

ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமைகளில் நன்றி செலுத்தும் நாள் (தேங்க்ஸ் க்விங் டே) அமெரிக்கா, செயின்ட் லூசியா, லைபீரியா, பிரேசில், ஜெர்மனி போன்ற நாடுகளிலும், ஆஸ்திரேலியாவின் நோர்போக் தீவிலும் தேசிய பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. கனடாவில் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது திங்கள்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இந்திய மாநகரங்களில் உள்ள அமெரிக்க ஐ.டி. நிறுவனங்களும் இந்த நாளில் விடுமுறையை அளித்து, தங்களது நிறுவன ஊழியர்களைக் கொண்டாட்டத்தில் ஈடுபட வைக்கின்றன. உறவினர்கள், நண்பர்கள் ஒன்றுகூடி விருந்துகளை உண்டு, மகிழ்வார்கள். அலுவலகங்களிலும்கூட இந்த விழாவையொட்டி, பணியாளர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து அட்டைகளைப் பரிமாறிக் கொண்டு நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் சிலவற்றில், இந்த நாளில் மாணவ, மாணவியர் வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட தின்பண்டங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வர்.
இது வெறும் உணவு விழா அல்ல; அது நன்றியுணர்வையும், ஒற்றுமையையும், மனித அன்பையும் கொண்டாடும் நாளாகும்.
அமெரிக்காவில் 1621 ஆம் ஆண்டின் அந்த சிறிய விருந்திலிருந்து தொடங்கி, இன்று உலகமெங்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தினமாக வளர்ந்துள்ளது. இந்தக் கொண்டாட்டம் குறித்து, கத்தாரில் வசிக்கும் தமிழ்ப் பெண்ணான பத்மபிரியா கார்த்திக்கிடம் கேட்டபோது:
'உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கவாழ் மக்களால் உற்சாகமாய் இந்த விழா கொண்டாடப்படுகிறது. நன்றி என்று சொல்பவரின் மனதில் ஆனந்தத்தையும், கேட்பவரின் மனதில் புன்னகையையும் பெருகச் செய்யும் மந்திர வார்த்தையே அது.
'திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்' என்ற திருக்குறளின்படி, 'ஒருவர் செய்த உதவி திணையளவுயாயினும் அதனால் பயன்பெறுபவரின் நன்றியுள்ளம் பல்வேறு வகையில் பயன்படக் கூடிய அளவாகக் கருத வேண்டும்' என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
1620ஆம் ஆண்டில் ஆங்கிலேயக் குடியேறிகள் சுதந்திரத்தைத் தேடி 'மேபிளவர்' என்ற கப்பலில் பயணித்தனர். காற்று, புயல் காரணமாக அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிளைமவுத் என்ற இடத்துக்கு வந்து தஞ்சம் அடைந்தனர். அந்தப் பகுதி கடும் குளிரால் பாதிக்கப்பட்டிருந்தது. பலர் உணவு இல்லாமலும், நோயாலும் உயிரிழந்தனர்.
அங்கேயே வாழ்ந்த பூர்வக்குடியினர் முதலில் ஏற்காவிட்டாலும், பின்னர் உதவிகளைச் செய்தனர். மக்காச்சோளம், பயறு, பூசணிக்காய் போன்ற பயிர்களை வளர்ப்பதையும், மீன் பிடிப்பது போன்ற வாழ்வாதார முறைகளையும் கற்றுக்கொடுத்தனர்.
1621இல் இலையுதிர் காலத்தில் குடியேறியவர்கள் தங்களின் முதல் அறுவடையை வெற்றிகரமாக முடித்தனர். அதற்காக அவர்கள் 'நன்றி செலுத்தும் விருந்து' எனும் விழாவை நடத்தினர். மூன்று நாள்கள் நீடித்த இந்த விருந்தில், இறைச்சிகள், பழங்கள், காய்கறிகளை உண்டு மகிழ்ந்தனர். இதுவே வரலாற்றில் முதல் நன்றி செலுத்தும் விழாவானது.
அதன்பிறகு 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் பல ஆங்கிலக் குடியேறிகள் தங்கள் மாகாணங்களில் நன்றியறிவு தினங்களை தனித்தனியாகக் கொண்டாடினர். அமெரிக்கா சுதந்திரம் பெற்றவுடன் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் 1789இல் நன்றி செலுத்தும் நாளை ஒரு தேசிய தினமாக அறிவித்தார். அதுவும் ஆண்டுதோறும் கொண்டாடப்
படவில்லை. இந்த நாளை அமெரிக்கா முழுவதும் தேசிய விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று எழுத்தாளர் சாரா ஜோசபா ஹேல் தொடர்ந்து வலியுறுத்தினார்.
1863இல் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது, அமைதி, வளம் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி கூறும் நாளாக நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையை 'நன்றி செலுத்தும் நாள்' என அதிபர் ஆபிரகாம் லிங்கன் அறிவித்தார். அன்றுமுதல் இன்று வரை அமெரிக்காவில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
20, 21 ஆம் நூற்றாண்டுகளில், நன்றி செலுத்தும் நாள் குடும்பப் பந்தங்களை வலுப்படுத்தும் சமூக விழாவாக மாறியது. இந்த நாளில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் சேர்ந்து உணவுகளை அருந்தி, கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த நாளில் நியூயார்க் நகரத்தில் பெரிய அளவில் பேரணி நடத்தப்படுகிறது. பெருவணிகர்களும் இந்த நாளைக் கொண்டாடும்விதமாக, வாடிக்கையாளர்களுக்கு 'பிளாக் பிரைடே சேல்' என்ற பெயரில் சிறப்புத் தள்ளுபடி விற்பனையையும் மேற்கொள்கின்றனர்' என்கிறார் பத்மபிரியா கார்த்திக்.
இந்த விழாக் கொண்டாட்டம் குறித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான டி.எஸ்.விநாயகத்திடம் கேட்டபோது:
'கனடாவில் வசிக்கும் எனது மகளைப் பார்க்கச் செல்லும்போது, சில முறை அமெரிக்காவுக்கும் சென்றுள்ளேன். நவம்பரில் நடைபெறும் இந்த விழா நம்மூரில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளைப் போல கொண்டாடப்படுகிறது.
நம்மூரில் தேர்த் திருவிழாக்களைப் போல களைகட்டியிருக்கும். டிசம்பரில் நடைபெறும் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னோட்டமாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது' என்கிறார் டி.எஸ்.விநாயகம்.
எஸ்.மதுனிகா (விர்ஜீனியா, அமெரிக்கா):
பொதுவாக, குழந்தைகள் நாம் சொல்வதைவிட நம்மைப் பார்த்துத்தான் கற்கின்றனர். தொழில்நுட்பத்தின் உச்சமாக இருக்கும் அமெரிக்காவில் வசித்தாலும் அங்கு நன்றி சொல்லும் விழா தொடர்ந்து நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.
பொதுமக்களுக்கு உதவும் காவல் துறை, தீயணைப்புத் துறையில் பணியாற்றுவோருக்கு சென்று விருந்து படைப்பதும், நன்றி சொல்வதும் மனதுக்கு மிகவும் நெகிழ்வாக உள்ளது. குழந்தைகளையும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதால் அவர்களின் வாடிக்கையாக இந்தப் பழக்கம் மாறுகிறது. இது அமெரிக்காவில் நீண்ட நெடிய பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகிறது.
வி.மயில்விழி (ஆசிரியை, பவானிசாகர்) :
இன்றைய தொழில்நுட்ப உலகில் நாம் மறந்துபோன எத்தனையோ விஷயங்களில் கடிதம் எழுதுவதும் ஒன்று. அதுவும் கடந்த 15 ஆண்டுகளில் கைப்பேசி இல்லாதவர்களே இல்லை எனும் நிலை வந்துவிட்டது. இதனால் பள்ளிகளில் கூட கடிதம் எழுதுதல் என்றால் என்ன? என மாணவர்கள் கேட்கும் நிலை உள்ளது. இத்தகைய நிலையில் தொழில்நுட்பத்தின் உச்சமாக விளங்கும் அமெரிக்காவில் நன்றி சொல்லும் விழாவுக்காகக் கடிதம் எழுதி கொடுத்து வருகின்றனர்.
இதனால் குழந்தைகளும் கடிதம் எழுதுவதைக் கற்றுக் கொள்கின்றனர். கடிதம் எழுதுவது என்பது ஒரு கலை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்திரா காந்திக்கு ஜவாஹர்லால் நேரு எழுதியது உள்பட பல்வேறு தலைவர்களின் கடிதங்கள் இன்றும் புகழ்பெற்று விளங்குகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் கொண்டாடப்படும் நன்றி கூறும் விழா மிகவும் சிறப்புக்குரியது.
ஆர்.வேல்முருகன், கே.நடராஜன், ஆரணி பி.ஜெயச்சந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.