வேர்களைத் தேடி..!

வேர்களைத் தேடி..!

'தமிழக வரலாற்றில் அறியப்படாத விஷயங்கள், தகவல்களைத் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு சேகரித்து நூல்களாக வெளியிடும் பணியைத் தொடருவோம்.
Published on

'தமிழக வரலாற்றில் அறியப்படாத விஷயங்கள், தகவல்களைத் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு சேகரித்து நூல்களாக வெளியிடும் பணியைத் தொடருவோம். இது எதிர்காலத் தலைமுறையினருக்கு விட்டுச் செல்லக் கூடிய பொக்கிஷமாகும்' என்கிறார் 'ஐ.என்.ஏ. வேர்களைத் தேடி' நூலாசிரியர் எம்.குமரேசன்.

தமிழகத்தில் உள்ள ஐ.என்.ஏ. வீரர்களின் போராட்ட வரலாறு, அனுபவங்கள் குறித்து அவர்களது குடும்பத்தினரைக் கேட்டறிந்து ஐ.என்.ஏ. வேர்களைத் தேடி' என்ற நூல் தமிழிலும், 'ஸ்வட், பிளட், டியர்ஸ் ஆஃப் இன்டியன் நேஷனல் ஆர்மி வித்ரன்ஸ் ஆஃப் தமிழ்நாடு' (வியர்வை, ரத்தம், கண்ணீர் சிந்திய தமிழக ஐ.என்.ஏ. சுதந்திரப் போராட்ட வீரர்கள்) என்ற நூல் தமிழ், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை அண்ணா நகரில் இயங்கி வரும் 'சென்டர் பார் சௌத் இன்டியன் ஸ்டடிஸ்' தொண்டு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட இந்த நூல்களை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 23-இல்நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.

இதுகுறித்து அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.குமரசேனிடம் பேசியபோது:

'அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு படித்துவிட்டு, மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் கலாசாரம், இந்திய வரலாறு குறித்து எதிர்காலத் தலைமுறையினர் அறிவதற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. இதனால் மென்பொருள் நிறுவனப் பணியை உதறிவிட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அறியப்படாத விஷயங்கள், தமிழக வரலாறு, ஆராய்ச்சிகள் குறித்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

முதலாவது பணியாக, இந்தியச் சுதந்திரத்தின் 75-ஆவது விழாவையொட்டி, 'ஓலம், என்ற பெயரில் ஆவணப் படத்தைத் தயாரித்தோம். இதில், 16-ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடிக்கு டச்சுக்காரர்கள் வருகையில் தொடங்கி, மாமன்னர் பூலித்தேவனின் ஆங்கிலேய எதிர்ப்பு முதல் 1947-ஆம் ஆண்டு வரையில் இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் பதிவு செய்தோம். 12 தலைப்புகளில், ஒவ்வொன்றும் அரை மணி நேரம் ஓடும் விதமாக, ஆறு மணி நேரம் ஆவணப் படம் தயாரானது. இந்தப் படத்தை 2021-இல் மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டார்.

இரண்டாவதாக, 2022-இல் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் 125 பேர் குறித்து தகவல்களைச் சேகரித்து, பூலித்தேவன் முதல் ஐ.என்.ஏ. வீரர்கள் வரையில் தொகுத்தோம். மக்கள் முதல் மன்னர்கள் வரையில் ஆங்கிலேயர்களை எதிர்த்ததும், தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் இடம்பெற செய்தோம். 'தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள்' என்ற 125 பக்க தமிழ் நூலை அல்லையன்ஸ் கம்பெனி வெளியிட்டது. 'இன்டோமிட்டஸ்' என்ற ஆங்கில நூலையும் வெளியிட்டோம். இந்த இரு நூல்களையும் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி வி.கணேஷ் வெளியிட்டார்.

மூன்றாவதாக, சென்னையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் சுசீலு லட்சுமிநாக செட்டியின் வாழ்க்கை வரலாற்று நூலை தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் தயாரித்தோம். இதை ஆளுநர் ஆர்.என்.ரவி, மேகாலய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வைத்தியநாதன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

நான்காவதாக, 'ஐ.என்.ஏ. வேர்களைத் தேடி', என்ற தமிழ் நூலையும், 'ஸ்வட், பிளட், டியர்ஸ் ஆஃப் இன்டியன் நேஷனல் ஆர்மி வித்ரன்ஸ் ஆஃப் தமிழ்நாடு' (வியர்வை, ரத்தம், கண்ணீர் சிந்திய தமிழக ஐ.என்.ஏ. சுதந்திரப் போராட்ட வீரர்கள்) என்ற நூலை தமிழ், ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளோம்.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்கு அளப்பரியது. அவரால் நிறுவப்பட்ட இந்தியத் தேசிய ராணுவப் படையில் (ஐ.என்.ஏ.) தமிழர்கள் அதிக அளவில் சேர்ந்தனர். இந்தத் தமிழ் வீரர்களின் அர்ப்பணிப்பும், தியாகமும் எதிர்காலத் தலைமுறையினர் அறிய வேண்டியது அவசியம். இதற்கான பணி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றது.

சேலத்தைச் சேர்ந்த முதுகலை ஆங்கிலப் பட்டதாரி மாணவர் குமரேசன் கோபால் 2023-ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் பயணித்து, ஐ.என்.ஏ. வீரர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து, வீரர்களின் தியாகம், அனுபவங்களை வீடியோவில் பதிவு செய்தார். வீரர்கள், அவர்களது குடும்பத்தினரிடம் இருந்த ஐ.என்.ஏ. ஆவணங்கள், அவர்களது குறித்த செய்திகள், அவர்களது குடும்பத்தினர் சிலர் வெளியிட்டிருந்த நூல்களைத் தொகுத்தார்.

தமிழக அரசு 1962-இல் வெளியிட்ட 'ஹூ இஸ் ஹீ' (யார் எவர்) என்ற 'கெசட்'டில், ஐ.என்.ஏ, சுதந்திரப் போராட்ட வீரர்கள் அகரவரிசையின்படி, இடம்பெற்றிருந்தனர். இந்த ஆவணத்தின்படியும், சுற்றுப்பயணம் செய்து திரட்டிய தகவல்களைத் தொகுத்து வீரர்களின் தியாக வரலாற்றை குறிப்பாக எழுதி, தற்போதைய மாவட்ட வாரியாக 540 பக்கங்களில் வெளியிட்டுள்ளோம்.

ஐ.என்.ஏ. வீரர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்கும்போது, கல்லூரி மாணவருக்கு நேரிட்ட அனுபவங்கள், உரையாடல்கள், சுவையான நிகழ்வுகளைச் சுவையாகத் தொகுத்து நாவல் வடிவில் 'ஐ.என்.ஏ. வேர்களைத் தேடி' என்ற நூலை நான் எழுதி வெளியிட்டுள்ளேன். இந்த நூலை வாசிக்கும்போது, வரலாற்று நிகழ்வைத் தேடி செல்லும்போது எவ்வளவு முன்னேற்பாடுகள் தேவைப்படும், சவால்கள், சங்கடங்கள், உழைப்பு குறித்து அறிய உதவும். எதிர்காலத்தில் ஆய்வு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் வாசிக்க வேண்டியது அவசியமானதாகும்' என்கிறார் எம்,குமரேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்