இந்தியாவின் அடையாளம்..!

2024 நவம்பர் 12 இல் நடைபெற்ற வி.ஐ.டி. மாணிக்க விழாவில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று பல்கலைக்கழகத்தின் பெருமைகளைப் பேசினர்.
வி.ஐ,டி.
வி.ஐ,டி.
Published on
Updated on
5 min read

2024 நவம்பர் 12 இல் நடைபெற்ற வி.ஐ.டி. மாணிக்க விழாவில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று பல்கலைக்கழகத்தின் பெருமைகளைப் பேசினர். விருந்தினர்களை உபசரித்து அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்ததும் வி.ஐ.டி.யின் தொடக்கம், ஆரம்ப நாள்கள் பற்றி சுழலவிட்டுப் பார்த்தேன்.

நாற்பது ஆண்டுகளைக் கடந்து இருக்கிறோம். எந்தப் பின்புலமும் இல்லாத விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு நினைவு தெரிந்த நாள்களில் என் பெற்றோர் எனக்கு போதித்தது, "கல்விதான் நிரந்தரச் செல்வம்' என்பதுதான். படித்து முடித்தேன். சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். என்னை மிகத் தொலைவில் அனுப்ப என் பெற்றோர் அனுமதிக்காததால், "ஐ.பி.எஸ். பணி வேண்டாம்' என்று வழக்குரைஞரானேன்.

பேரறிஞர் அண்ணா என்னை அரசியலில் இழுத்து விட்டுவிட்டார். சிறு வயதிலேயே மக்களவை உறுப்பினர். எம்.ஜி.ஆர். காலத்தில் சட்டப் பேரவை உறுப்பினர், பிறகு அமைச்சர். அரசியல்தான் என்னைக் கல்வியாளராகவும் மாற்றியது.

நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து, 'வட ஆற்காடு மாவட்டத்துக்கு ஒரு அரசுப் பொறியியல் கல்லூரி வேண்டும்'' என்று முறையிட்டேன். 'அரசிடம் நிதி வசதி இல்லை. நீங்களே ஒரு கல்லூரியைத் தொடங்குங்கள். அதற்கு அனுமதி தருகிறேன்'' என்று எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார்.

என்னுடைய மாமனார் பேருந்து உரிமையாளர் என்பதால், 'பேருந்து தொழில் ஓரளவு எனக்குத் தெரியும். ஏற்கெனவே அரசியல் பணி, சட்டப் பேரவை பணிகள் உள்ளன. நான் எப்படி கல்லூரியைத் தொடங்குவது'' என்று தயங்கியபடியே கேட்டேன். 'உங்களால் எல்லாமே முடியும்.

நீங்கள் ஒரு அறக்கட்டளையை அமையுங்கள். கல்லூரிக்கு அனுமதி கேட்டு அரசிடம் விண்ணப்பம் செய்யுங்கள். உடனே அனுமதி தரப்படும்'' என்று சொல்லி, என் கோரிக்கையை என் பக்கமே எம்.ஜி.ஆர். திருப்பிவிட்டார். அப்போதும் நான் தயங்கி நிற்க, 'உங்களால் முடியும். போய் அதற்கான வேலையைப் பாருங்கள்'' என்று எம்.ஜி.ஆர். சொல்ல, அவர் சொல்படி கேட்பது என்று முடிவு செய்தேன்.

ஒரு மாதத்தில் விண்ணப்பத்தைத் தயார் செய்து அரசிடம் வழங்கினேன். அன்றைய நிதியமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியனிடம் அந்தக் கோப்பு போனபோது, "அடுத்தாண்டு தொடங்கலாம்' என்று ஆணையில் குறிப்பிட்டு அனுமதியை வழங்கினார். ரூ.18 லட்சத்தை அனுமதிக் கட்டணமாக அரசுக்குச் செலுத்தி உள்ளோம். 1984-இல் 18 லட்சம் ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. அதையும் அறக்கட்டளை மூலம் வட்டிக்கு கடன் வாங்கி கட்டியிருந்தோம். அடுத்த ஆண்டு வரை வட்டி சுமை பெருஞ்சுமை.

முதல்வரின் செயலர் பரமசிவத்திடம் யோசனை கேட்டபோது அவர் சிரித்தபடியே முதல்வர் எம்.ஜி.ஆரிடம் முறையிடச் சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட எம்ஜிஆர், 'உங்களுக்கு கூடவா நாவலர் அப்படி செய்துவிட்டார்'' என்று கேட்டு சிரித்தார்.

'சரி உட்காருங்கள்' என்று என்னை உட்காரச் சொன்ன எம்.ஜி.ஆர், தனது செயலர் பரமசிவத்தை அழைத்து அந்தக் கோப்பை எடுத்து வரச் சொன்னார். அந்தக் கோப்பில், 'இந்த ஆண்டே தொடங்கலாம்' என்று எம்.ஜி.ஆரே எழுதி கையொப்பமிட்டார்.

1984 செப்டம்பரில் வேலூர் பொறியியல் கல்லூரி ஒரு வாடகை பங்களாவில் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவுக்கு எம்.ஜி.ஆரை சந்தித்து தேதி கேட்டேன். 'அக்டோபர் முதல் வாரம் வாருங்கள் தேதியை முடிவு செய்யலாம்' என்றார். அதற்குள் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அமைச்சர்கள் நெடுஞ்செழியன், செ.அரங்கநாயகம், இருவரும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

180 மாணவர்களுடன் துவக்கப்பட்ட வி.ஐ.டி. கல்லூரி, 2001-இல் பல்கலைக்கழகமாக மாறி, இன்று வேலூர், சென்னை, ஆந்திரத்தில் அமராவதி, மத்திய பிரதேசத்தில் போபால் என்று வளர்ந்து கொண்டிருக்கிறது. வேலூர் வளாகத்தில் மட்டும் 44 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். அன்றைக்கு ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒன்பதாக இருந்தது. இன்றைக்கு பேராசிரியர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஆண்டுதோறும் பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வுக்கு பல லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதுகிறார்கள். வி.ஐ.டி. என்பது அவர்களது நம்பிக்கை.

'வி.ஐ.டி.யின் வெற்றிக்கு சொந்தக்காரன்' என்று நான் என்றுமே நினைத்ததில்லை. பணிபுரிபவர்களின் பொறுப்பும் கடமையும்தான் இந்த வெற்றிக்கு காரணம். அனைத்து மாநிலங்களில் இருந்தும், கிட்டத்தட்ட 82 நாடுகளிலிருந்தும், மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 500 தனியார் பல்கலைக்கழகங்களின் தரத்தில் வி.ஐ.டி. தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்து நிலைநிறுத்தி இருக்கிறது.

'ஸ்டார்ஸ்' திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளியில் பயின்று மாவட்ட அளவில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன், ஒரு மாணவிக்கு இலவசக் கல்வி, இலவச தங்கும் விடுதி, உணவுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவரை 1,014 மாணவர்களுக்கு

ரூ. 90 கோடி அளவில் உதவிகள் செய்யப்பட்டுள்ளன.வேலூர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு ஏதுவாக 2012-இல் "அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை தொடங்கி இதுவரை 8,680 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கல்வி, பொருளாதார மேம்பாட்டில் முன்மாதிரி மாவட்டமாக, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை மாற்றுவதே குறிக்கோள் ஆகும்.

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

பணி வாய்ப்பு: வி.ஐ.டியில் இறுதி ஆண்டில் பயிலும் மாணவர்கள் சிறந்த தேசிய, பன்னாட்டு நிறுவனங்களில் 90 % பணிவாய்ப்பு பெற்று வருகிறார்கள். இதை நூறு சதவீதமாக மாற்றுவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம்.

மாணவர்களுக்கு சலுகைகள்: 1998-இல் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிலிருந்து மாணவர்கள் வேலூர் பொறியியல் கல்லூரியிஸ் பயில வருகை புரியத் தொடங்கியபோது, அவர்களுக்கு கட்டணத்தில் நான் சலுகை வழங்கினேன்.

பல ஊர்களில், நகரங்களில், பல நாடுகளில் நான் பயணிக்கும்போது என்னைச் சந்தித்து, "நான் வி.ஐ.டி. மாணவன்' என்று பலரும் அறிமுகப்படுத்திக் கொண்டு, உயர் பதவியில் இருப்பதாகச் சொல்வார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கும். இதற்கு எம்.ஜி.ஆரே மூலகாரணம்.

வி.ஐ.டி.க்கு வராத வி.ஐ.பி.க்களே இல்லை. ஆனாலும் "உன்னால் முடியும்' என்று உற்சாக வார்த்தைகள் சொல்லி என்னை ஊக்குவித்த எம்.ஜி.ஆரின் கால் தடம், இந்த கல்விச் சாலையில் பதியவில்லை என்ற குறை என் நெஞ்சில் இன்றும் உள்ளது.

வி.ஐ,டி. என்ற பிரம்மாண்ட ஆலமரம் தழைத்து எல்லோருக்கும் வாழ்வளிக்கும் ஓரிடமாக இன்று ஆகிவிட்டது. முதலில் வேலூரின் அடையாளமாக இருந்த வி.ஐ.டி. தற்போது இந்தியாவின் அடையாளமாக மாறிவிட்டது.

கட்டுரையாளர்: வி.ஐ.டி. வேந்தர்.

தனி நபராக சாதனை...!

அண்ணாவால் கண்டெடுக்கப்பட்ட மாணிக்கம் கோ. விசுவநாதன். மிகுந்த இளமைப் பருவத்திலேயே மக்களவை, சட்டப் பேரவைகளில் அங்கம் வகித்து மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியாகத் திகழ்ந்தார்' என்றார் பழ.நெடுமாறன்.

அவர் கூறியது:

'1980 முதல் 1984-ஆம் ஆண்டு வரை சட்டப் பேரவையில் நான் அங்கம் வகித்தபோது, அதிமுக உறுப்பினராக விசுவநாதன் விளங்கினார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த என் போன்றவர்களின் உரைகளுக்கும், குற்றசாட்டுகளுக்கும் பதிலளிக்க தலைமையால் தேர்வு செய்யப்பட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலரில் விசுவநாதனும் ஒருவராவார்.

அசைக்க முடியாத ஆதாரங்களோடும் புள்ளிவிவரங்களோடும் கண்ணியத்தோடும் அவையின் மரபுகளை மீறாமலும் அவர் ஆற்றிய உரைகள் எதிர்த்தரப்பினரால்கூட பாராட்டத்தக்க வகையில் அமைந்திருக்கும். பின்னர் அவர் அமைச்சர் பொறுப்பையும் திறம்பட வகித்தார்.

நேர்மையும், கூர்மையும் நிறைந்த சிறந்த அரசியல் தலைவராகவும், நிர்வாகத்திறன் மிகுந்த அமைச்சராகவும் விளங்கிய அவர், திடீரென தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிக் கல்வித்தொண்டில் ஈடுபட்டபோது, என் போன்றவர்கள் வருந்தியதுண்டு.

ஆனால், வேலூரில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தை உருவாக்கி இந்தியாவில் மட்டுமல்ல; ஆசியாவின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக உயர்த்தியிருக்கும் அவரது மாபெரும் சாதனையை முதன்முதலாக நேரில் கண்டபோது வியந்துபோனேன்.

அரசியலிலிருந்து அவர் விலகியதின் விளைவாக, நாட்டுக்கு மாபெரும் தொழிற்கல்விப் பல்கலைக்கழகம் கிடைத்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து படிக்கிறார்கள். தனியொரு மனிதராக மாபெரும் சாதனை புரிந்து உலக அளவில் தமிழ்நாட்டுக்குப் பெருமையைத் தேடித் தந்துள்ள நண்பர் விசுவநாதனை எண்ணி இறும்பூதெய்துகிறேன்'' என்றார் நெடுமாறன்.

ஜி.வி.செல்வம்
ஜி.வி.செல்வம்

அமெரிக்க பல்கலைக்கழகங்களே இலக்கு!

'அமெரிக்க பல்கலைக்கழகங்களை இலக்கு வைத்து வி.ஐ.டி.யின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்கிறோம்'' என்றார் வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம்.

அவரிடம் பேசியபோது:

'1984-இல் வெள்ளைக்கல்மேடாக இருந்த இடம் இன்று வி.ஐ.டி. எனும் மாணவர்களின் சரணாலயமாக விளங்குகிறது.

வேலூர் பொறியியல் கல்லூரியுடன் சேர்ந்து வளர்ந்தவன் நான். 1999-இல் வி.ஐ.டி. துணைத் தலைவரானேன். 2001-இல் வி.ஐ.டி. நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறியவுடன், இந்தியா முழுவதும் இருந்து மாணவர்கள் வரத் தொடங்கினர்.

வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்திய மாணவர்களுக்கு உயர் கல்வி பயிலும் வாய்ப்பை வி.ஐ.டி,யில் உருவாக்கித் தருவதுடன், வெளிநாட்டு மாணவர்களும் இந்தியா வந்து பயில வேண்டும் என்ற நாங்கள் எடுத்த இலக்கு தற்போது நிறைவேறியுள்ளது.

இங்கு சுமார் 50 மொழிகள் பேசும் 44 ஆயிரம் மாணவர்கள் பயின்றுவருவதால், ஒரு சிறிய இந்தியாவாக வி.ஐ.டி. விளங்குகிறது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் "ரிவேரா' எனும் கலாசாரத் திருவிழாவும், "கிராவிடாஸ்' எனும் தொழில்நுட்பத் திருவிழாவும் மாணவர்களால் மாணவர்களுக்காகவே நடத்தப்படுபவை. இந்த விழாக்கள் மூலம் அவர்கள் தலைமைப் பண்பையும், விட்டுக்கொடுத்தல், இணைந்து செயலாற்றுதல், கூட்டுறவு ஆகிய தன்மைகளையும் வளர்த்து கொள்கின்றனர்.

விடுதிகளில் பல மொழி, கலாசாரம் கொண்ட மாணவர்கள் ஒரே அறையில் தங்குவதால் அவர்களுக்குள் பல நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், நட்பு கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதனாலேயே வி.ஐ.டி. மாணவர்கள் என்றால், எந்த இடத்திலும் பணியமர்த்த முடியும் என்று கருதி வேலை அளிக்கும் நிறுவனங்கள் பணி நியமனம் செய்து வருகின்றன.

எங்கள் இலக்கு அமெரிக்க பல்கலைக் கழகங்கள்தான். அதனை நோக்கி வி.ஐ.டி.யின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறோம்.

வி.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் அனைவரும் பல்வேறு நாடுகளில், நல்ல நிறுவனங்களில், நல்ல பதவிகளில் பணியாற்றுவதுடன், அந்த நிறுவனங்களும் வி.ஐ.டி. மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. அதுதான் வி.ஐ.டி.யின் வெற்றி'' என்றார் செல்வம்.

-என்.தமிழ்ச்செல்வன்

தெ. ஞானசுந்தரம்
தெ. ஞானசுந்தரம்

சமுதாயத்துக்கு நல்வழி!

'கல்விக்கோ விசுவநாதன் ஒரு பண்பாளர்'' என்கிறார் முனைவர் தெ. ஞானசுந்தரம்.

அவர் கூறியதாவது:

'1963-64-இல் நான் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலை முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது, விசுவநாதன் சட்டக் கல்லூரியில் மாணவர். சென்னைப் பல்கலைக்கழகப் பேச்சாளர் போட்டியின் இறுதிச் சுற்றில் முதன்முதலாக அவரைச் சந்தித்தேன்.

போட்டியில் கலந்துகொண்ட நால்வரும் பல்கலைக்கழகங்களுக்கிடையே வானொலி வாயிலாக நடந்த பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டோம். அந்த நால்வர் சந்தானகிருட்டிணன், கோ. விசுவநாதன், கலைவாணி (பின்னாளில் வாணி ஜெயராம்) , நான்.

சென்னை, அண்ணாமலை, கேரளப் பல்கலைக் கழகங்களுக்கிடையே நடந்த பேச்சுப் போட்டியில் எங்கள் அணியே வெற்றி பெற்றது. அப்போது எல்லோரிடமும் "ஆட்டோபிராப்'பில் கையொப்பம் வாங்கிச் சென்றேன். அதன்பின் பல்லாண்டுகள் ஓடிவிட்டன. அவரை வேலூரில் நடைபெற்ற மு.வ. நூற்றாண்டு விழாவில் சந்தித்தேன். அதில் பேச என்னையும் அழைத்திருந்தார்.

அதற்கு முன்பு தினமணியில், ஆசிரியர்க்கு வழிகாட்டும் அகல்விளக்கு' என்னும் தலைப்பில், மு.வ. குறித்து ஒரு நடுப்பக்கக் கட்டுரை எழுதியிருந்தேன். அதனைப் பலரும் பாராட்டினர். அந்த விழாவிலும் ஓரளவு மனநிறைவு தரும் வகையில் பேசினேன். சில மாதங்களுக்குப் பிறகு வேலூர்த் தமிழ்ச்சங்கமும், வி.ஐ.டி.யும் இணைந்து மு.வ. நினைவாக ஒரு விருதினை நிறுவின.

அந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்திருந்தனர். விருதை முடிவு செய்யும் கூட்டத்தில் யாருக்குக் கொடுப்பது என்ற பேச்சு எழுந்தபோது, 'முதலாண்டு இவ்விருதை தெ. ஞானசுந்தரத்துக்குக் கொடுத்துவிடுவோம்'' என்று அவர் சொன்னதாகப் பின்னர் அறிந்தபோது என் வியப்புப் பல மடங்காகப் பெருகியது.

அமைச்சராய்த் திகழ்ந்து, பல்கலைக்கழக வேந்தராய் உயர்ந்த நிலையிலும் தன்னிலை மாறாது எளிமையாய் இனிமையாய் பழகினார். இந்தப் பண்பினை இன்று எத்தனை பேரிடம் காண முடியும்?

உ.வே.சா. நூல் நிலையத்தின் ஆட்சிக்குழுத் தலைவராக இருக்கிறார். அவர் தம் பொருளையும் வழங்கி, வெளிவராமல் இருக்கும் எல்லாச் சுவடிகளும் முழுமை இல்லாத சுவடியாக இருந்தாலும்கூட வெளிவர வேண்டும் என்னும் முடிவினை எடுத்துச் சில நூல்கள் வெளிவரச் செய்துள்ளார். அவருடைய எழுத்தும் பேச்சும் சமுதாயத்துக்கு நல்வழி காட்டுவன. இவரைப் போன்றவர்கள் உயர் பதவியில் இருந்தால் தமிழகம் மேலும் வளர்ந்து உயரும்'' என்றார் தெ.ஞானசுந்தரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com