உணவு ரசனையில் மாற்றம்...!

மக்களின் உணவு ரசனையில் மாற்றம்: கீதா கஃபே நிர்வாகியின் பார்வை
உணவு ரசனையில் மாற்றம்...!
Updated on
2 min read

'மக்களின் உணவு ரசனையிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உற்று கவனித்தால், ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் மக்களின் உணவு ரசனையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது புரியும். அவர்களின் ருசி ரசனைக்கு ஏற்ப நாமும் புதிய உணவு வகைகளைத் தயாரித்துக் கொடுக்கும் வகையில் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்கிறார் கீதா கஃபே நிர்வாகி கோபாலன்.

சென்னை தி. நகர் பாண்டி பஜாரில் உள்ள கீதா கஃபேவின் எழுபதாவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருவெண்காட்டுக்கு அருகேயுள்ள வானகிரி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன், குருமூர்த்தி, கணேசன் என்ற மூன்று சகோதரர்கள்தான் 1954-இல் கீதா கஃபேவை தொடங்கினர்.

தற்போது ஹோட்டலை நிர்வகித்து வரும் குருமூர்த்தியின் மகன் கோபாலனிடம் பேசியபோது:

'சென்னையில் வங்கிகளில் பணியாற்றிக் கொண்டிருந்த எனது அப்பா, பெரியப்பா, சித்தப்பா ஆகிய மூவரும் சொந்தமாக வியாபாரம் செய்ய மயிலாப்பூரில் வெண்ணெய் வியாபாரத்தைத் தொடங்கினர்.

பின்னர், தி.நகர் சோஷியல் கிளப்பில் உணவகம் நடத்தும் வாய்ப்பைப் பெற்றனர். அப்போது, கிளப் செயலராக இருந்தவர், "பாண்டி பஜாரில் எனக்குச் சொந்தமான கட்டடம் உள்ளது. அங்கு ஹோட்டல் நடத்துங்கள்' என கூறினர். இதனால் 1954-ஆம் ஆண்டு ஜூன் 17-இல் கீதா கஃபே தொடங்கப்பட்டது. எனது தங்கையின் பெயர் கீதா.

"ரொம்ப மசாலாக்கள் இல்லாமல் வீட்டுத் தயாரிப்பு உணவுகள் போல சுவை இருக்க வேண்டும். உணவு உடம்பைக் கெடுக்கக் கூடாது' என்பதே எங்களது பாலிசி. தொடக்கக் காலத்தில் 20 பேர் வேலை பார்த்தனர். காலை ஐந்தரை மணிக்கு ஹோட்டல் திறக்கப்படும். காலையில் இட்லி, வடை, பொங்கல், தோசை, பகலில் சாப்பாடு, மாலையில் பஜ்ஜி, போண்டா, இரவில் அடை, அவியல், சப்பாத்தி எல்லாம் தினசரி உணவு வகைகள். இரண்டு இட்லி ஒரு அணா. வடை அரை அணா. காபி அரை அணா. ரொம்ப விலை உயர்ந்த உணவு வகை என்றால் அது பாதாம் அல்வாதான். பிளேட் நாலணா.

ஹோட்டல் ஆரம்பித்த நான்கு ஆண்டுகளில் மாடியில் ரூஃப் கார்டனை பெருந்தலைவர் காமராஜர் தொடங்கி வைத்தார். காரணம் பெரியப்பா காங்கிரஸ்காரர் என்பதோடு, காமராஜரோடு நெருக்கம்.

சென்னையில் கிராம ஊராட்சிகள் தொடர்பாக, அகில இந்திய மாநாட்டை காமராஜர் நடத்தியபோது, பல்வேறு மாநிலங்களில் இருந்து 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இவர்களுக்கு உணவு ஏற்பாட்டுப் பொறுப்பை காமராஜர் எங்களிடம் கொடுத்தார். சென்னையின் பன்னிரெண்டு கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்ட அவர்களுக்கு அந்தந்தக் கல்லூரி விடுதிகளில் இருக்கும் சமையல் கூடங்களையே பயன்படுத்தி தேவையான அளவுக்கு ஆள்களை ஏற்பாடு செய்து, உணவுகளைத் தயாரித்தோம். காலையில் டிபனை முடித்துவிட்டு, அவர்கள் நிகழ்ச்சிக்குப் புறப்பட்டபோது, கையோடு மதிய உணவையும் பார்சல் செய்து கொடுத்து அனுப்பினோம்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது இரவு உணவும் தயாராக இருந்தது. தென் இந்தியர்களுக்கு தென்னிந்திய உணவையும், வட இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கு சப்பாத்தி, ரொட்டி போன்ற உணவு வகைகளையும் தயாரித்துக் கொடுத்து திருப்திப்படுத்தினோம்.

உணவு ஏற்பாட்டுக்காக, ரூ. 87 ஆயிரம் சொல்லி இருந்தோம். நிறைவு விழாவில் எங்கள் பெரியப்பா ஜெயராமனை மேடைக்கு அழைத்து காமராஜர் பாராட்டிப் பேசி, ரூ.1 லட்சத்து ஒரு ரூபாய்க்கான காசோலையை பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் கையால் கொடுத்து சிறப்பித்தார்.

நடிகர் சிவாஜி கணேசன் காலை நேரத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு, காபி வாங்கி அருந்துவார். ஜெமினி கணேசனும் காபி சாப்பிட என்றே ஹோட்டலுக்கு வருவார்.

நம்பியார், நாகேஷ், இயக்குநர்கள் ஸ்ரீதர், பீம்சிங்.. என்று பலரும் வழக்கமாக வரும் திரையுலகப் பிரபலங்கள். திரைப்படப் படப்பிடிப்புகளுக்கும் சாப்பாடு சப்ளை செய்யவும் ஆர்டர்கள் வரும்.

அந்தக் காலத்தில் வறுமையால், ஹோட்டல்களில் வேலைக்கு வருவார்கள். எங்கள் ஹோட்டலில் 40 ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்த்தவர்கள் பலர் உண்டு. ஒருவர் அதிகபட்சமாக 55 வருடங்கள் வேலை பார்த்துவிட்டு, தனது 85-ஆம் வயதில் ஓய்வு பெற்றார். அவரது மருத்துவ, இதர செலவுகளுக்காக பென்ஷன் அளிக்கிறோம்.

இப்போது, வேலைக்கு ஆள்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. அந்தக் காலத்தில் விறகு அடுப்பில்தான் சமையல் செய்தனர். இன்றோ எரிவாயு பயன்படுத்தும் நவீன அடுப்புகள் இருக்கின்றன.

மக்களின் உணவு ரசனையிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உற்று கவனித்தால், ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் மக்களின் உணவு ரசனையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது புரியும். அவர்களின் ருசி ரசனைக்கு ஏற்ப நாமும் புதிய உணவு வகைகளைத் தயாரித்துக் கொடுக்கும் வகையில் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் ஹோட்டலை பொருத்தவரை அன்றும் சரி, இன்றும் சரி குடும்பத்துடன் வந்து சாப்பிடும் வாடிக்கையாளர்கள்தான் அதிகம். பழைய வாடிக்கையாளர்கள்தான்.

அப்போது, மக்களுக்கு பொறுமை அதிகம். ஊழியர்கள் தெரியாமல் ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, உணவு வகைகளில் குறை இருந்தாலோ பொறுமையோடு சொல்வார்கள். நாங்களும் உடனடியாக தீர்த்து வைப்போம். இப்போது எதற்கெடுத்தாலும் கோபம் வந்துவிடுகிறது. எனவே, அவர்களை எச்சரிக்கையோடு கையாள வேண்டியுள்ளது' என்கிறார் கோபாலன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com