ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெல்வதே லட்சியம்...

'ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெல்வதே லட்சியம்' என்கிறார் தடகளப் போட்டிகளில் சாதனைகளைப் படைத்துவரும் சென்னை அரும்பாக்கம் முகமது சதக் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 மாணவர் எஸ்.ரோகித்.
ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெல்வதே லட்சியம்...
Published on
Updated on
1 min read

தாம்பரம் மனோபாரதி

'ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெல்வதே லட்சியம்' என்கிறார் தடகளப் போட்டிகளில் சாதனைகளைப் படைத்துவரும் சென்னை அரும்பாக்கம் முகமது சதக் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 மாணவர் எஸ்.ரோகித்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில், தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான 66ஆவது குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் ஆறாயிரம் மாணவர்கள் பங்கு பெற்றனர். 19 வயது மாணவர் பிரிவில், தடை தாண்டும் போட்டியில் எஸ்.ரோகித், போட்டியின் தூரத்தை 14.07 விநாடிகள் கடந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். இதனால் ஹரியாணாவில் நவம்பர் 26 30 தேதிகளில் நடைபெற உள்ள தேசிய அளவிலான எஸ்.ஜி.எஃப்.ஐ. தடகளப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இந்தச் சாதனையைப் படைத்துள்ள மாணவர் ரோகித்திடம் பேசியபோது:

'அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரில் வசித்துவருகிறேன். எனது பெற்றோர் ஆட்டோ ஓட்டுநர் செல்வம் இல்லத்தரசி சாந்தி. நான்காம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரித்தது. முக்கியமாக, தடகளப் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தினேன்.

பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றேன். மண்டல, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் கவனம் செலுத்தினேன். பல்வேறு போட்டிகளில் தனிநபர் சாம்பியனாக வெற்றி பெற்றேன்.

புவனேசுவரத்தில் அக்டோபரில் நடைபெற்ற, 40ஆவது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 110 மீட்டர் தூரத்தை 13.84 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றேன். அடுத்ததாக, பள்ளிக் கல்வித் துறை நடத்திய போட்டிகளில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளேன்.

விளையாட்டுப் போட்டிகளில் சாதித்தாலும், படிப்பிலும் தீவிர கவனம் செலுத்திவருகிறேன். தடகளத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வெல்வதே எனது லட்சியமாகும்.

எனது விளையாட்டுப் பணிகளுக்கு பள்ளித் தாளாளர் ஷர்மிளா, தலைவர் எஸ்.எம்.முகம்மது யூசுப், பள்ளி இயக்குநர்கள் முபாராகா ஹுசேன், ஷாமனா அர்ஷத், பள்ளி முதல்வர் யாஷின் ரபீக், விளையாட்டு ஆசிரியர் பா.பிரபாகரன் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உறுதுணையாக இருக்கின்றனர்' என்கிறார் ரோகித்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com