"யார் அந்த சார்'? சமீபமாக அரசியல் வட்டாரங்களில் உச்சரிக்கப்படும் வார்த்தையாக உருமாறி உள்ளது. இந்த வார்த்தைகளையே தனது அடுத்தப் படத்துக்கு தலைப்பாக வைத்து விட்டார் இயக்குநர் வேலு பிரபாகரன். மன்சூரலிகான் நடிப்பில், வேலு பிரபாகரன் இயக்கத்தில் உருவாகும் படம் "யார் அந்த சார்'?
சமீபத்தில் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் ஒரே கேள்வி "யார் அந்த சார்'? அந்தக் கேள்வியை தலைப்பாக்கி, படத்தை மிகவும் விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறது படக்குழு. சென்ற வருடம் மதுவுக்கு எதிராக "சரக்கு' என்ற படத்தை எடுத்து, பரபரப்பை உருவாக்கியவர் மன்சூரலிகான். அனகா, ஸ்வாதி, கிரிஷ்டினா, அனீஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
பஹத் பாசில் - வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் "மாரீசன்' பட வெளியீடு குறித்த புதிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாசில், வடிவேலு, விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
"லவ் டுடே', "டிராகன்' படங்களின் வெற்றிகளின் மூலம் தமிழில் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் தனக்கான இடத்தை பிடித்திருக்கிறார்.
இப்பொழுது பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிவித்திருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பிரதீப் ரங்கநாதன் இடம் பெறும்படியான காட்சிகளுடன் பூஜை தொடங்கியுள்ளது. "பிரேமலு' படப்புகழ் மமிதா பைஜு இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் "ஆர் பி எம்' டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும் கோவை சரளா, ஒய். ஜி. மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்ள சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார்.
கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார்.
பூரி ஜெகன்நாத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் கைவண்ணத்தில், விஜய் சேதுபதி இதுவரை பார்த்திராத கோணத்தில் இப்படத்தில் தோன்றவுள்ளார்.
இப்படம் ஒரு மிகப்பெரிய பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கெளர் இணைந்து, பூரி கனெக்ட்ஸ் பட நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளனர். கடந்த உகாதி தினத்தன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இப்பபடத்தை அறிவிக்கும் வகையில், விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கெளர் ஆகியோர் புன்னகையுடன் இணைந்திருக்கும் அழகான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.