சுயநலத்தோடு வாழ்வோர் பெருமளவு உள்ள இந்தக் காலத்தில் தன்னை உருவாக்கிய இந்தச் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறார் ஆனந்தன் அய்யாசாமி.
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதபேரி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இவர்தான் அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர்.
அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் இயக்குநராகத் தனது சொந்த உழைப்பால் உயர்ந்த ஆனந்தன் அய்யாசாமி, "வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை' என்ற அமைப்பை நிறுவி, சமூகச் சேவைகளைத் தொடர்கிறார்.
அவரிடம் பேசியபோது:
"நான் படித்ததெல்லாம் கிராமத்து கல்விநிறுவனங்களில்தான். அமெரிக்காவுக்குச் சென்று பல நிறுவனங்களில் பணியாற்றி ,பின்னர் ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயக்குநராகப் பணி செய்யும் வாய்ப்பு பெற்றேன்.
அப்பொழுதுதான் தமிழ்நாட்டில், தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியில், முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றான எஸ்தோனியாவைப் போல, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு "வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. பல்வேறு ஸ்டார்ட் அப் நிகழ்ச்சிகளை நடத்தினோம். தொழில் முனைவோருக்கான வசதிகளை ,அடிப்படை தேவைகளை உருவாக்கிக் கொடுத்து வந்தோம்.
தற்போது அதையும் தாண்டி, பல்வேறு சமூக சேவைகளைச் செய்ய தொடங்கினோம்.
மத்திய, மாநில அரசு துறை பணிகளில் சேருவதற்காக இளைஞர்களைத் தயார்படுத்தும் நோக்கில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை அளித்து மாதிரி தேர்வுகளையும் நடத்தினோம். கழிவறைகள் இல்லாத பள்ளிகளை கண்டறிந்து, ஆயிரம் கழிவறைகளைக் கட்டும் திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறோம்.
கிராமங்கள்தோறும் பயணிகள் நிழல் கூரைகளை அமைத்து தருவதுடன் குளக்கரைகளில் பனை விதைத்தல் பணியையும் செய்து கொண்டிருக்கிறோம்.
பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கண்காட்சிகள், முகாம்களை நடத்தி வருகிறோம். மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களைப் பெற்று தருவதற்காக கிராமப்புறங்களில் முகாம்களை நடத்தி வருகிறோம். கோரிக்கை வைக்கப்படும் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்துகிறோம்.
இப்படி சமூகச் சேவைகளைச் செய்து வரும் நிலையில் போதை பழக்கத்தால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாள்தோறும் ஊடகங்களில் செய்தி வெளியானதை பார்த்தவுடன் அதற்கு எதிராகவும் போராட வேண்டும் என நினைத்தேன்.
இளைஞர்கள் பலர் போதையால் அடிமையாகிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த போதை அடிமைத்தனத்தில் இருந்து இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டிய நிலை உருவாகிவிட்டது.
அதற்காகத்தான் பிரபலமானவர்களை அழைத்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல நினைத்தேன்.
சங்கரன்கோவிலில் அறக்கட்டளை சார்பில் அக்டோபர் 6-இல் நடைபெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பேரணி, பொதுக்கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி, úஸôகோ மென்பொருள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, மனித நேயம் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனர் சைதை துரைசாமி, கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பங்கேற்று, போதை ஒழிப்பு குறித்து வலியுறுத்திப் பேசினர்.
போதை பொருள்களுக்கு எதிராக, அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் .அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். தேசக் கட்டமைப்பை பலப்படுத்த போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.
மாணவர்கள் போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு வரவும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுக்கவும் போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்வோம்'' என்கிறார் ஆனந்தன் அய்யாசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.