கல்விக்குடியான காரைக்குடி!

கல்வியால் காரைக்குடியை மாற்றிய வள்ளல் அழகப்பர்
கல்விக்குடியான காரைக்குடி!
Published on
Updated on
2 min read

காரைக்குடியைக் கல்விக்குடியாக மாற்றியவர் வள்ளல் அழகப்பர். ஆங்கில அரசு வழங்கிய சர் பட்டத்தை ஏற்காத இவருக்கு 1957-ஆம் ஆண்டில் "பத்மபூஷண்' விருதை மத்திய அரசு வழங்கியது. 1909-ஆம் ஆண்டு முதல் 1957 வரை 48 ஆண்டுகளே வாழ்ந்து ஒரு பல்கலைக்கழகத்தையே உருவாக்கியவர்.கல்வி நிலையங்கள், ஆராய்ச்சிக்கூடங்களைக், கட்ட பல ஏக்கர் நிலத்தை வழங்கியவர். இவர் செய்த அறப்பணிகளைப் பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும்.

ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றவர். லண்டன் சாட்டர்ட் வங்கியில் பயிற்சி பெற்ற முதல் இந்தியர். விமானம் இயக்கத் தெரிந்தவர். கேரளா, மலேஷியா, பர்மா, கொல்கத்தா, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தியவர்.

டெக்ஸ்டைல்ஸ், டீ எஸ்டேட், ஈயச்சுரங்கம், இன்சூரன்ஸ் கம்பெனி , ஹோட்டல்கள், தியேட்டர்கள், பங்குவணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரைப் பதித்தவர்.

இவை எல்லாவற்றையும் விட இவர் ஆரம்பித்த கல்விச்சாலையும் பல்வேறு இடங்களில் கல்விச்சாலைகளுக்கு வழங்கிய நன்கொடையும்தான் இன்றும் இவர் பெயரைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஒருமுறை, "பதினைந்து லட்சம் ரூபாய் அளித்து இடம் கொடுத்தால், அந்த ஊருக்கு ஆராய்ச்சிக் கூடம் உண்டு' என்று அறிவித்தார். அப்போது காரைக்குடியில் இருந்து கோடி ரூபாயை கொடுத்து தன்னுடைய மாளிகையையும் கொடுத்தார் வள்ளல் அழகப்பர். இங்கே பள்ளிகள், கல்லூரிகள் எல்லாம் தன்னுடைய சொந்த செலவில் அமைத்து எல்லாருக்கும் கல்வி அளித்தவர் வள்ளல் அழகப்பர். இன்றும் இயங்கும் " சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்' என்ற "சிக்ரி' வர காரணமானவர்.

கோட்டையூரில் 2017-இல் காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கில் உரையாற்றிய சொ.சொ. மீ. பேசுகையில், ""வள்ளல் அழகப்பர் குடும்பத்தில் பிறந்த பெண் வள்ளல் வள்ளி யம்மை ஆச்சி' எனக் குறிப்பிட்டார்.

1947-ஆம் ஆண்டில் வள்ளல் அழகப்பர் காரைக்குடியில் கல்லூரி ஒன்று அமைப்பதாக அரசிடம் உறுதிகொடுத்து, தொடங்கினார். தமிழ்த் துறைக்கு விரிவுரையாளர்கள்தான் உண்டு. பேராசிரியர் என்ற அழகப்பர் நியமித்த பதவியையே அறிமுகப்படுத்தியது அரசு.

இந்தளவு சிறப்பு வாய்ந்த அழகப்பரின் 108- ஆவது பிறந்த நாளையொட்டி, அவரைக் கெளரவிக்கும் விதத்தில் காரைக்குடியில் தமிழ் உயராய்வு மையத்தின் முயற்சியால் ஓர் அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2017- ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய இந்திய கவிஞர்கள் சந்திப்பில் இந்த அருங்காட்சியகம் ஆசிய இந்தியக் கவிஞர்களால் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது.

இவரது முழு வாழ்க்கைச் சரிதமும் புகைப்படமாகப் பதிவாகியுள்ளது. மினி திரையரங்கில் ஓளிவடிவில் வரலாறும் திரையிடப்படுகிறது. இது போக இங்கே தமிழ்ப் பண்பாட்டு மையம் தமிழகத்தின், தென்னகத்தின், செட்டிநாட்டின் பாரம்பரிய வாழ்வு முறைகளையும் முன்னோர் பயன்படுத்திய/பயன்படுத்தி வரும் பொருள்களையும் தனித் தனியாகக் காட்சிப்படுத்தியுள்ளது சிறப்பு.

இதன் முகப்புத் தோற்றம் செட்டிநாட்டு வீடுகளை நினைவுபடுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. உள்புறத்தில் மார்பளவு சிலையில் என்றும் மாறாப் புன்னகையுடன் ஒளிர்கிறார் அழகப்பர்.

இங்கே தமிழர் வாழ்வைச் சித்தரிக்கும் ஐவகைத் திணைகளில் வாழ்வு, மூவேந்தர்கள், பண்டைக்காலத்திய வரலாற்று ஆவணங்கள், பித்தளை, இரும்பு, மங்கு, சீர்வரிசை ஆகியன காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

எரகா மரம் எனப்படும் இரவை மரத்தில் பொருள்கள், நீர் இறைக்க உபயோகப்படுத்திய கருவிகள், மரக்கால் எனப்படும் அளவிக் கருவிகள், கலப்பைகள், கொட்டான்கள், ஏறுதழுவுதலும், உழவும் மரக்கட்டில் ஊஞ்சலும் சிறு குடில் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அழகப்பர் உபயோகப்படுத்திய பொருள்கள். மூக்குக் கண்ணாடி, பாஸ்போர்ட், அவரது கோட், ஷால் ஆகியன வைக்கப்பட்டுள்ளன. நடுநாயகமாக தங்க அரளிப் பூக்கள் முன்னிருக்க வீற்றிருக்கும் தங்க மனிதர். 2007-ஆம் ஆண்டில் இவரைக் கெளரவிக்க அரசால் வெளியிடப்பட்ட தபால் தலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஊரே விருந்துண்ட திருமணம் இவரது மகள் உமையாள் இராமநாதனின் திருமணமாகத்தான் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com