ஆயிரம் குழந்தைகளின் பெற்றோர்!

ஆயிரம் குழந்தைகளின் பெற்றோர்!

அரக்கோணம் இச்சிபுத்தூர் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர் ஆதிராஜன்.
Published on

அரக்கோணம் இச்சிபுத்தூர் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர் ஆதிராஜன். சென்னை கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர். சிறந்த பாடகர், நாடக நடிகர். சாரல் கலைக்குழுவில் இணைந்து, தமிழகத்தில் மட்டுமன்றி நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி பாராட்டுதலைப் பெற்றவர். இவரது மனைவி கௌரி, சிறப்பாசிரியர் பயிற்சி பெற்றவர்.

பெற்றோரை இழந்து ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகள், மாற்றுத்திறன் குழந்தைகள் தங்கிப் படிப்பதற்கு வழியின்றி அவதிக்குள்ளாவதைக் கண்ட இத்தம்பதியர், இத்தகைய குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிட ஒரு காப்பகத்தை நிறுவ உறுதியேற்றனர்.

அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அறிவொளி இயக்கப் பணியாளர்களாக சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதிக்கு வந்த இத்தம்பதியர், ஒருமித்தக் கருத்துடைய நல்லோர் சிலருடன் இணைந்து கடந்த 2005-ஆம் ஆண்டு வாழப்பாடியில் தனியார் வாடகைக் கட்டடத்தில் கமலாலயம் என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தைத் தொடங்கினர். சேவையாற்றுவதற்காக வாழப்பாடியிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.

இக்காப்பகத்தில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 30 குழந்தைகளைச் சேர்த்து, கொடையுள்ளம் கொண்டவர்களை அணுகி, தேவையான உதவிகளைப் பெற்று, தரமான உணவு, உடை மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தியதோடு , அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அவர்களுக்குக் கல்வியையும் அளித்து வருகின்றனர்.

காப்பகத்தில் போதிய இடவசதி இல்லாததால், வாழப்பாடி பகுதியிலுள்ள ராம்கோ சிமெண்ட், அர்ஜுனா பால் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், சேவை சங்கங்கள், தொழிலதிபர்கள் மற்றும் கொடையாளர்களின் உதவியுடன் வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தில் நிலம் வாங்கி, 5 ஆண்டுகளுக்கு முன் அனைத்து வசதிகளுடன் புதிய காப்பகக் கட்டடத்தை அமைத்து, தொடர்ந்து சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர்.

இந்தக் காப்பகத்தில் தங்கிப் படித்து வரும் மாணவர்கள், காப்பக நிர்வாகிகளான ஆதிராஜன் மற்றும் அவரது மனைவி கௌரி ஆகியோரின் அன்பு அரவணைப்பால் நெகிழ்ந்து, இவர்களை 'அப்பா, அம்மா' என்றே அழைக்கின்றனர். எவ்வளவு வசதியிருந்தாலும் தனது ஓரிரு குழந்தைகளுக்கே, தேவையானவற்றைச் செய்து கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருப்பது எல்லோருக்கும் எளிதானதன்று.

குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டு, பாதுகாப்பாக வைத்திருந்தாலும், குழந்தைகளை முறையாக வளர்த்துப் படிக்க வைத்துக் கரையேற்றுவதற்குள் பெற்றோர் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.

ஆனால், ஆதிராஜனும் இவரது மனைவி கௌரியும், நல்லோர்களை அணுகி, நன்கொடைகள் மற்றும் நிதி திரட்டி, 20 ஆண்டுகளாக ஆண்டுதோறும் காப்பகக் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் முகம் சுழிக்காமல் செய்து கொடுத்து, ஆயிரம் குழந்தைகளின் பெற்றோர் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com