தமிழக நாட்டார் வழக்காற்றியலின் முன்னோடியாகத் திகழ்ந்து வருபவர் ஏழுபத்து மூன்று வயதான அ.கா.பெருமாள்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பறக்கை கிராமத்தில் வசித்து வரும் அவரிடம் பேசியபோது:
"எனது இயற்பெயர் அ.காக்கும் பெருமாள். எனது தந்தை அழகம்பெருமாள் மலையாள ஆசிரியராகவும், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் இருந்துள்ளார். எனது தாய் பகவதி.
தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியலில் "நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றேன்,. அப்போது எனக்கு ஆய்வுத் தோழராக விளங்கியவர் உலகப் புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியலாளரான ஸ்டுவர்ட் பிளாக்பர்ன்.
ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.
1972-ஆம் ஆண்டு முதல் கட்டுரைகளை எழுதி வருகிறேன். இதுவரை 412 கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு, கேரளா கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எனது கட்டுரைகள் 115 கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டுள்ளன.
நாட்டுப்புறக் கலைகள் குறித்து ஆய்வு செய்து 100 கலைகள் குறித்து தொகுத்து வெளியிட்ட "கலைக்களஞ்சியம்' எனும் நூல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு துணைப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது.
நாட்டார் வழக்காற்றியலிலும் இலக்கியத்திலும் என்னை ஈடுபட வைத்தது வெங்கட் சாமிநாதன்தான். அவர் நடத்திய "யாத்ரா' என்ற இதழிலும் எனது பங்களிப்பு இருந்தது.
குமரி மாவட்டத்தை "பிராந்திய நுண் வரலாறு' என்ற நோக்குடன் நான் மேற்கொண்ட ஆய்வுக்கு அருள்பணி ஜெயபதி, எழுத்தாளர் சுந்தரராமசாமி உள்ளிட்டோர் உதவினர்.
நாட்டார் வழக்காற்றியல், கல்வெட்டியல், சிற்பவியல், கோயில் கலை, இலக்கிய வரலாறு உள்ளிட்டவை குறித்து இதுவரை 95 நூல்களை எழுதியுள்ளேன்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வெளிவராத கட்டுரைகளை வெளிக்கொணர்ந்து அச்சில் பதிப்பித்தேன்.
தோல்பாவைக்கூத்து கலை குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்து நூல்களை எழுதியுள்ளேன். இதில், ராமாயண தோல்பாவைக்கூத்து நூல், கூத்துக்குரிய வாய்மொழி, ராமாயணப் பிரதியின் பதிவு செய்யப்பட்ட வடிவம், விரிவான ஆய்வுக் குறிப்புகளைக் கொண்டது.
குமரி மாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளை பற்றிய ஆய்வு, பொன்னிறத்தாள் அம்மன் கதை, பூலங்கொண்டாள் அம்மன் கதை, தம்பிமார் கதை , உள்ளிட்ட பல நாட்டார் தெய்வங்களின் கதைகளை அச்சுக்குக் கொண்டு வந்தேன்.
கோயிலைச் சுற்றிய நிலமானிய முறையைப் பற்றி விரிவாக ஆராயும் தென்குமரியின் கதை, சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் , பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில், தென்குமரிக் கோயில்கள், சிவாலய ஓட்டம் ஆகிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளேன். திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் குறித்து நான் எழுதிய நூல் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.
அய்யா வைகுண்டர் அருளிய "அகிலத்திரட்டு அம்மான்' குறித்து, நான் எழுதிய "அய்யாவழியின் அகிலத்திரட்டு' என்ற நூல் அய்யாவழி பக்தர்களின் மிக முக்கியமான நூலாகத் திகழ்கிறது.
குமரி மாவட்ட வரலாற்றுக்கு முக்கியமான ஆவணங்களான முதலியார் ஓலைச்சுவடிகள் (அழகியபாண்டியபுரம் முதலியார் வீட்டில் கிடைத்தவை) பத்தாம் நூற்றாண்டு கால நிர்வாக நடவடிக்கைகள் பற்றியவை. இவற்றுக்கு ஆய்வுக்குறிப்புடன் நூல் வடிவம் கொடுத்துள்ளேன்.
110 ஆண்டுகளுக்கு, முன்பு பதிப்பிக்கப்பட்டிருந்த, மணிப்பிரவாள (தமிழும் சம்ஸ்கிருதமும் இணைந்த) நடையில் இருந்த ராமாயணத்தை "அத்யாத்ம ராமாயணம்' என்ற நூலாக எளிய தமிழில் எழுதி, காலச்சுவடு பதிப்பகம் சார்பில் வெளியிட்டேன்.
"தமிழும் சமஸ்கிருதமும் செவ்வியல் உறவு' என்ற நூல், மலேசியா, இந்தோனோசியா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழ்பவர்கள் 36 பேரிடமிருந்து கட்டுரைகளை வாங்கி தொகுத்து வெளியிட்டுள்ளேன். "தமிழ் அறிஞர்கள்' என்ற நூலை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் பரிந்துரைத்திருந்தார்.
தென்குமரியின்கதை, தோல்பாவைக்கூத்து ஆகிய 2 நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதே போல், பல்வேறு அமைப்புகள் எனக்கு பதினைந்துக்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கியுள்ளன.
நானும் எனது நண்பர் செந்தீநடராஜனும் சேர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்கள், அறியப்படாத கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்து, எண்பதுக்கும் மேற்பட்டகல்வெட்டுகளை கண்டறிந்துள்ளோம்.
ஆபூர்வமான சிற்பங்களையும் அடையாளப்படுத்தி, "ஆவணம்' என்ற இதழில் வெளியிடும் பணியை மேற்கொண்டுள்ளோம்.
ராமகீர்த்தனம், பொன்னிறத்தாள் அம்மன் கதை, தம்பிமார் கதை ஆகிய நூல்கள் ஓலைச்சுவடிகளிலிருந்து படி எடுக்கப்பட்டு எழுதியவையாகும். எனது வீட்டில் உள்ள நூலகத்தில் சுமார் 8,300 நூல்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வில்லுப்பாட்டு, தோல்பாவைக் கூத்து குறித்தவையாகும்' என்கிறார் பெருமாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.