
அர்ப்பணிப்புதான் ஆசிரியர் பணியின் அடையாளம். அன்பாக, அக்கறையாகக் கற்றுக் கொடுத்து, பள்ளியில் புதுமைத் திட்டங்களைச் செயல்படுத்தி மாணவர்களை நல்வழிப்படுத்தி வருகிறார் மா. ஜெயராஜ்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட குழித்துறையைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு காவல் துறை முன்னாள் டிஜிபி சி. சைலேந்திரபாபுவின் ஒன்றுவிட்ட பெரியப்பா மகன். களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றும் ஜெயராஜிடம் பேசியபோது:
'எம்.ஏ. வரலாறு, எம்.ஏ. ஆங்கிலம், எம்.எட், எம்.பில். பட்டங்களைப் பெற்றுள்ளேன். 1990- ஆம் ஆண்டு விருதுநகரில் தனியார் பள்ளியில் பணிபுரிந்தேன்.
2002- ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட முஞ்சிறையில் வட்டாரப் ஆசிரியர் பயிற்றுநராக, சில மாதங்கள் பணிபுரிந்தேன்.
2002- ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பெரியகோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து, 2014 -ஆம் ஆண்டு முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றேன்.
2018- ஆம் ஆண்டு தலைமையாசிரியராக, நீலகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட கோத்தகிரி அருகேயுள்ள மிளிதேன் அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.
அப்போது மாணவர்கள் எண்ணிக்கை 28-ஆக இருந்தது. "சேவ் மிளிதேன்' என்ற அமைப்பை உருவாக்கி, முக்கிய பிரமுகர்கள், முன்னாள் மாணவர்கள், தனியார் அறக்கட்டளைகளை ஒருங்கிணைத்து செயல்பட்டதையடுத்து ஒரே ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 89- ஆக உயர்ந்தது.
மாணவர்களுக்குத் தற்காப்புக் கலைகள், நடனம், வாத்தியக் கருவிகள் இசைத்தல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தேன். மாணவர்களின் கற்றல் திறனில் முன்னேற்றமும், கற்றலில் ஈடுபாடும் அதிகரிக்கப்பட்டது. 5 ஏக்கர் பரப்பளவுள்ள பள்ளி வளாகம் முழுவதும் வனத் துறை மூலம் முள்வேலி அமைக்கப்பட்டு, வன விலங்குகளால் உருவாகும் ஆபத்தும் நீக்கப்பட்டது.
2019- ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள மாராயபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குப் பணியிட மாறுதல் பெற்று வந்தேன். முப்பது ஆண்டுகளாக கட்டப்
படாமல் இருந்த பள்ளிச் சுற்றுச்சுவரை கட்டி, மாணவர்களின் சிந்தனையை தூண்டும் வாசகங்கள் எழுதப்பட்டன. இத்துடன் பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஒலிபெருக்கி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன. மாணவர்களின் பேச்சுக்கலையை வளர்க்க, "சர்வதேச தமிழ் மேடை' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
2022- ஆம் ஆண்டு களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றேன். இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு அனைத்து அறிவுசார் தளங்களையும் ஏற்படுத்தி, போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மாதம்தோறும் கலாசாரப் போட்டிகள், விநாடி-வினா, சிந்தனையைத் தூண்டும் புதுமையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களைக் கொண்டு "பேண்ட் வாத்தியக் குழு' அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் "நேர்மைப் பெட்டி' வைக்கப்பட்டு மாணவர்களிடம் நேர்மைப் பண்புகள் வளர்க்கப்படுகின்றன. இதன் காரணமாக, 2023- ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசிடமிருந்து நல்லாசிரியர் விருது, குமரி அறிவியல் பேரவை சார்பில் "ஆசிரியர் திலகம்' விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றேன்.
மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட தொடர் பயிற்சியால் 2022-23-இல் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித் துறையால் நடத்தப்பட்ட குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள், பாரதியார் தின விழா போட்டிகளில் மாணவர்கள் வெற்றி பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்தனர்.
மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் 9, 10- ஆம் வகுப்பு மாணவர்கள் முதலிடம் பிடித்ததுடன் பேண்ட் வாத்தியத்தில் 10 மாணவர்கள் கொண்ட குழு இரண்டாம் இடத்தையும் பெற்றது.
பள்ளியில் போதை ஒழிப்பு மன்றம், தமிழ், ஆங்கில இலக்கிய மன்றங்கள், கணித மன்றம் போன்றவை இயங்கிவருவதோடு, மாணவர்களின் ஆளுமைத் திறனை வெளிக்கொணருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பள்ளியில் சுகாதாரம், தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், "தூய்மைப் பள்ளிக்கான சான்று' மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.
மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை கூறான தேர்தல் பற்றிய சிந்தனைத் தெளிவும், புரிதலும் மாணவர்கள் தங்களது இளம் வயதிலேயே பெற வேண்டும் என்ற நோக்கத்தில், மாணவர் பேரவைக்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி கடந்த ஜூன் 27-இல் நடத்தப்பட்டு, தேர்வு பெற்றவர்களுக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது'' என்கிறார் ஜெயராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.