ரா.ரா.
இந்தியாவின் அறிவியல் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர்; ஓசோன் படலத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் கருவியைக் கண்டுபிடித்தவர்; ஓசோன் படலத்தின் ஆற்றலையும், அதன் முக்கியத்துவத்தையும் ஆராய்ந்தவர்களில் ஒருவர்; இந்தியாவில் பல்வேறு வானிலைக் கருவிகளை உற்பத்தி செய்வதற்கும், அளவீடு செய்வதற்கும் உதவியவர்; சூரிய சக்தி /காற்றாலை வடிவங்களைப் படிக்க அளவீட்டு உபரகணங்களைப் பயன்படுத்தியவர் எனப் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர், அன்னா மணி. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் துணை இயக்குநர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றவர். கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.
சென்னையில் படித்தவர். ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வருகைப் பேராசிரியராகவும் இருந்த இவர், 121 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். சூரிய சக்தி குறித்து இவர் எழுதிய இரு புத்தகங்கள் மிகவும் பிரபலம். இவரது சேவையைப் பாராட்டி தேசிய புக் டிரஸ்ட் புத்தகம் வெளியிட்டுள்ளது.
காந்தியின் சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட இவர் வாழ்நாள் முழுவதும் கதர் ஆடையே அணிந்து வந்தார். திருமணமே செய்துகொள்ளவில்லை. கடுமையாக 12-16 மணி நேரம் வரை உழைக்கும் குணம் கொண்டவர்.
ஐ.எம்.டியின் புனே தலைமையகத்தில் 1957-ஆம் ஆண்டு இவர் சேர்ந்தபோது, இந்தியாவின் வளிமண்டல அறிவியல் பெரும்பாலும் பேப்பரில்தான் இருந்தது. இவர் தான் அதனை துல்லியமாக்கினார். 1964 -ஆம் ஆண்டு இவரது மேற்பார்வையின் கீழ் ஐ.எம்.டி. இந்தியாவின் முதல் ஓசோன் சோண்ட் பலூன் ஏவப்பட்டது. இது கண்ணாடி மற்றும் டெஃப்ப்ளானால் ஆன நுட்பமான சிலிண்டர் ஆகும்.
இப்போது இவர் பற்றி "அன் கட் டைமண்ட்' என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. இது அவர் பெருமையைப் பேசுகிறது.
இவரது ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்ட கருவிகள் மற்றும் ஆராய்ச்சி இந்தியாவின் வானிலையை துல்லியமாகக் கணிக்கவும், வானிலை ஆய்வுத் துறையை மேம்படுத்தவும் உதவியது. இன்றைய வானிலை முன்னறிவுப்புகளைத் துல்லியமாகக் கூறுவதற்கு முன்னோடி
யாக இருந்த இவர் மறைந்துவிட்டாலும், வானிலை கதிர் வீச்சு மற்றும் சூரிய ஒளி சார்ந்த ஆராய்ச்சிகளில் என்றென்றும் இவர் பெயர் நிலைத்து நிற்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.