மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை!

'தொழில்நுட்பங்கள் மக்களுக்கானது. இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும்.
மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை!
Published on
Updated on
3 min read

'தொழில்நுட்பங்கள் மக்களுக்கானது. இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். 'ஸ்டார்ட் அஃப்' என்ற துளிர் நிறுவனங்களின் பொற்காலமான தற்போது மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

'ராணுவ வீரன் வாழ்க! விவசாயி வாழ்க! (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற முழக்கத்தை மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தந்த தேசிய முழக்கம், போக்ரான் - 2 வெற்றிக்குப் பிறகு 'அறிவியல் வாழ்க! (ஜெய் விஞ்ஞான்) என விரிவடைந்தது. 2019-இல் 'ஆராய்ச்சி வாழ்க! (ஜெய் அனுசந்தான்)' என்று முழுமையடைந்திருக்கிறது.

ஆராய்ச்சிகளின் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி, தேசம் வளரட்டும்! மக்களின் வாழ்வு சிறக்கட்டும்'' என்கிறார் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின்(டி.ஆர்.டி.ஓ.) இந்திய போர்விமான எஞ்ஜின் ஆராய்ச்சியின் திட்ட மேலாளர் வி.டில்லிபாபு.

வட சென்னையைச் சேர்ந்த இவர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியலில் முனைவர் பட்டமும், தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனது ஆராய்ச்சிப்பணிகளுக்கிடையே அறிவியல், தொழில்நுட்பம், கவிதைகள் என 13 புத்தகங்களை தமிழில் எழுதியிருக்கிறார்.

வியசார்பாடியில் 'கலாம்-சபா' என்ற இளையோர் நூலகம்-வழிகாட்டி மையத்தை அமைத்திருக்கும் அவர், நாட்டில் புதிய அறிவியல் எழுச்சியை ஏற்படுத்த மாணவர்கள், இளைஞர்களைத் தவறாமல் சந்தித்து வருகிறார்.

அவரிடம் ஒர் சந்திப்பு:

தேசியத் தொழில்நுட்பத் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

1998 மே 11-இல் போக்ரானில் அணுசக்தி சோதனையில் இந்தியா வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி, பல துறைகளில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி தேசத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்த மே 11- ஆம் தேதி தேசியத் தொழில்நுட்பத் தினமாக, 1999-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

2001-இல் நிகழ்ந்த தேஜஸ் போர் விமானத்தின் முதல் வெள்ளோட்டம், 2008-இல் நடைபெற்ற சந்திரயான்-1 வெற்றி, 2012-இல் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை வெற்றி, 2019-இல் பெற்ற செயற்கைக்கோள் எதிர் ஏவுகணை 'சக்தி திட்டம்' வெற்றி, 2024-இல் நிகழ்ந்த சந்திரயான்-3 வெற்றி என இந்தியா தொழில்நுட்பத் தேசமாக தற்போது உலக அரங்கில் மிளிர்கிறது. இதைப் போல இன்னும் பல துறைகளில் தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு இளையோரை ஆற்றுப்படுத்த தேசியத் தொழில்நுட்ப தினம் உத்வேகம் தரும்.

ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டைன் போன்ற வெளிநாட்டு விஞ்ஞானிகளின் பெயர்கள் பேசப்பட்ட இந்திய வகுப்பறைகளில், பின்னர் சி.வி.ராமன், விக்ரம் சாராபாய் போன்ற இந்தியப் பெயர்களும் சேர்த்து உச்சரிக்கப்பட்டன. படிப்படியாக அப்துல் கலாம், எம்.எஸ்.சுவாமிநாதன், சிவதாணுப்பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, கே.சிவன் போன்ற இந்தியர்கள் பேசப்படுவது சுதந்திர இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வேர்களின் நீளத்தை அளக்காமலே நமக்கு அறிவிக்கிறது. இவர்கள் தமிழர்கள் என்பதில் நாம் மார்தட்டிக் கொள்ளலாம்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் - இந்த வார்த்தைகளை எப்படி வேறுபடுத்தி புரிந்து கொள்வது?

'ஒவ்வொரு விசைக்கும் அதற்குச் சமமான எதிர்விசை உண்டு' என்பது அறிவியல். இதன் அடிப்படையில் ஏவுகணையை உருவாக்கலாம் என்பது தொழில்நுட்பம். ஏவுகணையை உற்பத்தி செய்து ஏவுவது பொறியியல்.

இந்திய ராணுவ ஆராய்ச்சியின் சிறப்பு என்ன?

தேசம் காக்கும் நேசப்பணிகளில் ஈடுபட்டிருக்கிற முப்படைகள், துணை ராணுவப் படையின் வீரர்-வீராங்கனைகளுக்கு தேவையான ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள், போர்க் கருவிகள் என பலவற்றை வடிவமைத்து உருவாக்குவது டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தலைவராக ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் 7 ஆண்டுகள் பணியாற்றினார்.

அவரது வழிகாட்டுதலில் பல பாதுகாப்புத் துறை தொழில்நுட்பங்கள், மக்கள் தொழில்நுட்பங்களாக மிளிர்ந்திருக்கின்றன. செயற்கை நடைகருவிகள், இதய வலைக்குழாய், பசுமைக் கழிவறை, ஆக்சிஜன் சாவடிகள், உடனடி உணவுகள் என நூற்றுக்கணக்கான போர்முனைத் தொழில்நுட்பங்கள் தெருமுனை வரை வந்து சராசரி இந்தியக்குடிமக்களின் அன்றாட வாழ்வை எளிமையாக்கி வருகின்றன.

இதய வலைக்குழாய்: எப்படி உருவானது?

'எனது மூளை உங்கள் வலியை தணிக்கட்டும்' என்ற முழக்கத்தோடு, மருத்துவ ஆராய்ச்சி முயற்சிகளை ஒருங்கிணைக்க 1993-இல் 'உயிரிமருத்துவ தொழில்நுட்பச் சங்கம்' எனும் அமைப்பை நிறுவினார் அப்துல் கலாம்.

இதய நோயாளிகளுக்கு அடைப்பை சரி செய்ய, ரத்த நாளத்தில் வலைக்குழாய் பொருத்தப்படுவது வழக்கம். விரியக் கூடிய தன்மையுள்ள உலோக வலையான இந்தக் குழாய், அடைப்புள்ள ரத்த நாளத்தை விரித்துப் பிடிப்பதால் ரத்த ஓட்டம் சீரடைகிறது. அதிக செலவாகும் என்பதால் ஏழை நோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சை எட்டாக் கனியாக கிட்டாமல் இருந்தது.

இந்த நிலையை மாற்ற 1994-இல் ராணுவ விஞ்ஞானிகளும், ஹைதராபாத் கேர் மருத்துவமனை மருத்துவர்களும் ஒன்றிணைந்து புதிய வலைக்குழாயை உருவாக்கும் பணியில் இறங்கினர். சுருள் வடிவிலும், குழாய் வடிவிலும் மருத்துவத்துறையில் அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த இறக்குமதி செய்யப்பட்ட வலைக்குழாய்களை வாங்கி அவைகளை சோதனை செய்தனர்.

அவைகளுக்கு மாற்றாக ராணுவ உபகரணங்களைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வந்த டைட்டானியம் உலோகத்தை தேர்ந்தெடுத்தனர். டைட்டானியத்தின் எடை குறைவு ஆனால் வலிமை அதிகம். முக்கியமாக டைட்டானியம் மனித உடலோடு ஒத்துப்போகும் ஒரு உலோகம். இப்படி

1997-இல் உருவானது இந்தியாவின் முதல் வலைக்குழாய். இந்த ஆராய்ச்சி முயற்சியில் மருத்துவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர், ஹைதராபாத் கேர் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் சோம ராஜூ. பொருத்தமாக இந்த வலைக்குழாய்க்கு, 'கலாம்-ராஜூ வலைக்குழாய்' என்று பெயரிடப்பட்டது.

அப்போது இறக்குமதி செய்யப்பட்ட குழாய்கள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை வைத்து விற்கப்பட்டன. கலாம்-ராஜூ குழாய் ரூ.15 ஆயிரம் மதிப்பில் மலிவு விலை மருத்துவ சேவையை எல்லோருக்கும் சாத்தியப்படுத்தியது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஏறக்குறைய 2 ஆயிரம் பேருக்கு கலாம்-ராஜூ குழாய் பொருத்தப்பட்டதை ஒரு மருத்துவப்புரட்சி என்றே பதிவு செய்யலாம்.

ராணுவ ஆராய்ச்சிக்கும் உணவுக்கும் என்ன தொடர்பு?

போர்முனையில் பல்வேறு சவால்களைச் சந்திக்கும் வீரர்களின் உணவுத் தேவைகளை சந்திப்பது மிகவும் அவசியம். முகாம்களில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு முறையாகச் சமைத்த உணவுகள் கிடைக்கும். ஆனால், எல்லை கண்காணிப்புப் பணியில் நில எல்லைக்கோட்டுக்கு அருகிலும், நீர்மூழ்கிக் கப்பல்களிலும், டாங்க் வாகனத்தில் பாலைவன ரோந்துப்பணியிலும் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்காக டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள். உடனடியாக சாப்பிடக் கூடிய, பதப்படுத்தப்பட்ட பல உணவு வகைகளை தயாரித்துள்ளனர்.

வீட்டில் செய்த இட்லிகளை சில மணி நேரத்திலோ அல்லது அதே நாளிலோ சாப்பிட வேண்டும். ராணுவ விஞ்ஞானிகள் தயாரித்த தூள் வடிவத்தில் உள்ள இட்லி மாவில் வெந்நீரை ஊற்றினால் 3 முதல் 5 நிமிடங்களில் இட்லி மாவு தயார். பாலிப்ரோபிலீன்-உலோகமேற்றப்பட்ட பாலியெஸ்டர் பைகளில் கிடைக்கும் இந்த இட்லி மாவுத்தூள் 6 மாதங்களுக்கு கெடாது. குளிர்பதனப் பெட்டியிலும் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

வெந்நீரை ஊற்றி 5 நிமிடத்தில் சாம்பார் தயாரிக்கும் தொழில்நுட்பமும் நிஜமாகியிருக்கிறது. 5 நிமிடம் காத்திருந்து இட்லி செய்யும் வரை பொறுக்க முடியாதச் சூழலில், பதப்படுத்தப்பட்ட அப்படியே சாப்பிடக் கூடிய இட்லியும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இட்லி, ஸ்கேனிங் எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப் உள்ளிட்ட பரிசோதனைகளைக் கடந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இட்லிகள் ஏறக்குறைய 40 நாள்கள் கெடாமலிருக்கும்.

உடனடி உணவு வகைகள் குறித்து..?

ஓராண்டு வரை கெடாத சப்பாத்திகளும், பரோட்டாக்களும் உண்டு. காய்கறி புலாவ், கடலைப்பருப்பு குழம்பு, கீரை-பருப்பு குழம்பு, தேங்காய் சட்டினி, கொத்தமல்லி சட்னி, சேமியா, புளியோதரை உள்ளிட்ட உடனடி சைவ உணவுகளும், ஓராண்டு வரை கெடாத ஆட்டுக்கறி சான்விச், வறுத்த கோழி கால்கள் என அசைவ உணவுகளும் உண்டு. இயற்கை பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படை ஹெலிகாப்டர்களில் வீசப்படும் உணவுப்பொட்டலங்களைத் தயாரிப்பது டி.ஆர்.டி.ஓ. நிறுவனம்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com