கான்ஸ் திரைப்பட விழாவில், குறும்பட, ஆவணப் பட இயக்குநர் பாயல் கபாடியா இயக்கித் தயாரித்திருக்கும் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்' எனும் படத்துக்கு "கிராண்ட் ப்ரி' எனும் விருதை கிடைத்திருக்கிறது. இந்த விருதை வென்ற முதல் இந்தியப் பெண் இயக்குநர் இவர்தான்.
இந்தியா கொண்டாடும் நிலையில், பாயல் கபாடியா கான்ஸிருந்து திரும்பியதும், ஒன்பது ஆண்டு காலமாக நடக்கும் வழக்கு ஒன்றை சந்திக்க நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும்.
பூணே திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிலைய மாணவியான பாயல், வீரியமும் சுதந்திரச் சிந்தனையும் உள்ளவர். 2015-இல் பயிற்சி நிலைய நிர்வாகத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததால், பாயலுக்கான உதவித் தொகை நிறுத்தப்பட்டது. அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு, கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் குறிவைத்தன.
அந்தப் போராட்டம் குறித்து, அவர் "எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்' என்ற தனது முதல் ஆவணப்படத்தைத் தயாரித்தார். 2022-இல் கான்ஸ் திரைப்பட விழாவில் "கோல்டன் ஐ' விருதை ஆவணப்படம் வென்றது. மாணவர்கள் போராட்டத்தின் பலனாக, பயிற்சி நிலையத்தின் தலைமை 2017-இல் மாற்றப்பட்டதும், பாயலுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை மீண்டும் அனுமதிக்கப்பட்டது. அந்தப் பணத்தில் பாயல் தயாரித்ததுதான் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்'. இன்று கேன்ஸ் விருது மூலம் அகில உலக கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.
இந்த நிலையில், பயிற்சி நிலைய நிர்வாகம், ""பாயல் இந்தியாவின் பெருமை. எங்கள் மாணவி'' என்று தெரிவித்தது. கடந்த 30 ஆண்டுகளில், வேறெந்த இந்திய திரைப்படமும் விழாவின் முக்கியப் பிரிவில் திரையிடப்பட்டு விருதை வென்றதில்லை என்பதுதான்.
மும்பைக்கு செவிலியர் பணிக்காகப் மாநிலம் விட்டு புலம்பெயர்ந்த மூன்று பெண்களைப் பற்றிய படம்தான் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்'.
அடுத்த விருதை இந்தியா பெற மேலும் 30 ஆண்டுகள் நாம் காத்திருக்கக் கூடாது என்ற பாயல், படத்தில் நடித்த மூன்று நடிகைகளையும் மேடை ஏற்றி பெருமைப்படுத்தினார். பாயல் தனது படத்தில் கேரளத்தைச் சேர்ந்த கனி குஸ்ருதியை நடிக்க வைத்திருக்கிறார்.
முப்பத்து எட்டு வயதாகும் பாயல் கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது ஏற்பு உரையில் பேசும்போது, ""எனக்கு விருதா? என்னால் நம்பவே முடியவில்லை. என்னை நான் கிள்ளிப் பார்த்துகொண்டேன். "கேன்ஸ்ஸில் நான்' நனவாகியுள்ளது. ரொம்பவும்... பெருமையாக இருக்கிறது'' என்றார்.
கி.பி. 1947-இல் சேடன் ஆனந்த் தனது "நீச்சா நகர்' என்ற படத்திற்காக "கிராண்ட் ப்ரி' விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அனசூயா சென்குப்தா பல்கேரிய இயக்குநர் கான்ஸ்டான்டின் போஜனோவின் "தி ஷேம்லெஸ்' எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருக்கும் அனசூயா சென்குப்தா, 2024-இல் கேன்ஸ் திரைப்பட விழாவின் "அன் செர்டெய்ன் ரிகார்ட்' பிரிவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார். படத்தில் அனசூயா பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார்.
2009-இல் அஞ்சன் தத் இயக்கிய வங்காளத் திரைப்படமான "மேட்லி பங்காலி'-இல் துணை நடிகையாக நடித்துள்ளார். மும்பைக்குப் புலம் பெயர்ந்து. தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். அனசூயா தன்னை ஒரு பத்திரிகையாளராக நிலைநிறுத்த விரும்பினார். ஆனால் பாதை மாறியது.
தொடக்கத்தில் இயக்குநர் கான்ஸ்டான்டின் போஜனோ 2014-இல் செய்திப் படம் பிடிப்பதற்காக இந்தியா வந்திருந்தார். நிதி பிரச்னையால் போஜனோவின் கனவு நிறைவேறவில்லை. பிறகு அதே கருவை அனிமேஷன் படமாக தயாரிக்க விரும்பி. அனசூயாவைச் சந்தித்தார். ஆனால் அந்த சந்திப்புக்குப் பிறகு அதே கருவை அனசூயாவை வைத்து நேபாளத்தில் படம் பிடித்தார்.
""பாயல் கபாடியாவுக்கு விருது... எனக்கும் விருது. ஒரே விழாவில் இந்தியாவுக்கு இரண்டு விருது. பெண்களை திரைப்படத் தயாரிப்பில், நடிப்பில் பெண்கள் தங்களது பங்களிப்புகளை வழங்கப் பெண்களை இந்த விருதுகள் உற்சாகப்படுத்தும்'' என்கிறார் அனசூயா சென்குப்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.