மகிழ்ச்சியுடன் கல்வி...

கொய்யா மரத்தின் நிழலே வகுப்பு அறையானது. பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்குக் கற்பிக்கும் சிறிய முயற்சியாகத் தனது ஒன்பது வயதில் பாபர் அலி தொடங்கிய 'ஆனந்தோ சிக்ஷா நிகேதன்' இன்று விருட்சமாக வளர்ந்துள்ளது.
மகிழ்ச்சியுடன் கல்வி...
Published on
Updated on
2 min read

கொய்யா மரத்தின் நிழலே வகுப்பு அறையானது. பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்குக் கற்பிக்கும் சிறிய முயற்சியாகத் தனது ஒன்பது வயதில் பாபர் அலி தொடங்கிய 'ஆனந்தோ சிக்ஷா நிகேதன்' (மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் நிலையம்) இன்று விருட்சமாக வளர்ந்துள்ளது. கடந்த 22 ஆண்டுகளில் அவர் எந்தக் கட்டணமும் வாங்காமல், தரமான கல்வியை விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் பேருக்கு அளித்து, கல்விக்காகத் தன்னை அர்ப்பணித்துகொண்டுள்ளார்.

மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலியின் பள்ளி, பத்தாம் வகுப்பு வரை கல்வியை, கணினி கற்றல், நூலகம் போன்ற நவீன வசதிகளுடன் வழங்கிவருகிறது. அலியின் சமர்ப்பணம் சர்வதேச விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளதோடு, உலக அளவில் பள்ளிப் பாடத்திட்டங்களில் அலி குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது.

தனது கல்விப் பயணம் பாபர் அலி குறித்து கூறுவது:

'நான் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவன். இந்த நகரம் கொல்கத்தாவிலிருந்து சுமார் 200 கி. மீ . தொலைவில் உள்ளது.

முர்ஷிதாபாத் ஒரு காலத்தில் வங்கம், பிகார், ஒடிஸ்ஸாவின் தலைநகராக இருந்தது. முக்கியத்துவம் பெற்றிருந்த முர்ஷிதாபாத், மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும்.

என் தந்தை பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். அவர் எங்கள் கிராமத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பள்ளியில் என்னைச் சேர்த்தார். என் கிராமத்தில், பள்ளிக்குச் செல்ல முடியாத என் வயது குழந்தைகளும் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்தனர்.

எனது ஒன்பதாம் வயதில், எனது வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள ஒரு கொய்யா மரத்தின் கீழ் 'ஆனந்தோ ஷிகா நிகேதன்' (மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் நிலையம்) பள்ளியைத் துவங்கினேன். காலையில் பள்ளியில் கற்றதை, மாலையில் சிறார்களுக்குக் கற்பித்தேன்.

ஒவ்வொரு ஆண்டும் புதிய மேல்வகுப்புகள் தொடங்கி, சில ஆண்டுகளில் முழுமையான பள்ளியாக மாற்றினேன். சிறார்களுக்குக் கற்பிப்பதே எனது பொழுதுபோக்கானது.

பள்ளியில் ஆசிரியர்கள் தூக்கி எறியும் சாக்பீஸ் குட்டித் துண்டுகளைச் சேகரித்து, என் வகுப்பில் உள்ள போர்டில் எழுதி எனது மாணவர்களுக்குப் பாடம் நடத்துவேன். இதனைத் தெரிந்து கொண்ட ஆசிரியர் என்னைப் பாராட்டி ஒரு சாக்பீஸ் பெட்டியை அன்பளிப்பாக அளித்தது என்னை ஊக்கப்படுத்தியது.

எனது மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் வாங்க என் பெற்றோர் பணம் அளித்தனர். ஊரிலிருந்த வீடுகளிலிருந்து அரிசி கைப் பிடி அளவு சேகரித்து, உள்ளூர் மளிகைக் கடையில் விற்றேன். பாடப் புத்தகங்களை வாங்கி, எனது மாணவர்களுக்கு விநியோகித்தேன்.

ஊடகங்களில் செய்தி வெளியாக, நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் என்னை அழைத்துப் பாராட்டினார்.

பள்ளிச் சீருடையை அணிந்துகொண்டு, புத்தகப் பையை சுமந்துகொண்டு 'ஆனந்தோ சிக்ஷô நிகேத'னின் 'தலைமை ஆசிரியர் பாபர் அலி' என்ற விசிட்டிங் கார்டுடன் உயர் அதிகாரி ஒருவரைச் சந்திக்கச் சென்றேன். என்னைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டார். மறுநாளே அவர் விசாரித்து, பல வகைகளில் உதவினார்.

ராமகிருஷ்ணா மிஷனும் எனது பள்ளி மாணவர்களுக்காக சீருடைகள், நோட்டுகளை வழங்கியது. கல்விப் பயணத்தில் 22 ஆண்டுகளை நான் நிறைவு செய்துள்ளேன். இதுவரை சுமார் 8 ஆயிரம் பேர் இலவசக் கல்வியைப் பெற்றுள்ளனர்.

எனது பள்ளி தற்போது உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பம், நூலகம், கணினி கற்றல் வசதிகளுடன் பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. கட்டுமானத்துக்கு உதவிகள் வந்தன. பள்ளிக்கு மாநில அரசின் அங்கீகாரமும் கிடைத்தது. நானும் பள்ளியை நடத்தி வந்ததோடு, ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றேன். பிறகு, ஆசிரியர் பயிற்சி பட்டத்துடன் வரலாற்றில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தேன்.

எனது முன்னாள் மாணவர்களில் ஆறு பேர் இங்கு ஆசிரியர்களாக என்னுடன் இணைந்துள்ளனர். மொத்தம் 20 ஆசிரியர்கள் இப்போது பணிபுரிகின்றனர்.

பன்னாட்டு மன்னிப்பு அவையும், பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இணைந்து 'உங்கள் உரிமைகளை அறிந்து அவற்றைப் பெறுங்கள்' என்ற புத்தகத்தை வெளியிட்டனர்.

உலக அளவில் கல்வித் துறைக்கு பங்களித்தவர்கள் மூவர் குறித்து பதிவு செய்திருந்தார்கள். அதில் நானும் ஒருவன். விவேகானந்தரின் 'மனிதனுக்குச் செய்யும் சேவை கடவுளுக்குச் செய்யும் சேவை' என்ற பொன்மொழிப்படி என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளேன்' என்கிறார் பாபர் அலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com