அமெரிக்காவில் 'மதுரை'

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தின் தலைநகரான பிலடெல்பியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கலைப்பொருள்கள் உள்ளன.
அமெரிக்காவில் 'மதுரை'
Published on
Updated on
2 min read

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தின் தலைநகரான பிலடெல்பியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கலைப்பொருள்கள் உள்ளன. மிக அழகுடனும், கம்பீரத்துடனும் காட்சி அளிக்கும் இதன் ஒரு பிரிவு தெற்காசிய கலைப்பொருள்களைக் கொண்டதாகும். இந்தப் பிரிவில் மதுரை மாநகரில் உள்ள கூடல் அழகர் பெருமாள் கோயிலிலிருந்து சேகரிக்கப்பட்ட மண்டபத்தின் பகுதியை மிக அழகாகக் காட்சிக்கு வைத்துள்ளனர். அந்த மண்டபம் பற்றிய குறிப்பும் அருகிலேயே உள்ளது.

இந்த மண்டபத்தில் நுழைந்து நடுவில் அமர்ந்து, கலைநயத்துடனும் அழகுடனும் உள்ள நாயக்கர் காலச் சிற்பங்களை ரசித்து மகிழ இருக்கைகளை அமைத்துள்ளனர்.

பிலடெல்பியாவைச் சேர்ந்த அடிலைன் பெப்பர் கிப்சன், அவரது கணவர் தியோடர் மார்ஷல் இருவரும் தேனிலவுக்காக 1913-இல் இந்தியா வருகின்றனர். மதுரைக்கு வந்தபோது, மண்டபத்திலிருந்து இடிந்து விழுந்த சிற்பங்களுடன் உடைந்த கல்தூண் பகுதிகளை விலை கொடுத்து வாங்குகின்றனர். இதை அவர்கள் 1919-இல் பிலடெல்பியா அருங்காட்சியகத்துக்கு அளித்தனர்.

'இந்தச் சிற்பங்கள் மதுரை கூடல் அழகர், மதனகோபால சுவாமி கோயில் வளாகத்திலிருந்து கொண்டு வரப்பட்டவையாக உள்ளன' என்ற குறிப்பும் அருங்காட்சியகத்தில் காணப்படுகிறது. இந்த மண்டபம் தொடர்பான செய்திகள் அடங்கிய 'கற்களின் கதை' என்ற புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது.

மண்டபம் 26 தூண்களை உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தூண்களில் காணப்படும் சிற்பங்கள் முகம், கை, கால் உடைந்திருந்தாலும் மதுரை நாயக்கர் கால சிற்ப - கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

முதல் தூணில் ராமரின் சிற்ப வடிவம். தலையில் கிரீடம், மகுடம். காலின் கீழே சிம்மம், சிம்மாசனம் போன்று அமைந்துள்ளது. வலது கை உடைந்துள்ளது. அவர் அணிந்திருக்கும் அணிகலன்கள் அழகானவை. காலில் சிலம்பும் மார்பில் அழகு மிக்க ஆபரணங்களும் காட்சி அளிக்கின்றன.

இடக்கையில் சிறு கத்தியும் உள்ளது. தலைக்கு மேலே காணப்படும் கொடி வேலைப்பாட்டில் கிளிகள் அமைந்துள்ளது மிகவும் சிறப்பானது. ராமருக்குப் பின்புறம் தேவி சீதை அமர்ந்த கோலத்தில் ஒருபுறமும், மறுபக்கம் அனுமன் கைகூப்பி வணங்கும் கோலத்தையும் காணலாம். ராமர் பட்டாபிஷேகக் காட்சியின் ஒரு பகுதியாக இந்தச் சிற்பம் விளங்க வாய்ப்பு உள்ளது.

இரண்டாம் தூணில் முகத்தில் முறுக்கிய மீசையுடன், கூப்பிய கரங்களுடன் ஒரு சிற்பம். காதுகளில் பெரிய குண்டலங்கள் அணி செய்கின்றன.

மூன்றாம் தூணில் உள்ள சிற்பத்தூணின் முகம் ஒரு பகுதி உடைந்துள்ளது.

நான்காம் தூணில் அனுமன் அல்லது சுக்ரீவனின் சிற்பமாக இருக்கலாம். கைகள் உடைந்துள்ளன.

ஐந்தாம் தூணில் லட்சுமணனின் சிற்பமாக இருக்கலாம். தலைகிரீட மகுடம் அணிந்து வலது கை தொடைமீது ஊன்றிய நிலையில், இடது கரம் உடைந்துள்ளது.

ஆறாம் தூண் சிற்பத்தில் வலக்கரத்தில் நீண்ட கத்தி இருப்பது போல உள்ளது. இடக்கை உடைந்துள்ளது.

ஏழாம் தூணில் கைகூப்பி அஞ்சலி செய்த நிலையில் சிற்பம். வலது தோளின் மீது கைப்பிடியுடன் சாமரம் போன்று காணப்படுகிறது.

எட்டாம் தூணில் காணப்படும் சிற்பம் பெரிய முறுக்கிய மீசையுடன் காதுகளில் குண்டலங்கள் அணிந்து காணப்படுகிறது.

முனிவர் ஒருவரின் சிற்பம் ஒரு தூணில் காணப்படுகிறது. முகத்தில் தொங்கிய மீசை தாடியுடன் மார்பில் குறுக்காக ஆடை அணிந்து காணப்படுகிறார். தலையில் ஜடாமுடி அலங்காரமும் உள்ளது. கைகள் உடைந்துள்ளன. அடுத்துள்ள கருடனின் சிற்பத்தை ஒரு தூணில் காண்கிறோம். கரண்ட மகுடம் - அதில் நாகம் ஒன்று படம் எடுத்து காட்சி அளிக்கிறது. காதுகளில் பாம்பு குண்டலங்கள். கூர்மையான மூக்கு - கோரைப் பற்களுடன் காட்சி தரும் வடிவமாகும்.

மற்றொரு தூணில் மகாபாரத வரலாற்றில் குறிப்பிடப்படும் புருஷா மிருகத்தின் சிற்பமும் ஒரு தூணில் மிக வேலைப்பாடு மிக்கதாய்க் காணப்படுகிறது. இந்த மண்டபத்தில் நடுவில் உள்ள தூண்களில் மட்டும் அழகிய சிற்பங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் கை, முகம் உடைந்து காணப்படுவதால் என்ன வடிவம் என்பதை அறிய முடியாமல் உள்ளது.

தூண்களுக்கு மேலே யாளி வடிவங்களும், அதற்கும் மேலே புராணக் கதைகளைக் கூறும் தொடர் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. தூண்களில் அனுமன், சாமரம் வீசும் பெண், வைணவ அடியார், மன்னர் உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. தூண்களில் காணப்படும் நாகபந்தம் என்ற சிற்ப அமைப்பு நாகங்களோடு கூடியதாக விளங்குவது சிறப்பானது. தூண்களில் காணப்படும் புஷ்ப போதிகைகள் மிக அழகாக உள்ளன.

(அண்மையில் அமெரிக்கா சென்றபோது, நேரில் கண்ட அனுபவம் இது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com