பி.எஸ்.இ.
பி.எஸ்.இ.

ஆலமரத்தடியில் தொடங்கி, ஆலமரமாய்...

ஆசியக் கண்டத்தின் பழமையான பங்கு பரிவர்த்தனை அமைப்பான 'பி.எஸ்.இ.' என்ற 'பம்பாய் பங்கு பரிவர்த்தனை அமைப்பு' தொடங்கப்பட்டு , 150 ஆண்டுகள் ஆகின்றன.
Published on

சக்கரவர்த்தி

ஆசியக் கண்டத்தின் பழமையான பங்கு பரிவர்த்தனை அமைப்பான 'பி.எஸ்.இ.' என்ற "பம்பாய் பங்கு பரிவர்த்தனை அமைப்பு' தொடங்கப்பட்டு , 150 ஆண்டுகள் ஆகின்றன. தொடக்கத்தில் ஆலமரத்தின் கீழ் செயல்படத் தொடங்கிய இந்த அமைப்பு, உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தைகளில் ஒன்றாகியுள்ளது.

1850-இல் ஐந்து பங்குத் தரகர்கள் பம்பாய் (தற்போது மும்பை) டவுன் ஹாலுக்கு முன்னுள்ள ஆலமரத்தின் கீழ் கூடினர். அங்குதான் 'ஹார்னிமன் வட்டம்' அமைந்திருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, தரகர்கள் தங்கள் பங்கு பரிவர்த்தனை செய்வதை மெடோஸ் தெருவின் சந்திப்பில் உள்ள ஆலமரங்களின் கீழ் மாற்றிக் கொண்டனர்.

அந்த இடம் அன்று 'எஸ்பிளனேட்' என்று அழைக்கப்பட்டு, தற்போது "மகாத்மா காந்தி சாலை என்று அழைக்கப்படுகிறது. தரகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவ்வப்போது இடங்கள் மாற வேண்டிவந்தது.

1874- இல், தரகர்கள் பம்பாய் தலால் தெருவில் உள்ள கட்டடத்துக்கு மாறினர். 1875-இல் 'பூர்விகப் பங்கு பரிவர்த்தனை, பங்கு தரகர்கள் சங்கம்' என்று அழைக்கப்படும் அதிகாரபூர்வ அமைப்பாக மாறியது. இந்தச் சங்கமானது ஒவ்வொரு தரகரிடமிருந்தும் ரூ. 1 பங்களிப்போடு நிறுவப்பட்டது. தலால் தெரு வர்த்தகக் கட்டடத்துக்கு மாத வாடகை செலுத்த சங்கத்தைத் தொடங்கிய

தரகர்கள் மிகவும் சிரமப்பட்டனர். அப்போது இந்தியாவின் முதல் ஜவுளி ஆலையின் நிறுவனர் டின்ஷா மானெக்ஜி பெட்டிட் உதவும் வகையில், தனது ஜவுளி நிறுவனமான 'விக்டோரியா உற்பத்தி நிறுவன லிமிடெட்' பங்குகளை நன்கொடையாக வழங்கினார்.

1899-இல் 'பெட்டிட்' என பெயரிடப்பட்ட தங்கள் சொந்தக் கட்டடத்திற்கு தரகர்கள் தங்கள் அமைப்பை மாற்றினர். அமைப்பின் பெயரையும் 'பம்பாய் ஸ்டாக் எக்சேஞ்ச்' என மாற்றினர். இன்று "பி.எஸ்.இ.'

29 மாடி கட்டடமாக உயர்ந்ததுடன் மும்பையின் அடையாளமாக மாறியுள்ளது. அந்தக் கட்டடத்தின் இன்றைய பெயர் 'ஃபிரோஸ் ஜீஜீபாய்' கோபுரம். நுழைவுவாயிலில் 'எப்போதும் பங்கு வர்த்தகம் ஏறுமுகத்தில்' என்பதைக் குறிக்கும் பிரமாண்ட காளையின் சிலையை ஸ்தாபித்திருக்கும்.

பல்லாண்டுகளாக நாட்டின் நிதி வளர்ச்சியுடன் இணைந்து பயணித்த 'பி.எஸ்.இ.' 1957 ஆகஸ்ட் 31-இல் பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் 'பி.எஸ்.இ.' நிரந்தர அங்கீகாரத்தைப் பெற்றது.

1986 ஜனவரி 2-இல், "பி.எஸ்.இ.' "இந்தியாவின் முதல் பங்குச் சந்தைக் குறியீடான "எஸ்&எஃப். பி.எஸ்.இ. சென்செக்ஸ் 100' என்ற அடிப்படையுடன் தொடங்கியது. "சென்செக்ஸ்' குறியீடு செப்டம்பர் 2024-இல் 85 ஆயிரம் புள்ளிகளை எட்டி உச்சம் அடைந்தது. தற்போது 82 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

தற்போது, அனைத்து பி.எஸ்.இ.யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.462.48 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. 2025 ஜூலை 9 நிலவரப்படி 5,671 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

150-ஆவது ஆண்டு நிறைவின் குறிப்பிடத்தக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறியீட்டை ஏப்ரலில் அறிமுகப்படுத்தினார், இது சந்தை மூலதனத்தின் அடிப்படையில் பங்குச் சந்தையின் முதல் 150 நிறுவனங்களின் செயல்திறனைக் கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய அளவுகோல் குறியீடாகும்.பி.எஸ்.இ. பல உயர்மட்ட சந்தைகளைக் கையாளுவதில் பல ஊழல்களையும் சந்தித்துள்ளது.

சில சமயங்களில், இந்தியப் பத்திரங்கள். பரிவர்த்தனை வாரியம் (செபி) தண்டனையாக பல தனிநபர்கள், நிறுவனங்களை, உள் வர்த்தகத்தையும், பங்கு கையாளுதலுக்கான பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்வதிலிருந்தும் தடை செய்துள்ளது.

2000-களின் முற்பகுதியில் கணினி தொழில்நுட்ப மேம்பாடுகளை வெகுவான தயக்கத்துடன் மெதுவாக ஏற்றுக்கொண்டதற்காக பி.எஸ்.இ. அவ்வப்போது விமர்சனத்துக்கு உள்ளானது.

அப்போது பல ஆயிரக்கணக்கான பங்கு தரகர்கள் தேசிய பங்கு பரிவர்த்தனை அமைப்புக்கு (என்.எஸ்.இ.) மாறினர். என்.எஸ்.இ மின்னணு பங்கு வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்க, பி.எஸ்.இ.யும் மாறியது. 2024 - 25 ஆண்டுக்கான பி.எஸ்.இ. யின் நிகர லாபம் மட்டும் ரூ.1,322 கோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com