வழுக்கி விழுவதைத் தவிர்ப்பது எப்படி?

அமானுஷ்ய, ஆன்மிகக் கதைகளை எழுதி முத்திரை பதித்ததுடன் சமயச் சொற்பொழிவும் ஆற்றி வந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், மதுரையில் உள்ள தனது இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து அண்மையில் உயிரிழந்தார். அவருக்கு வயது அறுபத்து ஆறு.
ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லாPicasa
Published on
Updated on
2 min read

அமானுஷ்ய, ஆன்மிகக் கதைகளை எழுதி முத்திரை பதித்ததுடன் சமயச் சொற்பொழிவும் ஆற்றி வந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், மதுரையில் உள்ள தனது இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து அண்மையில் உயிரிழந்தார். அவருக்கு வயது அறுபத்து ஆறு.

வீடுகளில், ஃபிளாட்டுகளில் கழிவறை, குளியலறை இரண்டையும் இணைத்து கட்டிவிடுகின்றனர். ஐம்பது வயதைத் தாண்டினாலே இந்தியன் மாடல் குளோசெட்டைப் பயன்படுத்துவது இமாலயச் சிரமம். டைல்ஸ் விரிக்கப்பட்ட குளியலறை எப்போதும் ஈரமாக இருப்பதால், வயதானவர்களை வழுக்கி விழ வைக்கும் 'மரணப் பொறி'யாக மாறியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், 'வயதானவர்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டபோது அவர் கூறியது:

'முதியோர்கள் வீட்டில், குளியலறையில் வழுக்கி விழுந்தால் தலை, முகம், கால்கள், கைகளில் காயம் ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால் அவர்களை மரணத்துக்கு அழைத்துச் செல்கிறது எனலாம்.

ஒருமுறை கீழே விழுந்து எலும்புமுறிவு, தலையில் பலத்த காயம், மூளையில் சேதம் ஏற்பட்டவுடன் முதியோர்களால் பிறர் உதவியின்றி வாழ இயலாது. அவர்கள் மீண்டும் தவறி விழ அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே முதல் முறை வழுக்கி, கீழே விழுந்து பிழைத்துகொண்டவர்கள் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதைத் தவிர்க்க வேண்டும்.

கண் குறைபாடுகள், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு இதய, சிறுநீரக, நுரையீரல், கல்லீரல் நோய்களுக்கான மருந்துகள், இரவில் தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சலுக்கு உட்கொள்ளும் மனநல மாத்திரைகள் விபத்துகளுக்குக் காரணம்.

ரத்தச் சோகை, நினைவாற்றால் குறைபாடு, மூட்டுத் தேய்மானம், பக்கவாதம், கழுத்து, குறுக்கு தண்டுவட எலும்பு தேய்மானம், 'பார்கின்úஸானிசம்', உள்காதில் உள்ள 'லேபிரின்த்' எனும் உறுப்பில் ஏற்படும் பிரச்னையால் தலைசுற்றல், கண் புரை நோய், கண் அழுத்த நோய், விழிப்படலச் சிதைவு நோய் என்று முதியோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளின் பட்டியல் நீளுகிறது. உடல் பிரச்னை தனியாகவோ, இதர பிரச்னைகளுடன் கூட்டணி அமைத்தோ ஒரு நபரை கீழே விழ வைக்க முடியும்.

உடல் வலிக்கு நிவாரணம் தரும் 'மார்ஃபின்', மத்திய நரம்பு மண்டலத்தைச் சீராக்கும் வலி நிவாரணிகள், இதயத் துடிப்பை நேராக்கும் மாத்திரைகள், நீரிழிவுக்கான மாத்திரைகளால் ரத்தச் சர்க்கரை அளவு குறைவது, சிறுநீரை வெளியேற்றும் மாத்திரைகள் ஆகியவற்றால் தலைசுற்றல், மயக்கநிலை ஏற்பட்டு கீழே விழும் நிலை ஏற்படலாம்.

இரவில் உறக்கத்தின்போது சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்பட்டு அதற்காக விரைந்து கழிப்பறை செல்ல முயலும்போதும், அலைபேசியில் பேசிக் கொண்டே மாடிப்படிகளில் நடப்பதும் தவறி கீழே விழுவது உண்டு.

கீழே விழுந்த முதியோர்களிடம், 'எப்படி விழுந்தீர்கள்?' என்று கேட்டால், 'தெரியாமல் தடுக்கி விழுந்தேன். மேஜை அல்லது நாற்காலியில் கால் தட்டி இடறி விழுந்தேன். பாத்ரூமில் டைல்ஸ் வழுக்கி விழுந்தேன்' என்று கூறுவார்கள்.

தலைசுற்றல், படபடப்பு, கவனக் குறைவு குறித்து சொல்லமாட்டார்கள். தலைசுற்றல், படபடப்பு அபாய அறிகுறிகள் அல்ல என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள்.

வயதானவர் நடக்கும்போது கீழே விழுவதற்கான வாய்ப்பு உண்டா?, இல்லையா? என்பதைக் கண்டுபிடிக்க 'எழு & நட' என்ற சோதனையை , நரம்பியல் சிறப்பு மருத்துவர்கள் கையாளுகிறார்கள். வயதானவர்கள் தங்கள் கை வைத்த நாற்காலியில் இருந்து எழுந்து நேர்க்கோட்டில் பத்து அடி நடக்க வேண்டும். மீண்டும் அதே நேர்க்கோட்டில் திரும்பி வந்து நாற்காலியில் அமர வேண்டும்.

இந்த பயிற்சியைச் செய்யும்போது எவ்வளவு வேகமாகவும் துல்லியமாகவும் செய்கிறார்கள் என்பதை மருத்துவர் கண்காணிப்பார். இந்தப் பயிற்சிக்கு 12 நொடிகள் போதுமானது. 12 நொடிகளுக்கு மேல் ஒருவர் எடுத்துகொண்டால் அவர் அடுத்தடுத்து விழுவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால், அவரை வீட்டில் பாதுகாப்பாக கவனிக்க வேண்டும்.

மூளை நரம்பியல், கண், இதய நோய், மனநல மருத்துவர்களிடம் முதியவரின் குறைபாட்டின் காரணத்தை அறிந்து சிகிச்சை செய்ய வேண்டும். நடக்கும்போது சரிசம நிலை தந்து தள்ளாட்டம் இல்லாமல் பார்த்துகொள்ளும் மூளையின் 'செரிபெல்லம்' சரியாகச் செயல்படுகிறதா? என்பதை வைத்தும் ஒருவர் அடிக்கடி கீழே விழுவாரா? என்பதை யூகிக்கலாம்.

முதியவரை ஒரு காலில் பத்து நொடிகள் நிற்கச் சொல்லவும். நின்று முடிந்ததும், நேர்க்கோட்டில் பத்து அடிகள் நடக்கச் சொல்லி, தள்ளாட்டம் ஏதுமில்லாமல் சரியாகச் செய்து விட்டால் மூளை சார்ந்த தள்ளாடப் பிரச்னை இல்லை என்பதை உறுதி செய்யலாம்.

இரவில் கழிவறை செல்லும் வழியில் மின் விளக்குகளை அமைத்து, அதற்கான ஸ்விட்சுகளை கைக்கெட்டும் தூரத்தில் வைக்க வேண்டும். வீட்டில் எங்கெல்லாம் தண்ணீர் புழக்கம் உள்ளதோ அங்கெல்லாம் மேட்களை போட்டு வைக்க வேண்டும். முதியோர் வாழும் இடத்தில் போடப்படும் மேஜை, நாற்காலி பிளாஸ்டிக்கில் இல்லாமல் மரத்தில் அல்லது இரும்பினால் செய்யப்பட்ட எடை உள்ளதாக இருக்க வேண்டும். ஒருவேளை வழுக்கி விழுந்தாலும் இந்த மேஜை, நாற்காலியைப் பிடிக்க, சாய்ந்து கொள்ள உதவும். சக்கரங்கள் பொருத்தப்பட்ட நாற்காலிகளைத் தவிர்க்க வேண்டும்.

கழிவறைகளில் சொரசொரப்பான டைல்ஸ்களைப் பயன்படுத்தலாம். கழிவறைக்குச் செல்லும்போது பிடிமானத்துக்காக, ரப்பர் செருப்புகளை அணி யலாம். பிடித்து நடக்க, அமர, எழ கைப்பிடிகளை சுவரில் பொறுத்த வேண்டும்.

வயதானவர்களுக்காக 'வெஸ்ட்டர்ன்' குளோஸட் பொருத்துவதும், குளியலறை கதவுகளில் இருபுறமும் திறக்கும் தாழ்பாள்களை வைப்பது நல்லது. முதியோர்கள் படியேறும்போது சிரமம் இல்லாமல் இருக்கவும் வழுக்காமல் இருக்கவும் படியின் உயரத்தை 15 சென்டி மீட்டருக்குள் அமைப்பது சிறந்தது. படி உயரமாக இருந்தால் கால் இடறி விழும் வாய்ப்பு அதிகம்.

எலும்புகளுக்கு வலிமை கூட்டும், 'வைட்டமின் டி' சத்துக்காக தினமும் இருபது நிமிடங்கள் சூரியக் குளியல் எடுக்கலாம். வைட்டமின் டி மாத்திரைகளை சாப்பிடலாம்'' என்கிறார் ஃபரூக் அப்துல்லா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com