
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்'' என்கிறார் 26 ஆண்டுகளாக மூலிகை உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் கோ.சக்திவேல்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திருக்காலிமேட்ரி நாதர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோ.சக்திவேல். இவர் அண்ணா விளையாட்டு மைதான வளாகத்தில் மூலிகைகளில் சூப், கஞ்சி வகைகள், சாறுகள், கஷாயங்கள் எனப் பலவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
நடைப்பயிற்சி செய்ய வருவோர் இவர் விற்பனை செய்யும் மூலிகை கஞ்சியில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு விட்டுத் தான் மற்ற பணிகளைத் தொடங்குகின்றனர். "ஹெர்பல் சக்திவேல்', "காஞ்சிபுரத்தின் போதி தர்மர்' என்றும் பலராலும் அழைக்கப்படும் அவரிடம் பேசியபோது:
""எனக்கு சிறு வயதிலிருந்தே இயற்கை வைத்தியத்தின் மீது ஆர்வம் அதிகம். அதனால் பாரம்பரியமாக இயற்கை வைத்தியம் பார்த்தவர்களிடம் மூலிகை கஞ்சி வகைகள் தயாரிப்பதையும், அவை உடலில் ஏற்படுத்துகிற மாற்றங்களையும்,அவற்றின் குணங்களையும் கற்றேன்.
எந்த மூலிகை எந்த நோயை தீர்க்கும் எனத் தெரிந்து கொண்டதால் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. இதனால் 1998- ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 26 ஆண்டுகளாக மூலிகை கஞ்சி வகைகளைத் தயாரித்து விற்பனை செய்கிறேன்.
முடக்கத்தான், முருங்கைக்கீரை,தூதுவளை உள்ளிட்ட சூப்புகளையும், குதிரைவாலி, காட்டு யானம், உளுந்தங்கஞ்சி, மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி, பூங்கார் உள்ளிட்ட கஞ்சி வகைகளையும், வெண்பூசணி, கீழாநெல்லி, மூக்கரட்டை, அருகம்புல்,கரிசலாங்கன்னி, கேரட் ஜூஸ், தேங்காய்ப்பால் ஆகிய மூலிகை சாறுகளையும், ஆவாரம்பூ, வாதநாராயணன், சரக்கொன்றை பூ, நீர்முள்ளி விதை ஆகிய கஷாயங்களையும் தினசரி தயாரித்து விற்பனை செய்கிறேன்.
சிறுநீரக கல், பித்தப்பை கல் ஆகியனவற்றை அறுவைச் சிகிச்சை இல்லாமல் கரைக்கவும், கிட்னியை புதியதாக புதுப்பிக்கும் குணமும் உடையது யானை நெருஞ்சில் குடிநீர்.
சிறுநீரக நோய் தொந்தரவுகளுக்கு மிகச் சிறந்தது இந்தக் குடிநீர்.
"ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ?' என்று ஒரு பழமொழியும் உண்டு. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்தது ஆவாரம்பூ கஷாயம். உடலையும் பொன்னிறமாக மாற்றும் சக்தியும் உடையது. வாத நாராயணன் கஷாயம் என்பது மூட்டுவலி, இடுப்பு வலி, உடல் வலிக்கு சிறந்தது. பக்கவாதம் வருவதையும் தடுக்கும். முடக்குவாதத்தை நீக்கும் தன்மையும் உடைய அருமருந்தாகும்.
தோல் நோய்களுக்கும்,மூச்சு விடுதலில் சிரமப்படுபவர்களுக்கும், ரத்தக் கொதிப்பு,சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் சரக்கொன்றை கஷாயம் அற்புத மருந்து.
தினசரி அதிகாலை 3 மணிக்கு எழுந்து மூலிகை கஞ்சி வகைகள் தயாரிக்கத் தொடங்கி விடுவேன். விற்பனை நேரம் போக மற்ற நேரங்களில் மூலிகைச் செடிகளை நேரில் பல இடங்களுக்கு சென்று சேகரிக்கிறேன்.
சிறுநீரகக் கல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட ஒருவர், "தான் மருத்துவமனைகளுக்குச் சென்றும் எங்களிடம் யானை நெருஞ்சில் குடிநீர் சாப்பிட்ட பிறகு 16 மி.மீ. சிறுநீரகக் கல் வெளியே வந்து விட்டது' என்று கூறியதும் மகிழ்ச்சியடைந்தேன்.
இவரைப் போல பலரும் எங்களிடம் குணமடைந்த விவரங்களை தினசரி வந்து ஒவ்வொன்றாகச் சொல்கிறபோது, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குகிறோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
தொண்டு நிறுவனங்கள் வாயிலாக மண் குளியல், வாழை இலைக் குளியல் ஆகியனவற்றை நாங்கள் கற்று கொடுக்கிறோம். அவை எந்தெந்த நோயை எவ்வாறு போக்குகின்றன என்றும் அதன் பயன்களையும் விரிவாக சொல்லி அவர்களை குணப்படுத்தியும் வருகிறோம்'' என்கிறார் கோ.சக்திவேல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.