நடன மங்கை...

பரதம், மேற்கத்திய நடனம், ஓவியம், மின்விசைப் பலகை இசைத்தல், திருவாதிரை களி நடனம் உள்ளிட்ட கலைப் பயிற்சிகளில் பதினான்கு வயதான ஜ.செ.ஸ்டெனி 12 சாதனைகளை நிகழ்த்தி, "சாதனைகள் புரிவதற்கு வயது ஒரு தடையில்லை' என்பதை நிரூபித்திருக்கிறார்.
நடன மங்கை...
Published on
Updated on
2 min read

பரதம், மேற்கத்திய நடனம், ஓவியம், மின்விசைப் பலகை இசைத்தல், திருவாதிரை களி நடனம் உள்ளிட்ட கலைப் பயிற்சிகளில் பதினான்கு வயதான ஜ.செ.ஸ்டெனி 12 சாதனைகளை நிகழ்த்தி, "சாதனைகள் புரிவதற்கு வயது ஒரு தடையில்லை' என்பதை நிரூபித்திருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட கொல்லங்கோடையை அடுத்த மணலியைச் சேர்ந்த ஜஸ்டின் - செலின் பிரியா தம்பதியின் மகளான இவர், சூழால் பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது மூன்றரை வயதில் தொடங்கி, பன்னிரெண்டு வயது வரையில் 12 சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்.

சாதனைகள் குறித்து செலின் பிரியா கூறியதாவது:

எனது கணவர் ஜஸ்டின் நடத்திவரும் "பிரைட் குரூப் ஆஃப் அகாதெமி' கலைப் பயிற்சி நிலைய முதல்வராக, நான் இருந்து வருகிறேன். இங்கு குழந்தைகளுக்கு பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், மின்விசைப் பலகை (கீ போர்டு), ஓவியம் போன்றவற்றில் பயிற்சி அளித்து வருகிறோம். இதனால் ஸ்டெனிக்கு ஒன்றரை வயதாக இருக்கும்போதே பரத நாட்டியத்தில் பயிற்சியளித்தோம்.

இதனால் அவள் தனது மூன்றரை வயதில் 2015 மே 25-இல் இரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து பரத நாட்டியத்தில் சாதனை படைத்தாள். இதை "யூனிக் சாதனை புத்தகம்' அங்கீகரித்தது. 2019 மே மாதத்தில் 2 மணி 20 நிமிடம் 20 விநாடி நேரம் தொடர்ந்து ஆடி தனது முந்தைய சாதனையை முறியடித்தாள். அதன் பின்னர், 2022 ஜூன் மாதத்தில் 2 மணி 25 நிமிடம் 25 விநாடி தொடர்ந்து பரதம் ஆடி தனது முந்தைய இரு சாதனைகளையும் முறியடித்தாள்.

இதே போன்று மேற்கத்திய நடனத்தில் நான்கு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். முதல் முறை 2016 மே மாதத்தில் 30 நிமிடம் 30 விநாடி நடனமாடி அசிஸ்ட் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தாள். 2016 ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய சாதனையை முறியடித்தாள். 2017 மே 2019 மாதங்களில் 2 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து நடனமாடி தனது முந்தைய சாதனைகளையும், பிறரது சாதனைகளையும் முறியடித்து "அசிஸ்ட்', "குளோபல்' சாதனை புத்தகங்களில் இடம்பிடித்தாள்.

2018- இல் சாட் பேப்பரில் (ஓவியம் வரைய பயன்படுத்தும் பேப்பர்) 21 தலை கொண்ட பாம்பு படம் வரைந்து குளோபல் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தாள். இந்தப் பாம்பின் தலை 6 அடி நீளம், 6 அடி அகலத்திலும், உடல்பகுதி 2 அடி அகலம், 100 அடி நீளத்திலும் வரையப்பட்டிருந்தது.

2018 மே மாதத்தில் மின்விசைப் பலகையை (கீ போர்டு) தொடர்ந்து 3 மணி 1 நிமிடம் இசைத்து யூனிக் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். 2017-இல் தொடர்ந்து 2 மணி 35 நிமிடம் தமிழ் பாடல்களைப் பாடி எக்ஸ்டிரீம் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

கேரள திருவாதிரை களி நடனம் 2 மணி 45 நிமிடம் தொடர்ந்து ஆடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தாள். தொடர்ந்து சிலம்பத்தில் சாதனை படைத்து ஆசிய சில்ரன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தாள் இவை அனைத்தும் தனது மூன்றரை வயதிலிருந்து 12 வயதுக்குள் செய்து முடித்ததாகும்.

ஸ்டெனியின் சாதனைகளுக்கு லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக சாதனை பல்கலைக் கழகம் 2018 நவம்பர் 15-இல் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.

இதுதவிர, 2024-இல் அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசின் "கலை இளமணி' எனும் விருதை அமைச்சர் த. மனோ தங்கராஜ் வழங்கினார். திருச்சியைச் சேர்ந்த "வளருங்கள் வாழ்த்துகிறோம்' அமைப்பு சார்பில் 2015-இல் "சலங்கை' விருதும், 2025-இல் "உலக கலைநாயகி' விருதும் வழங்கப்பட்டுள்ளன.

சாதனைகள் செய்து வரும் ஸ்டெனி எதைச் செய்தாலும் அதில் மிகுந்த சந்தோஷமாகவும், ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் செய்வாள். படிப்பிலும் கெட்டிக்காரியாகத் திகழ்கிறாள். தற்போது திரைப்பட நடிப்பு பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். பெற்றோர் என்ற முறையில் நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்'' என்கிறார் செலின் பிரியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com