திரைக் கதிர்

கட்டணமில்லா www.vvvsi.com என்ற இணையதளத்தை மதுரையில் அண்மையில் தொடங்கி வைத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
Updated on
2 min read

இளையத் தலைமுறையினர் வேலைவாய்ப்புகளை எளிதில் பெற வழிகாட்டும் வகையில், கட்டணமில்லா www.vvvsi.com என்ற இணையதளத்தை மதுரையில் அண்மையில் தொடங்கி வைத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

கடந்த 10 ஆண்டுகளாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், படித்தோர் வாழ்க்கையில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்புத் தகவல்களை அவரது தலைமையில் செயல்படும் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கத்தினர் பகிர்ந்துவருகின்றனர். 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, எந்த

விதமான கட்டணமும் இன்றி 2.17 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை தனியார் நிறுவனங்களில் பெற்றுத் தந்துள்ளது.

சீமான்
சீமான்

உலக அளவில் ஆஸ்கருக்கு தேர்வான படங்களில் ஒன்றாகவும், இந்திய அளவில் தேர்வான 5 படங்களில் ஒன்றாகவும் 'டூரிஸ்ட் பேமிலி' படம் தேர்வாகியுள்ளது.

இதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'ஆருயிர் இளவல் யுவராஜின் மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அன்புமகன் இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான திரை ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு, மாபெரும் வெற்றிப்படைப்பான 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் 98-ஆவது ஆஸ்கர் விருது போட்டியில் தேர்வாகியுள்ளது.

அப்படம் ஆஸ்கர் விருதைப் பெற வாழ்த்துகிறேன்' என்று கூறியுள்ளார்.

அருள்நிதி
அருள்நிதி

அருள்நிதி - அஜய் ஞானமுத்து கூட்டணியில் வெளியான படம் 'டிமாண்டி காலனி'. இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பை முன்வைத்து, இதன் 2-ஆம் பாகம் உருவாக்கப்பட்டது. அதுவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதன் தொடர்ச்சியாக 3-ஆம் பாகத்தை படக்குழு உருவாக்கி இருக்கிறது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கோடை விடுமுறைக்கு 'டிமாண்டி காலனி 3' வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அஜய் ஞானமுத்து இயக்கி வரும் இப்படத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பார்வதி
பார்வதி Silverscreen Inc.

மலையாள நடிகையான பார்வதி தமிழில் வெளியான 'பூ', 'மரியான்', 'உத்தம வில்லன்', 'தங்கலான்' உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், தனுஷின் 'மரியான்' படப்படப்பிடிப்பின்போது தன்னை உடை மாற்ற அனுமதிக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

'மரியான்' படப்பிடிப்புத் தளத்தில் தன்னைச் சேர்த்து மொத்தம் 3 பெண்கள் மட்டுமே பணிபுரிந்ததாகவும், அது தனக்குக் கடினமாக இருந்ததாகவும், தனக்கு ஆதரவாக அங்கு யாருமில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டு வெளியான 'மரியான்' படத்தை பரத் பாலா இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com