சென்னைக்கு சென்ற சங்கரதாஸ் சுவாமிகள் தனது நாடகங்களை நடத்தியும், போதிய வருவாய் இல்லாமல் சிரமப்பட்டார். அதனால், அவர் புதுச்சேரிக்கு 1921 ஆம் ஆண்டில் வந்துள்ளார். அங்கு அவரது மாணவர் ஆர்மோனியம் ஜெயராம் நாயுடு ஆதரித்து தங்க வைத்தார்.

புதுச்சேரி நகரில் ஒத்தைவாடைத் தெருவில் சங்கரதாஸ் பெரிய கட்டடத்தில் தங்கி தனது நாடகக் குழுவினருடன் வசித்தார். அவருக்கு வயலின் சமுத்திரா நாராயணசாமி, மிருதங்கம் பக்ரி உள்ளிட்டோரும் தேவையான உதவிகளைச் செய்துள்ளனர். அவர் வசித்த கட்டடம் இடிந்து, வீடுகளாகிவிட்டாலும் தெருவின் பெயருக்கு "சங்கரதாஸ் சுவாமிகள் தெரு' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அவர் தங்கியிருந்தபோது, கெப்ளே தியேட்டரில்தான் நாடகத்தை நடத்தியுள்ளார். மேடை எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்தபடி நாடகத்தை இயக்கும் திறனையும் பெற்றிருந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

உடல்நலம் பாதித்த நிலையில், அவர் 1922- ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் நடைபெற்ற கருவடிக்குப்பத்தில் தற்போது மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

சங்கரதாஸ் சுவாமிகள் தூத்துக்குடியில் பிறந்தாலும், அவரது இறுதிக்காலம் புதுச்சேரியில்தான் கழிந்துள்ளது.

படங்கள்: கி.ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com