ஜவ்வாதுமலையில் ஆவி!

நமக்கு ஊர் திருவண்ணாமலை பக்கம் ஆரணி. சின்ன வயதில் இருந்தே சினிமா ஆர்வம் ப்ளஸ் வெறி.
ஜவ்வாதுமலையில் ஆவி!
Updated on
2 min read

நமக்கு ஊர் திருவண்ணாமலை பக்கம் ஆரணி. சின்ன வயதில் இருந்தே சினிமா ஆர்வம் ப்ளஸ் வெறி. ஆனால், வீட்டில் ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபி படிக்க வைத்தார்கள்.

அது தொடர்பான வேலை, தேடல்கள் என பல வருஷங்கள் ஓடி விட்டன. இருந்தால் உள்ளுக்குள்ளேயே சினிமா நெருப்பு எரிந்துக் கொண்டிருந்தது. ஒரு குறும்படம் எடுத்தேன். அதே ஆர்வத்தில் "ஒர் இரவு', " விழித்திரு'... இப்படி ஏக படங்கள் எடுத்தேன்.

எல்லாவற்றுக்கும் ஏக வரவேற்பு. படத்தின் ஸ்கிரிப்ட் நன்றாக இருப்பதாக பாராட்டினார்கள். ஸ்கிரிப்ட் எழுத வருகிற போது, டைரக்ஷன் வராதா? என்று எனக்குள்ளேயே கேள்விகள். அந்த கேள்விக்கான விடைதான் இந்த படம். நண்பர்கள் பாராட்டினார்கள். அம்மா, அப்பா நம்பிக்கை வைத்தார்கள்.

தயாரிப்பில் உதவியவர்களுக்கு நன்றி. இப்படித்தான் இந்தப் படம் உருவாகி வளர்ந்தது. இதுவரை மருத்துவராக அறியப்பட்ட ஹேம்நாத் நாராயணன் இப்போது இயக்குநர். படத்தின் பெயர் மர்மர்.

அதென்ன மர்மர்...

மர்மர் என்றால் முணுமுணுப்பு என்று பொருள். ஒரு சின்ன முணுமுணுப்பு எதேதோ செய்து விடும். அப்படித்தான் இதில் இந்த அர்த்தம் வெளிப்படும். மலையாள நகைச்சுவைத் திரைப்படங்களின் ருசி என்பது பத்தியச் சாப்பாடு மாதிரி. ஒருவகையான பிரத்யேக சுவையில் இருக்கும். முகத்தில் அடிக்கும் மசாலாவோ, வயிற்றைக் கெடுக்கும் காரமோ அதில் இருக்காது.

அமுங்கிய குரலில் மெலிதாக வெளிப்படும் இந்த நகைச்சுவையை நுகர்வதற்குத் தனியான ரசனை வேண்டும். இந்த வகையான நகைச்சுவைப் படங்கள், டப்பிங் வடிவில் அல்லது ரீமேக் வழியில் தமிழிற்கு நிறைய வந்திருக்கின்றன.

காமெடியும் சென்டிமென்ட்டும் கச்சிதமான கலவையில் அமைந்திருக்கும் இவ்வகையான திரைப்படங்களை உருவாக்க இப்போது இயக்குநர்களே இல்லை. அந்த குறையை தீர்க்க ஒரு கதை எழுதினேன். அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொடுப்பதில் நிறைய சவால். அதுதான் இந்த படம்.

என்ன கதை...

வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாராத ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்தான். அப்படி சில மனிதர்களின் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள்... அதை எதிர் கொள்கையில் அவர்கள் காணும் பெரும் நிகழ்வுகள் என யூகிக்கவே இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை இது. தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் இது. இதை பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுகிறேன்.

உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறினால், அதுபற்றிய விசாரணைக்கு முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. விடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சி.சி.டி.வி. விடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும். அதை படமாக காண்பிக்கும் போது, அந்த ஆவணத்தை தான் நாங்கள் படமாக காண்பிக்கிறோம்.

அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களை பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாதுமலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித் திரிவதை நேரடியாக பதிவு செய்ய செல்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆனது, அவர்கள் செல்லும் வழியில் காணமல் போகின்றனர்.

அவர்களை கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களை கண்டெடுக்கின்றனர். அந்த கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறோம்.

பேய் படங்களின் சீசன் முடிந்த மாதிரி இருந்தது...

பொதுவாக அனைத்துப் பேய்க்கதைகளிலும் தொன்மத்தின் சாயல் படிந்திருக்கும். நாட்டுப்புறக் கதைகளின் சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். இவற்றைத் தர்க்க ஒழுங்கில் அணுகக்கூடாது. லாஜிக் பார்க்கக்கூடாது. அவை தரும் திகில் உணர்ச்சிதான் நமக்கு முக்கியம். இந்தத் திகில் உணர்ச்சியே ஒரு கட்டத்தில் காமெடியாகி விடும்.

"இதற்கா இத்தனை பயந்தோம்?' என்று விடிந்த பிறகும் சிரித்துக் கொண்டேயிருப்போம். லாஜிக்கை சற்று ஒதுக்கி வைத்துப் பார்த்தால் இதிலுள்ள அபாரமான நகைச்சுவையை ரசிக்க முடியும். "பேய்ப்பட காமெடி' என்றொரு சுனாமி தமிழ் சினிமாவில் வீச ஆரம்பித்தது. "முனி'யில் ஆரம்பித்தது இந்த சனி. இடைவிடாமல் பத்து வருடங்களுக்கும் மேலாக நம்மை அடித்துத் துவைத்து இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது.

நீங்கள் பேசுகிற விதம் சரி.... இப்போதுள்ள ட்ரெண்ட் பிடித்து கதை சொல்லுவதுதான் இங்கே முக்கியம்...

ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்த துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது.

இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். குறிப்பாக காதல். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும். ஆனால் நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை.

என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும். அப்படியோர் பாதையில்தான் இந்த கதை பயணமாகும். இன்னொரு விஷயம். படத்தில் இசையே இருக்காது. ஒரு லைவ் விடியோவை பார்ப்பது போல் இருக்கும். இது தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com