'பாரம்பரிய விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல; அவை இந்தியக் கலாசாரத்தின் உயிருள்ள இழைகள். குடும்பங்களை ஒன்றிணைத்து, பாரம்பரியத்தைப் புதுப்பிக்கின்றன' என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த சசிசேகர். கணினித் துறையில் வேலை பார்த்துவந்த இவரும், இவரது மனைவி தனுஸ்ரீயும் தங்கள் பணிகளைவிட்டு விலகி, பண்டைய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சசிசேகர் கூறியது:
'சுற்றுச்சூழலுக்கு உகந்த முயற்சிகளை முன்னெடுக்க, 'ரோல் தி டைஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். பாரம்பரிய இந்தியப் பலகை விளையாட்டுகளை மீட்டெடுக்கும் பணியையும், கைவினைத் திறனையும் இணைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைக் கொண்டு பொழுதுபோக்கும் விளையாட்டுக்குப் பயன்படும் பொருள்களை உருவாக்கிச் சந்தைப்படுத்துகிறோம். பல தலைமுறைகள் கண்ட விளையாட்டுகளை இன்றைய தலைமுறையினர் மறக்காமல் இருக்க அறிமுகம் செய்கிறோம்.
2014-இல் பாரம்பரிய இந்திய விளையாட்டுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் யோசனை எனது மனைவி தனுஸ்ரீக்கு உதித்து, அதற்கான பணிகளை அவர் தொடங்கினார். 2023-இல் நான் அவரது 'ரோல் தி டைஸ்'ஸில் இணைந்தேன். எனது குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக ஈடுபாடு காட்டுவதைத் திசை திருப்ப, பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்தோம். இப்போது பெரியவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் கலையாகவும், எங்களுக்கு வணிகமாகவும் வளர்ந்துள்ளது.
'தாயம்', 'செளகா பாரா', 'பகடே', 'அழகுனிமணி', 'செளசர்', 'சோபாட்', 'ஆடு புலி', 'நவகன்கரி', 'ஷோலோ குட்டி', 'தாப்லா', 'பல்லாங்குழி' உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டு வகைகளை நாங்கள் வழங்குகிறோம். பொறுமை, உத்தி, தோழமையைக் கற்பிக்கும் துடிப்பான கலாசாரக் கலையாக அமைந்திருக்கும் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு வாடிக்கையாளர்களிடம் சரியான புரிதல் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு விளையாட்டுக்கும் பிராந்திய நுணுக்கங்கள், வேறுபாடுகள், வெவ்வேறு விதிகள் உள்ளன. அவற்றை முறையாக அறிந்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பது முக்கியம். தென் இந்தியா முழுவதிலுமிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட திறமையான கைவினைஞர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.
சூரத்தில் வண்ணத் துணிகளைத் தயாரித்து வாங்குகிறோம். பெங்களூரைச் சேர்ந்த எம்பிராய்டரி கலைஞர்கள் அந்தத் துணிக்கு நேர்த்தியைச் சேர்க்கிறார்கள். பகடை, சிப்பாய்கள், விளையாட்டு உருவங்கள், கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்படுகின்றன. குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்படும் வண்ணம் மட்டுமே விளையாட்டுப் பொருள்களில் பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக்கை முற்றிலுமாகத் தவிர்க்கிறோம்' என்கிறார் சசிசேகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.