பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் புதுமைகள்..!

உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெறவுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி
Updated on
2 min read

உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு விளையாட்டு வீரர், வீராங்கனைக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வதே வாழ்நாள் லட்சியமாக இருக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒலிம்பிக் போட்டிகள் பண்டைய காலத்திலேயே கிரேக்க நகரான ஏதென்ஸில் நடைபெற்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நினைவுச் சின்னங்களும் தற்போதும் பராமரிக்கப்படுகின்றன. கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் ஏதென்ஸில் ஒலிம்பியா என்ற இடத்தில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர், பல ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டிகள் சுவடே இல்லாமல் இருந்தன.

1894-இல் பியரி டி கூபெர்டின் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியைத் தோற்றுவித்தார்.

அவரது முயற்சியால் 1896-இல் ஏதென்ஸில் நவீன ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக, பல்வேறு வகைகள், வடிவங்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குளிர்கால ஒலிம்பிக், யூத் ஒலிம்பிக், பாராலிம்பிக் என வடிவம் பெற்று நடத்தப்படுகின்றன. முதல் நவீன ஒலிம்பிக்கில் 14 நாடுகளைச் சேர்ந்த 241 பேர் பங்கேற்றனர்.

33-ஆவது ஒலிம்பிக் போட்டி

2024-இல் பாரீஸில் ஜூலை 26-இல் தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை நடைபெறுவது 33-ஆவது ஒலிம்பிக் போட்டியாகும். இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

சிறப்புகள்

இளம் தலைமுறையினர், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 6 லட்சம் உணவுகள் விளையாட்டு கிராமத்தில் பரிமாற ஏற்பாடு. 20,000 அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு அனுமதி. 45,000 தன்னார்வலர்கள்.

ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதன்முறையாக வீரர், வீராங்கனைகள் சம அளவில் இடம் பெறுகின்றனர். சமத்துவம் நிலைநாட்டப்பட்டுள்ளது. அனைத்து விளையாட்டுகளிலும் சமத்துவம் பின்பற்றப்படுகிறது.

புதிய விளையாட்டுகள்

முதன்முறையாக பிரேக்கிங் அறிமுகம் செய்யப்படுகிறது. அதோடு ஸ்போர்ட் கிளைம்பிங், ஸ்கேட் போர்டிங், சர்ஃப்பிங் போன்ற விளையாட்டுகளும் இடம் பெறுகின்றன. பிரேக்கிங் அல்லது பிரேக் டான்சிங் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 ஆடவர், 16 மகளிர் ரவுண்ட் ராபின் முறையில் பங்கேற்று, காலிறுதி, அரையிறுதி, இறுதிச்சுற்று நடைபெறு

கிறது. சர்ஃப்பிங் போட்டி பிரான்ஸ் நாட்டில் இருந்து தொலை தூரத்தில் உள்ள டஹிடி தீவில் நடைபெறும்.

சீன் ஆற்றில் தொடக்க விழா

ஜூலை 26-ஆம் தேதி பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழா அட்டகாசமாக சீன் ஆற்றில் நடைபெறுகிறது. எப்போதும் ஒலிம்பிக் தொடக்க விழா மைதானத்தில் தான் நடை

பெறும். ஆனால் பாரீஸ் நகரில் பாயும் சீன் ஆற்றில் 3.5 கி.மீ தூரம் படகு அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் 10, ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.

நூற்றாண்டு ஒலிம்பிக்

2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸின் நூற்றாண்டு ஒலிம்பிக் ஆகும். 1924-இல் குளிர்கால ஒலிம்பிக், கோடைக் கால ஒலிம்பிக் இரண்டும் பாரீஸில் நடைபெற்றன. தற்போது நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. 1900, 1924, 2024 என மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இரண்டாவது நகரம் என்ற சிறப்பை பெறுகிறது. மூன்று முறை ஒலிம்பிக் நடைபெற்ற மற்றொரு நகரம் லண்டன் ஆகும்.

நினைவுச் சின்னங்கள் அருகே போட்டி

பாரீஸில் உள்ள பிரபல நினைவுச் சின்னங்கள் அருகே போட்டிகள் நடத்தப்படுகின்றன. எடுத்துக் காட்டாக பீச் வாலிபால் ஈஃபில் கோபுரம் அருகே நடைபெறுகிறது.

அகதிகள் அணியும் பங்கேற்பு

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அகதிகள் அணியும் இடம் பெறுகிறது.

பதக்க வாய்ப்புள்ள இந்தியர்கள்

நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, பி. வி. சிந்து, மீராபாய் சானு, ஹாக்கி அணிகளுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது.

இந்தியாவில் எதில், எப்போது காணலாம்

இந்திய நேரத்துக்கும் பாரீஸ் நேரத்துக்கும் இடையே 3 மணி 30 நிமிஷங்கள் இடைவெளி உள்ளது. வயாகாம் 18, ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க், ஜியோ சினிமாவில் ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டு களிக்கலாம்.

-பா.சுஜித்குமார்

என்னென்ன உணவுகள்...

ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. குறிப்பாக, போட்டியாளர்களுக்கான உணவு வகைகள், உணவுக் கூடம் முதலியவை.

பிரம்மாண்டமான உணவுக் கூடமானது 3,500 இருக்கைகளைக் கொண்டது. 720 அடி நீளமும், 72 அடி அகலமும் கொண்டது. போட்டி நடக்கும் முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை இருபத்து நான்கு மணி நேரமும் உணவுகள் பரிமாறப்படும்.

பிரெஞ்ச், ஆசிய, ஆப்பிரிக்க, கரிபியன் என்று ஒன்பது விதமான உணவு வகைகள் இங்கு பரிமாறப்பட இருக்கின்றன. மொத்த உணவுப் பொருள்களில் மூன்றில் ஒரு பகுதி சைவ உணவுகள்தான். தவிர, முப்பது சதவீதம் இயற்கை உணவாகவும் இருக்கும். தினமும் 40ஆயிரம் சாப்பாடுகள் பரிமாறப்பட இருக்கின்றன.

உலகின் பல்வேறு பகுதிகளில் பிரபலமான 20 செஃப்புகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருள்களில் பெரும்பாலானவை பிரான்ஸிலேயே தயாரிக்கப்பட்டவைதான். வாழைப்பழம், காபி, சாக்லெட் போன்ற பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

ஐம்பத்து இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒலிம்பிக் கிராமத்தில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக 15 உணவுக் கூட அறைகள் உள்ளன.

கேக் வகைகள், காபி, சாண்ட்விச், ஹாம்பர்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வளாகங்கள். இங்கு முப்பது லட்சம் வாழைப்பழங்களும், 27 டன் காப்பியும் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதான உணவுக் கூடத்தில் பயன்படுத்தும் வகையில், 47 ஆயிரம் தட்டுகள் மீண்டும் பயன்படுத்தும் வகையில் தருவிக்கப்பட்டு உள்ளன.

-சம்பத்குமாரி, பொன்மலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com