பிரமிக்க வைத்த பிரான்ஸ் கலைஞர்கள்!

'செம்புலப் பெயர் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என்ற சங்கப் பாடலுக்கு எடுத்துக்காட்டாக பிரான்ஸ் நாட்டு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் புதுச்சேரி மக்களைப் பெரிதும் கவர்ந்தது.
பிரமிக்க வைத்த பிரான்ஸ் கலைஞர்கள்!
Published on
Updated on
3 min read

'செம்புலப் பெயர் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என்ற சங்கப் பாடலுக்கு எடுத்துக்காட்டாக பிரான்ஸ் நாட்டு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் புதுச்சேரி மக்களைப் பெரிதும் கவர்ந்தது.

இந்திய நாடே ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்தபோது, பாண்டிச்சேரி மட்டும் பிரான்ஸ் நாட்டு பகுதியாகி மக்கள் இயல்பான வாழ்க்கையை அனுபவித்தனர். அதுமட்டுமல்லாது, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தமிழ்நாட்டின் தியாக வீரர்களின் பாதுகாப்பான இடமாகவும் பாண்டிச்சேரி திகழ்ந்திருந்தது. அரவிந்தர், மகாகவி பாரதியார், வ.வே.சு.அய்யர்... உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்டத் தலைவர்களது சரித்திரம் இதனை உறுதிப்படுத்துகிறது.

பாண்டிச்சேரியானது பிரான்ஸ் காலனியாக இருந்தது என்பதைவிட பாண்டிச்சேரி கலாசாரத்தின் அங்கமாகவே பிரான்ஸ் நாட்டவர் மாறியிருந்தனர். அதனடிப்படையில்தான் தற்போதும் பிரான்ஸ் நாட்டு கலாசார எச்சங்களாக, தற்போதைய புதுச்சேரியில் பிரான்ஸ் கட்டடங்களையும், பிரான்ஸ் பள்ளிகள், தேவாலயங்கள், மொழி ஆய்வு மையம், நூலகம் ஆகியவற்றையும் காணமுடிகிறது.

அதை மீண்டும் நினைவூட்டும் வகையில், இந்தோ, பிரான்ஸ் கலை, பண்பாட்டு நிகழ்வானது புதுச்சேரி கடற்கரையின் சாலை காந்தி சிலை சதுக்கத்தில் தொடங்கி மூன்று நாள்கள் அண்மையில் நடைபெற்றன.

புதுவை மாநில கலைகளையும், பிரான்ஸ் நாட்டு கலைகளையும் இணைத்து இரு பகுதி கலைஞர்களும் நிகழ்த்திய ஆடல், பாடல், சாகசம் என அனைத்து நிகழ்வுகளும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றன. அதற்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து 12 பேர் புதுச்சேரிக்கு வருகை தந்து, நமது பாரம்பரியக் கலைஞர்கள் 10 பேருடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தினர்.

பிரான்ஸ் நாட்டு பாரம்பரிய பொம்மை ஆட்டத்தை, பிரடெரிக் சைமன் தலைமையில் புதுச்சேரி கலைஞர்களும் இணைந்து நடத்தினர். தாரை தப்பட்டைக்கு பிரான்ஸ் நாட்டு பெரிய பொம்மைகளை கையில் கம்புகொண்டு ஆடவைத்தது, நம்மூர் கிராமத் திருவிழா பொம்மலாட்டத்தை நினைவுப்படுத்தியது. பிரான்ஸ் பொம்மை ஆட்டத்தை துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன், முதல்வர் என்.ரங்கசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ரசித்து பார்த்து வியந்தனர்.

இந்தியக் கலை, பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட பிரான்ஸ் பொம்மலாட்ட நடனக் கலைஞர் பிரடெரிக்சைமன், தற்போது ஜெயின் மதத்தை தழுவி ஆன்மிகத்தில் தீவிரமாகிவிட்டதாகவும் கூறி ஆச்சரியமூட்டினார்.

பிரான்ஸ் நாட்டு இசைக்கு பாரதியார் கலைக்கூட மாணவியர் அபிநயம் பிடித்து பரதநாட்டியமாடி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினர். அவர்களுடன் பிரான்ஸ் நடனக் கலைஞர் லில்லி ஜங்க் இணையாக பரதநாட்டிய அபிநயத்தை விரல்கள்,முகபாவங்களில் காட்டி அசத்தினார்.

அப்போது லில்லி ஜங்க் கூறுகையில், 'நம்முடைய பரதம், பிரான்ஸின் பாரம்பரிய நடன அசைவுகளுக்கு நிகராக இருக்கிறது' என்று பெருமைப்பட்டார். அதேபோல, புதுச்சேரியின் மேளதாளம், தவில் இசைக்கு ஏற்ப பிரான்ஸ் கலைஞர்கள் ஒவ்வொரு நடனத்தையும் நளினமாகவும், நாகரிகமாகவும் அமைத்து ஆடியது பொதுமக்களை ரசிக்க வைத்தது.

உலக அளவில் பிரபலமான பிரான்ஸ் நாட்டு பாப் பாடகியான ஜூலி கிலாடன் மைக்கை தனது கையில் பிடித்தபடி ஆடிய அசத்தல் நடனமும், அமைதி, ஆவேசம் என முகபாவங்களை வெளிப்படுத்தி பாடிய பாட்டும் அங்கிருந்தோர் அனைவரையும் ஆட்டம் போடவைத்தது.

'உலக அளவில் இதுவரை 650 மேடைகளில் நான் பாடி ஆடினேன். புதுச்சேரி கடற்கரையோரத்தில் மக்கள் மத்தியில் கட்டுப்பாடற்றச் சூழலில் பாடியதும், அதை சாமானியர் முதல் தனது பாப் ஆல்ப இசை ரசிகர் வரை குழந்தைகள், பெரியவர்கள் என இணைந்திருந்து ரசித்ததும் வாழ்க்கையில் மறக்கமுடியாதது' என்கிறார் முப்பத்து இரண்டு வயதான ஜூலி கிலாடன்.

தண்ணீரின் அவசியத்தை விளக்கி பிரான்ஸ் நடனக் கலைஞர் அலி சல்மி ஆடிய நடனம் கண்களை விரியவைத்து 'உச்' கொட்டவைத்துவிட்டது. அவர் பாம்பு போல தரையில் ஊர்ந்தும், முதலை போல உருண்டும், புரண்டும், ரப்பர் போல வளைந்து ஆடியதும், பின்புலத்தில் இடி மின்னல் என மின்னணுத் திரையில் காட்சிகள் ஓடியதும், பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது. அவர் பாரதி பூங்காவில் பசுமை காக்கும் விழிப்புணர்வுக்காக மரத்தில் தலைகீழாகத் தொங்கியும், கற்சிலைகளில் ஏறியும் ஆடிய அந்தரத்து நடனம் அடடா...என அனைவரையும் பேசவைத்தது.

இப்படி ஆட்டம், பாட்டத்துடன், பிரான்ஸ் நாட்டு உணவுகளை வெளிப்டுத்தும் வகையில் உணவுக் காட்சியும் நடைபெற்றது. சுமார் 30 வகையான பிரான்ஸ் நாட்டு உணவில் நம்மூரின் பணியாரம் உள்ளிட்ட பலகாரங்களை காப்பியடித்த உணவுகளும் இடம் பெற்றிருந்தன.

'புதுச்சேரியில் நடைபெற்ற இந்தோ, பிரான்ஸ் கலாசார பரிமாற்ற கலை நிகழ்வை புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டவர் பிள்ளை குட்டிகளுடன் வந்து பார்த்து குதூகலித்தனர். இரு நாட்டு மக்களும் ஒரே இடத்தில் அமர்ந்து தங்களது கலாசாரக் கலப்பு நிகழ்வுகளை ரசித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது' என்கிறார் புதுச்சேரி வாசியான பிரான்ஸ் நாட்டு இன்லீநி.

கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு புதுவையில் பணிபுரிந்த பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளுக்காக முக்கிய விருந்தின்போது அந்த நாட்டு கலைஞர்கள் புதுச்சேரி வந்து கலை நிகழ்ச்சியில் பங்கேற்றுவந்ததையும் வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன. அந்தப் பதிவுகள் மீண்டும் புதுச்சேரியில் பதிவேற்றப்பட்டதாகவே இந்தோ, பிரான்ஸ் கலாசார நிகழ்வு அமைந்திருப்பதாக சரித்திர ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து சுற்றுலாத் துறை அமைச்சர் க.லட்சுமிநாராயண் கூறுகையில், 'புதுச்சேரியில் இன்னும் பிரான்ஸ் நாட்டவர் ஏராளமாக உள்ளனர். அதேபோல, பிரான்ஸில் புதுச்சேரி மக்கள் ஏராளமாக உள்ளனர். அதனால் இரு பகுதி கலாசாரத்தையும் இணைக்கும் வகையில் இந்த கலை நிகழ்வு அமைந்தது' என்றார்.

புதுவை அரசுடன் இணைந்து நிகழ்வை ஏற்பாடு செய்த நவயுக அமைப்பின் நிறுவனர் பி.மோகன்தாஸ், ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஜயமோகன் ஆகியோர் கூறுகையில், 'பிரான்ஸ் நாட்டவர் நமது கலாசாரப் பண்பாடுகளுடன் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றனர். வாழ்க்கையில் பாதுகாப்பான கலாசாரமாகத் தமிழ் கலாசாரத்தை பிரான்ஸ் நாட்டவர் கருதிவருகின்றனர்.

ஆகவே, கலை, பண்பாடுகளை வெளிப்படுத்தும் நடனம், இசை, நாடகம் போன்றவற்றை நாம் மாறிமாறி நடத்துவது அவசியம்' என்கின்றனர். கைப்பேசி, இணையதளம் என தற்போது குறுகிய வட்டத்தில் மூழ்கிப் போய்விட்ட இளம்தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டவர் நிகழ்த்திய நடன, இசை, விழிப்புணர்வு நிகழ்வுகள் அமைந்திருந்தது.

படங்கள்: கி.ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com