கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி...

'கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி கற்பிக்க வேண்டும்' என்ற லட்சியத்தோடு செயல்பட்டு வருகிறார் ஆர்.செல்லதுரை.
கிராமப்புற மாணவர்கள்
கிராமப்புற மாணவர்கள்
Published on
Updated on
1 min read

பெ.பெரியார்மன்னன்

'கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி கற்பிக்க வேண்டும்' என்ற லட்சியத்தோடு செயல்பட்டு வருகிறார் ஆர்.செல்லதுரை. இவர் தனது இளம்வயதில் ஆத்தூர் அருகிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணியேற்று, மாணவர்களுக்கு நன்முறையில் கல்வி புகட்டியவர். அதில், கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, வாழப்பாடியில் கல்வி தேவதை சரஸ்வதி ஆங்கில வழிப் பள்ளியைத் தொடங்கினார்.

கல்வியுடன், விளையாட்டையும் முறையாகக் கற்பித்து நல்லதொரு இளையத் தலைமுறையை உருவாக்கி வரும் அவரிடம் பேசியபோது:

'சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட தம்மம்பட்டியை அடுத்த கீரிப்பட்டி கிராமம்தான் எனது பூர்விகம். எனது பெற்றோரான ஓய்வு பெற்ற வன அலுவலர் ராஜீ- சகுந்தலா ஆகியோர் சிறு வயதிலேயே சேவை மனப்பான்மையை எனக்கு ஊக்குவித்து வந்தனர். அறிவியலில் முதுநிலை ஆசிரியர் பட்டம் பெற்ற நான், வாழப்பாடியில் 25 ஆண்டுகளுக்கு முன் ஆங்கில வழிப் பள்ளியைத் தொடங்கினேன்.

எனது கடின உழைப்பாலும், ஆசிரியர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும், தொடர் முயற்சியாலும் மழலையர் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த முடிந்தது. தேர்வுகளிலும், போட்டிகளிலும் மாணவர்கள் சிறப்பிடம் பெற்று சாதனை படைக்கின்றனர்.

ஆண்டுதோறும் எமது பள்ளி மாணவ, மாணவியரை பெங்களூரு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அழைத்துச் சென்று, விண்கலங்கள், ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் ஏவும் முறை, செயல்படும் விதம் குறித்து விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடம் நேரடி செயல்

விளக்கம் பெற வைக்கிறோம். மத்திய அரசின் நிதியுதவியுடன் பள்ளி வளாகத்தில் தொலைநோக்கி மையத்தை ஏற்படுத்தி, ஆர்வமுள்ள மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம்.

எங்கள் பள்ளியில் படித்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர், பல்வேறு துறைகளில் சமூக நட்சத்திரங்களாகப் பிரகாசித்து வருகின்றனர்.

கிராமப்புற மாணவ-மாணவியரை விளையாட்டுகளில் சாதனை படைக்கச் செய்யும் நோக்கில், பாலமுருகன் சிவராமன் சுவாமிகளுடன் இணைந்து 'வாழப்பாடி விளையாட்டுச் சங்கம்' சார்பில் பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகளை அளித்து வருகிறோம். தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதையும் பெற்றுள்ளேன்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதும் எனக்கு தணியாத மோகம். தம்மம்பட்டி, கீரிப்பட்டி, கூலமேடு, கொண்டையம்பள்ளி, செந்தாரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளுக்கு வர்ணனையாளராக இருந்துள்ளேன்.

வாழப்பாடி அரிமா சங்கம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ இயக்கங்களுடன் இணைந்து, சமூகச் சேவைகளையும் செய்து வருகிறேன். எனது பணிகளுக்கு மனைவி கவிதா, மகன் அஸ்வின் ஆகியோர் உறுதுணையாக இருக்கின்றனர்'' என்கிறார் செல்லதுரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com