அந்தமானைப் பாருங்கள் அழகு..!

அந்தமானின்  அழகே அழகுதான். இயற்கை எழிலோடு,  பல்வேறு கட்டமைப்பு வசதிகளால் இப்போது பேரழகு!  
அந்தமானைப் பாருங்கள் அழகு..!
Updated on
3 min read


அந்தமானின் அழகே அழகுதான். இயற்கை எழிலோடு, பல்வேறு கட்டமைப்பு வசதிகளால் இப்போது பேரழகு!

தமிழ்நாட்டை 2004-இல் சுனாமி தாக்குவதற்கு முன்னதாகப் பாதிப்படைந்தது அந்தமான் தீவுகள்தான். வடக்கு அந்தமான் சுனாமி பாதிப்பிலிருந்து சிலிர்த்து எழுந்தது. இன்னும் பத்து ஆண்டுகளில் தலைசிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கப் போகிறது. அந்தமான் சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டாலும், சென்னை, கொல்கத்தாவிலிருந்து மட்டுமே விமானங்கள் வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் உலகின் பல நாடுகளுடன் அந்தமான் விமான நிலையம் இணையும்.

ஆறு இருக்கும் தீவுகளில் சிறு அணை கட்டி மின்சாரம் தயாரிக்கிறார்கள். பெரும்பாலும் டீசல் ஜெனரேட்டர்களில் மின்சாரம் தயாரித்து விநியோகிக்கிறார்கள்.

ஹேக்லாக் தீவுக்கு சொகுசு கப்பல்கள் 2005-ஆம் ஆண்டில் அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேரிலிருந்து ஹேவ்லாக் தீவுக்கு சாதாரண அரசு கப்பலில்தான் பயணிக்க வேண்டும். இப்போதோ 5 அதிநவீன விரைவுக் கப்பல்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. பல தீவுகளுக்கு சொகுசு கப்பல் போக்குவரத்து அறிமுகம் ஆகியுள்ளதால், புதிய சுற்றுலாத் தலங்கள் உருவாகியுள்ளன.

ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த தீவுகள், கோடிக்கணக்கான முதலீட்டில் நல்ல சாலைகள், தங்கும் விடுதிகள், ரிஸார்ட்டுகள் என்று அடியோடு மாறியிருக்கின்றன.

அதிகாலை நாலரை மணிக்கு விடிந்து மாலை ஐந்தரைக்கு இருட்டிவிடும் அந்தமானின் வருமானத்தைப் பெருக்க, சுற்றுலாவுக்கான பீச்சுகளில் "இரவு வாழ்க்கை... கேளிக்கை' என்று நூற்றுக்கணக்கான அலங்காரக் குடில்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

வெள்ளி மணல் பாதை கொண்ட"ராஸ் அன்ட் ஸ்மித்' "அந்தமான் சுற்றுலா' வடக்கு நுனியில் இருக்கும் டிக்லிபூரில் உள்ள "ராஸ் அன்ட் ஸ்மித்' தீவுகளைக் காணாமல் நிறைவு பெறாது. இரண்டு புறமும் கடல். நடுவில் வெள்ளி மணலால் ஆன பாதை. அதில், காலில் செருப்பில்லாமல் நடக்க கொடுத்து வைக்க வேண்டும். உயர்ந்த அலைகள் இருக்கும்போது, இந்தப் பாதை கடலால் மூழ்கடிக்கப்படும். சிறு அலைகள் உள்ள நேரத்தில் மீண்டும் வெள்ளி மணல் பாதை வெளிப்படும். சிறு அலைகள் உள்ள நேரம் பார்த்து அங்கு பயணிக்க வேண்டும்.

டிக்லிபூர் செல்ல சிறப்பு வசதி போர்ட் பிளேரிலிருந்து 300 கி.மீ. தூரத்தில் இருக்கும் டிக்லிபூருக்கு சாலை வழி போக, வர தலா ஒரு நாள், தீவைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் என்று மூன்று நாள்கள் தேவைப்படும். சுற்றுலாப் பயணிகள் அதிகபட்சம் ஐந்து நாள்கள் பயணத் திட்டத்துடன் வருவார்கள். டிக்லிபூர் சென்றால் அந்தமானில் இதர இடங்களை பார்க்க முடியாது என்று 99 சதவீதம் பயணிகள் டிக்லிபூர் போகாமல் திரும்பிவிடுவார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற சொகுசு கப்பல் ஒன்று பயணத்தை இந்த மாதம் தொடங்கியிருந்தாலும், கப்பலில் டிக்லிபூர் சென்றுவரவும் மூன்று நாள்கள் தேவைப்படும். ஆனால் பயணம் தரைவழி பயணத்தைவிட வசதியாக அமையும்.

போர்ட் பிளேரில் தமிழர்கள் அதிகம் போர்ட் பிளேரில் அதிகம் தமிழர்கள் வாழ்கின்றனர். மியான்மரில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் பலர் போர்ட் பிளேரில் குடியேறியிருக்கின்றனர். போர்ட் பிளேரில் தமிழ்ப் பெயருடன் பேருந்துகள் இயங்குகின்றன. பேருந்தின் பின்பக்கம் திருக்குறள்களை எழுதிவைத்திருக்கின்றனர். அந்தமானில் அதிகம் பேசப்படுவது ஹிந்தி. இரண்டாவது பேசுமொழியான வங்க மொழிக்கு அடுத்ததாக தமிழ் பேசப்படுகிறது.

போர்ட் பிளேரில் பலசரக்கு, மருந்துக் கடைகள் உணவுவிடுதிகள் தமிழர்களால் நடத்தப்படுகின்றன. போர்ட் பிளேருக்கு அருகில் இருக்கும் தீவுகளுக்கு போகும் கப்பல்கள் சிவகங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தினரால் நடத்தப்படுகின்றன. தேநீர் கடைகளில் தேநீர் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
செல்லுலர் சிறை மதில்கள் சுத்தம் செய்யப்பட்டு மராமத்து வேலைகள் முடிக்கப்பட்டு பளிச் என்றுள்ளது. வீர சாவர்க்கர் சிறைவைக்கப்பட்ட அறையில் அவருடைய படம் வைக்கப்பட்டுள்ளது. சாவர்க்கர் உருது மொழியில் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் சிறை கண்காட்சியில் பாதுகாக்கப்படுகிறது. போர்ட் பிளேரிலும் இதர தீவுகளிலும் பொதுவாக சாலைகளில் பொது இடங்களில் நாய்களும் பசுக்களும் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இப்போதுதான் நான்கு அடுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

முக்கால்வாசி மாடி வீடுகளின் கூரை இரும்பு அல்லது அலுமினியம் தகடுகளால் ஆனது.

பாராடங் தீவு போர்ட் பிளேரிலிருந்து நூறு கி.மீ தூரத்தில் டிக்லிபூர் போகும் வழியில் இருக்கும் பாராடங் தீவில் சுண்ணாம்புப் பாறைகளால் இயற்கையாக உருவான குகை உள்ளது. பாராடங்கிலிருந்து விரைவுப் படகில் சென்று ஒன்றரை கி.மீ. நடந்து இருட்டில் இருக்கும் குகையை மொபைல், டார்ச் விளக்குகளால் மட்டுமே பார்க்க முடியும். கால இடைவெளியில் குகைப் பாறைகள்தான் உருவத்தை மாற்றிக் கொள்ளுமாம்.

பாராடங் செல்ல அடர்ந்த வனப்பகுதியில் இரண்டு மணி நேர பயணம் செய்ய வேண்டும். இங்கு "ஜார்வா' இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர் வாழ்கின்றனர். காலை 6, 11, பிற்பகல் 3 மணிக்கு வாகனங்களை வரிசையாக வனப் பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்புகின்றனர். வில் அம்பு ஏந்தி உலவும் ஜார்வாக்களிடமிருந்து பாதுகாக்கவும், பயணிகள் ஜார்வாக்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்கவும்தான் இந்தப் பாதுகாப்பு. முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பயணிகள் - ஜார்வாக்கள் சந்திப்பு நடக்கும்.

பழங்கள், ரொட்டிகளை பயணிகள் வழங்குவார்கள். மான்கள், காட்டுப்பன்றிகள், ஆமை, அதன் முட்டைகள், மீன்களையே உண்ணும் ஜார்வாக்களின் பரம்பரை உணவுப் பழக்கத்திலிருந்து அவர்களை மாறச் செய்யும் என நினைத்ததால், அந்தச் சந்திப்புகளை நிறுத்திவிட்டனர். வனத்துக்குள் பயணிக்கும் போது, ஜார்வாக்கள் சிலரைப் பார்த்தாலும் அவர்களைப் படம் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில தீவுகளில் சென்டினல் எனப்படும் ஆபத்தான ஆதிவாசிகள் வசிப்பதால், அங்கு யாரும் செல்ல மாட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com