ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்து தருகிறோம்!

'இலக்கியம், மருத்துவம், ஜோதிடம், கலைகள்போன்றவற்றை உள்ளடக்கிய தகவல்கள் அடங்கிய ஒலைச்சுவடிகளை அவற்றின் அற்புதங்கள் தெரியாமல் பலரும் வைத்திருக்கிறார்கள்.
ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்து தருகிறோம்!
Published on
Updated on
2 min read

'இலக்கியம், மருத்துவம், ஜோதிடம், கலைகள்போன்றவற்றை உள்ளடக்கிய தகவல்கள் அடங்கிய ஒலைச்சுவடிகளை அவற்றின் அற்புதங்கள் தெரியாமல் பலரும் வைத்திருக்கிறார்கள். அவை அடுத்தத் தலைமுறைக்கான வழிகாட்டுதல்களையும், செந்தமிழ் மொழியின் வளம் பெருக்கும் வரலாற்று செய்திகளையும் வெளிப்படுத்தக் கூடும்.

அறிவின் உருவகமான ஓலைச்சுவடிகள் உங்களிடமோ, உங்களுக்கு தெரிந்தவர்களிடமோ இருக்குமானால் அதை தூக்கி எறிந்து விடாதீர்கள். அதை எங்களிடம் கொண்டு வந்து கொடுத்தால் அவற்றை சுத்தம் செய்தும், புகைப்

படம் எடுத்தும், ஆவணப்படுத்தியும் தருகிறோம்'' என்கிறார் காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீநிவாசு.

அவரிடம் பேசியபோது:

'கல்விக்கடவுள் சரஸ்வதி, ஞானத்தைப் போதிக்கும் தட்சிணாமூர்த்தி, ஆதிசங்கரர், திருவள்ளுவர், வியாசர்,கம்பர், மாணிக்கவாசகர்,அருணகிரிநாதர் போன்றவர்களை ஒலைச்சுவடிகளைத் தாங்கியவர்களாகவே தரிசிக்கிறோம். இவர்கள் மூலமாக காகிதங்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்பே ஒலைச்சுவடிகள்தான் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன என்பதும் தெளிவாகும்.

ஒலைச்சுவடிகளைத் தேடிச் சென்று,கண்டுபிடித்து,சேகரித்து, அவற்றை இலக்கியங்களாக பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர். இந்தப் பழமையான ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் பணியில் காஞ்சிபுரம் சங்கர மடம் ஈடுபட்டு வருகிறது.

பீடாதிபதிகளின் யாத்திரைகளின்போது சேகரிக்கப்பட்டவையும், கும்பகோணம், திருவானைக்காவலில் உள்ள சங்கர மடத்தின் கிளைகளில் இருந்த ஏராளமான ஒலைச்சுவடிகள் தலைமையிடமான காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை பாதுகாக்குமாறு மகா பெரியவா, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

ஏனாத்தூரில் சங்கரா பல்கலைக்கழகமானது 1993 -இல் தொடங்கப்பட்டபோது, அந்த ஓலைச்சுவடிகள் பல்கலைக்கழகத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அப்போதே ஒலைச்சுவடிகள் பராமரிப்பு, ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டது. இந்த மையத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் உள்ளன.

பெரும்பாலான ஓலைச்சுவடிகள் கிரந்தம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. ஓலைச்சுவடி எந்த எழுத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அதை நாங்கள் ஆறு மொழிகளில் உள்ள எழுத்துகளாக மாற்றி பாதுகாத்து வருகிறோம். முதலில் ஓலைச்சுவடிகளில் உள்ள கருத்துகளை அந்த மொழி தெரிந்த அறிஞர்கள் மூலமாக தெரிந்து,கருத்துகளைத் தட்டச்சு செய்து, புத்தகமாகவும் மாற்றி வருகிறோம்.

எந்த ஓலைச்சுவடியாக இருந்தாலும் முதலில் அவற்றின் மீது எண்ணெய் தடவி,சுத்தம் செய்து,பராமரித்து, புகைப்படம் எடுத்து, புத்தகமாகவும் ஆவணப்படுத்தி வருகிறோம். இதற்கென்றே எங்களது பல்கலையில் பல மொழிகளும் தெரிந்த அறிஞர்களும்,தொழில் நுட்ப வல்லுநர்களும் பணியாற்றி வருகின்றனர்.

கோயில்களின் சிறப்புகள், வரலாறுகள், பூஜை முறைகள், வேதக் கருத்துகள், மருத்துவச் சந்தேகங்கள்,ஜோதிட விவரங்கள், பழைய பஞ்சாங்கங்கள், இசை ராகங்கள், தனிநபர்களது குடும்ப விவரங்கள்,பாரம்பரியம்,பழங்கால கல்வி நிறுவனங்கள், ஆன்மிக நிறுவனங்கள், நிலங்களின் விவரங்கள் இப்படியாக பலரும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புத செய்திகள் ஓலைச்சுவடிகளில் இடம்பெறுகின்றன.

தமிழ்,தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில்தான் அதிகமாகவும், கன்னடம், மலையாளத்திலும் ஓலைச்சுவடிகள் இருக்கின்றன.எழுத்து சார்ந்த ஓலைச்சுவடிகளில் கிரந்த எழுத்துகள் அதிகம்.

இவை தவிர காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சாரதா, கர்நாடகத்தைச் சேர்ந்த நந்தி நாகரி,சம்ஸ்கிருத மொழிக்கான தேவநாகரி எழுத்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியனவற்றால் எழுதப்பட்டுள்ள ஓலைச்சுவடிகளும் இருக்கின்றன. நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இதில் உள்ளவற்றை படியெடுக்கத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியைக் கொண்டு மிகவும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரியார் சுவாமிகள் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மிக முக்கிய கருத்துகள் உடைய பழமையான ஓலைச்சுவடிகளை இணையத் தரவுகளா மாற்றி வடிவமைத்து, பாதுகாத்து வருகிறோம். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களும் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

பாரம்பரியமும்,பழமையும் நிறைந்தது காஞ்சிபுரமானது பெரும் கல்வி நிறுவனங்களும், தமிழ் அறிஞர்களும் இருந்த பெருமைக்குரிய நகரமாகும். எனவே காஞ்சிபுரத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஓலைச்சுவடிகளையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறோம். இந்த அரும்பணியை காஞ்சிபுரம் சங்கர மடம் பல்கலைக்கழகத்தின் மூலமாக சிறப்பாகச் செய்து வருகிறது.

ஒலைச்சுவடிகளில் உள்ள கருத்துகளை நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தும், தொகுத்தும், பதிப்பித்தும், பல ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறோம்.மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகமும் நிதி உதவி செய்து வருகிறது.

பனை ஓலைச்சுவடிகள் சார்ந்த ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த நவீன அறிவியலை மாணவர்களுக்கு பயிற்சியாகவும், அந்தப் பயிற்சிக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறோம். இந்தப் பயிற்சியை கற்றால், கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துகளையும் அறியலாம். இவையிரண்டிலும் உள்ள எழுத்துகள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. பயிற்சியை கற்ற மாணவர்கள் ஓலைச்சுவடி சார்ந்த ஆராய்ச்சி நிலையங்களிலும் பணிபுரியலாம்.

பலரும் தங்களிடம் உள்ள ஓலைச்சுவடிகளையும் எங்களிடம் கொண்டு வந்து கொடுத்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று கேட்டறிகின்றனர். அவ்வாறு கொண்டு வந்த பல ஓலைச்சுவடிகளில் குடும்பங்களின் பாரம்பரியங்கள்,தலைமுறை வாரிசுகளின் பெயர்களையும் தெரிந்துகொள்கிறார். அவர்கள் விரும்பினால் அவர்கள் கொண்டு வந்த ஓலைச்சுவடிகளை நாங்களே சுத்தப்படுத்தி, ஆவணப்படுத்தி அவர்களிடமே அதை திருப்பி கொடுத்தும் வருகிறோம்.

உங்களிடம் உள்ள எந்த ஓலைச்சுவடிகளாக இருந்தாலும்,அவை கரையான் அரித்திருந்தாலும் அவற்றை தேவையில்லை என்று தூக்கி எறிந்து விடாதீர்கள். எனெனில் அவையனைத்தும் அரிய பொக்கிஷங்கள்'' என்கிறார் ஸ்ரீநிவாசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com